August 11, 2022

அரசியலமைப்புச் சட்டத்தின் தினக் கொண்டாட்டத்தின் பின்னணி!

ண்டு தோறும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம். ஜனநாயக தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம். 1949 நவம்பர் 26-ம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையை ஏற்று, நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்ட தினமென்பதால் இக்கொண்டாட்டம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுந்திர போராட்டம் மகாத்மா காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கமாகத் தீவிரமடைந்த பிறகு, 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனாலும், ஆகஸ்ட் 15 என்பது ஆங்கிலேயர்களின் முதல் தேர்வாக அமையவில்லை. இந்தத் தேதி தேர்வின் பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

1929 டிசம்பர் 29ல், லாகூரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு நேரு அழைப்பு விடுத்திருந்தார். இந்த மாநாட்டில் இந்திய தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்டு, முழு சுதந்திரத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.அன்றைய தினம், 1930 ஜனவரி 26ல் இந்தியா சுதந்திரம் பெறும் என காங்கிரஸ் தீர்மானித்தது. எனினும் ஆங்கிலேயர்கள் இதை தாமதித்து வந்ததால், 1947ல் சுதந்திரம் வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது, 1945ல் ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட நாடுகள், ஜப்பான் சரணடைய கெடு விதித்தது. இதன் விளைவாக ஜப்பான் சரண்டைந்தது. இதன் மூலம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

ஆகஸ்ட் 15 என்பது ஆங்கிலேயருக்கு இன்னொரு நாள் இல்லை. ஜப்பான் கடற்படை சரணடைந்த தினத்தின் இரண்டாம் ஆண்டில், ஆக்ஸ்ட் 15ல் இந்திய சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். ராமசந்திர குகா, தனது ‘இந்தியா ஆப்டர் காந்தி’ புத்தகத்தில் குறிப்பிட்டது போல,

“எனவே, தேசிய உணர்வுகளை விட, ஏகாபத்திய உணர்வை பிரதிபலித்த நாளில் சுதந்திரம் கிடைத்தது,” என்று குறிப்பிட்டார். முதலில் சுதந்திர தினம் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதி மறக்கப்படவில்லை. இது இந்திய வரலாற்றில் இன்னொரு முக்கிய தினமாக அமைந்தது.

19ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியர்கள் அரசியல் பங்களிப்பை கோரினர். முதல் உலகப்போரின் போது, பிரிட்டனுக்கு இந்தியா வழங்கிய உதவியை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம், இந்திய அரசுச் சட்டம் 1919 கொண்டு வந்தது. பெரிய மாகாணங்களில் இரட்டை அரசாங்கத்திற்கு இந்த சட்டம் வழி வகுத்தது. சுகாதாரம், கல்வி, விவசாயம், உள்ளூர் அரசு நிர்வாகம் ஆகிய துறைகள் இந்திய அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது. ராணுவம், வெளியுறவு உள்ளிட்ட துறைகள் வைஸ்ராய் கீழ் இருந்தன.

இந்த சட்டம் பத்தாண்டுகளுக்குப்பிறகு சிறப்பு கமிஷனால் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 1928ல் சைமன் கமிஷன் இந்தியா வருகை தந்தது. சைமன் கமிஷன் அரசியல் சாசன சீர்திருத்தங்களை ஆய்வு செய்து, மேலே சொன்ன சட்டத்தையும் ஆய்வு செய்தது.

1930ல் சைமன் கமிஷன் அறிக்கை வெளியானது. எனினும் அரசியல் சாசன முட்டுக்கட்டையால் இது இறுதியானது அல்ல என அறிவிக்கப்பட்டது. இதற்குத் தீர்வு காண, 1930, 1931 மற்றும் 1932 ல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்தியா சார்பிலும் பிரதிந்திகள் பங்கேற்றனர்.

இந்த மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் ஆங்கிலேய அரசு, தனது வரைவை தயாரித்தது. ஆங்கிலேயர்கள் மற்றும் இந்தியர்கள் கொண்ட குழு, இந்த அறிக்கைகளை பரிசீலித்து, அவற்றின் மீதான அறிக்கையை பிரிட்டன் நாடாளுமன்றத்திடன் சமர்பித்தது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சாசனம் வரைவுக் குழு.

1946 ஆக்ஸ்ட் 28ம் தேதி, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வரைவுக் குழு தலைவராக டாக்டர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை, பல நாள்கள் அமர்ந்து விவாதங்களும், ஆலோசனைகளும் நடத்தி வடித்தெடுக்கப்பட்ட அரசியல் சிற்பம் தான் நம் அரசியல் சாசனம்.டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து ஆந்திராவை சேர்ந்த அறிஞர் பி.என்.ராவ் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டங்களை எல்லாம் அறிந்து கொண்டு அதை நம் நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து, இந்திய அரசியல் சாசனம் எழுத பெரும் பங்காற்றினார்!

அந்த அரசியல் சாசன நிர்ணய சபை கூட்டம், இரண்டு ஆண்டு காலம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்துகளும் கோரப்பட்டன. விவாதங்கள், திருத்தங்களுக்குப்பின், 1950 ஜனவரி 24ம் தேதி, இந்திய அரசியல் சாசன இறுதி வடிவின் மீது, 308 உறுப்பினர்கள் அதன், இந்தி மற்றும் ஆங்கில வடிவில் கையெழுத்திட்டனர்.1950 ஜனவரி 26ம் தேதி, 22 பகுதிகளில், 12 ஷெட்யூல்கள், 97 திருத்தங்களுடன், 448 ஷரத்துகளை கொண்ட உலகின் நீளமான அரசியல் சாசன ஆவணமான இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.