April 2, 2023

ஊர்ப்பெயர்கள் புதிதாக எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை?

ர்ப்பெயர்களைத் தமிழ் வழக்காற்றின்படி ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் என்று பல நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டரசின் ஆணை அதனை நிறைவேற்றப் போகிறது. “ஊர்ப்பெயர்தானே… எப்படி இருந்தால் என்ன ?” என்பவர்களும் இருப்பார்கள். அவர்கட்குச் சிலவற்றை விளங்க வைத்தால்தான் உறக்கத்திலிருந்து விழிப்பர். ஊர்ப்பெயர்கள் இவ்வாறு எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை ? விரிவாகப் பார்க்கலாம்.


*
1. ஓர் ஊர்ப்பெயரானது அந்நிலத்தின் அடையாளம். புளியம்பட்டி என்று ஓர் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றால் அங்கே புளியமரங்கள் மிக்கிருந்தன என்று பொருள். அந்நிலம் புளிய மரங்கள் செழித்து வளரத்தக்க வளத்தோடு தன்மையோடு இருக்கிறது என்று ருள். புளி என்ற சொல் பட்டி என்ற சொல்லோடு சேர்கையில் இடையில் அம் என்ற சாரியை தோன்றும் என்னும் மொழி இலக்கணத்தையும் அவ்வூர்ப்பெயரானது தாங்கிப் பிடிக்கிறது.
*
2. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தன்மை உண்டு. உயரமான நில அமைப்பு இருந்தால் அது மேட்டுப்பட்டியாக இருக்கும். தாழ்வான நிலத்தில் இருப்பின் அது பள்ளத்தூர். குளம், குட்டை, ஆறு, ஏரி, ஓடை, பாக்கம் என்று முடியும் பெயர்கள் நீர்நிலைக்கரை ஊர்கள். அவ்விடத்தின் இயல்பினைப் பற்றிய ஒற்றைச் சொல் விளக்கமாகத் திகழ்வது ஊர்ப்பெயர்தான்.
*
3. பண்டைத் தமிழகத்தில் ஒருவர் ஊர்ப்பெயரால்தான் அறியப்பட்டார். இன்னாரின் மகன், இந்தக் குடும்பத்தவன் என்பவை முதல்நிலையாக அறியப்படவில்லை. இன்ன ஊரன் என்பதே அன்றைய அடையாளம். பெயரின் முன்னெழுத்தாகத் தந்தையின் பெயரைச் சேர்ப்பது ஆங்கில வழக்கு. பெயரின் முன்னோ பின்னோ தம் ஊர்ப்பெயரைச் சேர்த்துக்கொள்வதுதான் தமிழ் வழக்கு. சங்கப் புலவர் பெயர்கள் யாவும் ஊர்ப்பெயர்களோடு இருப்பதைப் பார்க்கலாம். ஐயூர் முடவனார், ஒக்கூர் மாசாத்தனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், கருவூர்க்கிழார் என எண்ணற்ற பெயர்களைக் காணலாம். “உமக்கு ஏன் தலைமுடி நரைக்கவில்லை ?” என்று பிசிராந்தையாரைப் பார்த்துக் கேட்ட கேள்விக்கு “என் ஊர் அப்படிப்பட்ட ஊர்” என்பதுதான் அவருடைய விளக்கம். “ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” என்று முடிவது அவருடைய பாடல். பிசிர் என்பதும் ஊர்ப்பெயர்தான்.
*
4. ஓரிடத்தின் வாழ்நிலையானது வரலாற்றில் எப்படி இருந்தது என்பதற்குச் சான்று. சரவணபெலகுள என்னும் சமணப்பேரூர்க்கு நிகராக இங்கே விளங்கிய ஊர் விஜயமங்கலம். அங்கேதான் பெருங்கதை அரங்கேற்றப்பட்டது. பாண்டியப் பேரரசு மூன்று தமிழ்ச்சங்கங்களை நிறுவிப் பேணியதுதான் நமக்குத் தெரியும். விஜயமங்கலத்தில் சமணப்பெருமக்கள் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி நடத்தினர். அதன் எச்சமாக அவ்வூரின் அருகில் செங்கப்பள்ளி என்றோர் ஊர் இருக்கிறது. அது தமிழ்ச் ‘சங்கப்பள்ளி’யாகத்தான் இருக்க வேண்டும். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமை கூறும் ஒரே தடயமாக அவ்வூர்ப்பெயரே இன்றும் மிச்சமிருக்கிறது.
*
5. ஓரிடத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தலைப்பாக விளங்குவது அவ்வூரின் பெயரே. கொல்லர் பட்டறை பெருகி விளங்கிய ஊர் கொல்லம்பட்டியாக இருக்கும். சிவவாக்கியர் என்னும் சித்தர் வாழ்ந்த மலை சிவன்மலையாகும். அறந்தாங்கி என்ற பெயர் நிலைக்க வேண்டுமென்றால் அங்கே எத்தகைய அறச்செயல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் ? தங்கச்சி மடம், அக்கா மடம் என்னும் பெயர்களின் பின்னே அழகிய வரலாறு உண்டு. ஒவ்வோர் ஊரும் தோண்டா அகழ்விடமாகக் கருதத்தக்கது என்பதற்கு மாற்றுக்கருத்து ஏது ?
*
6. வரலாற்றுக் காலத்தில் ஓர் ஊர்ப்பெயர் தமிழில் ஒருவாறு தோன்றுகிறது. அப்பெயரானது காலப்போக்கில் சிறிது சிறிதாகத் திரிந்து அதன் தோற்றச் செந்தமிழ் வடிவத்தை இழந்து கொச்சை மிச்சமாகத்தான் உள்ளது. சிற்றோடை, ஈரோடை, சிற்றாறு, பூவானி (அல்லது வவ்வானி) தண்செய்யூர், பூந்தண்மலி என இருக்கும் ஊர்ப்பெயர்கள் காலப்போக்கில் என்னவாயின ? சித்தோடு, ஈரோடு, சித்தார், பவானி, தஞ்சாவூர், பூந்தமல்லி என்றுதான் மீதமிருக்கின்றன. அவற்றின் திருத்தமான தமிழ் வடிவத்தை நோக்கி நாம் செல்லாமல் இருப்பதும் பெருங்குற்றம். அந்நிலையில் ஈரோட் (Erode), டாஞ்சூர் (Tanjore) என்று ஆங்கிலத்தில் மேலும் வெட்டுவதும் குற்றுவதும் எவ்வகையிலும் ஏற்கத்தக்கவையல்ல.
*
7. கோவன்புத்தூர் என்ற பெயரே கோயம்புத்தூர் ஆனது என்பர் ஆய்வாளர்கள். கோவில், கோயில் என்னும் இருவகைப் பயன்பாடு எப்படி வழக்கானதோ அதற்கு நிகரான இன்னொரு வழக்குத்தான் கோவன், கோயன் என்பது. கோ என்றால் தலைவன் அல்லது இறைவன். சேரர்கள் கோக்கள். சேரனின் தம்பிதானே இளங்கோ(வடிகள்) ? முற்காலச் சேரர் அமைத்துத் தந்த புதிய ஊர் (புத்தூர்) கோவன்புத்தூர். ன் என்ற மெய்யும் ம் என்ற மெய்யும் ஒன்றுக்கொன்று மாற்றீடாகும். நலன் நலம், வளம் வளன், களன் களம். அவ்வழியே கோவன்புத்தூர் => கோயன்புத்தூர் => கோயம்புத்தூர். இதுதான் இப்பெயர் வந்தடைந்த மொழித்தடம். இவ்வூர்ப் பெயர் மக்களின் பேச்சு வழக்கில் “கோயமுத்தூர்” என்று வாழ்கிறது. புத்தூர் முத்தூர் ஆகிவிட்டது. இதனை ஆங்கிலத்தில் Coimbatore என்று எழுதுவது மேலும் வழியடைக்கிறது. ஆங்கிலத்தின் வழியே தமிழை அறிந்து எழுதப்போகும் வருங்காலத் தலைமுறை கோவன் புத்தூரினைக் ‘கோய்ம்பட்டூர்’ என்று எழுதும் பேரிடர் உண்டு. அதனால் கோயம்புத்தூரைத் தமிழ் ஒலிப்பின் வழியே ஆங்கிலத்திலும் வழங்குவது மிகச்சிறந்த தீர்வு. கீழுள்ள படத்தில் இருப்பூர்தி நிலையப் பலகையில் கோயம்பத்தூர் என்றிருக்கிறது. ஊர்ப்பெயரைத் தவறாக எழுதினால் ஏற்க இயலுமா ? தந்தை பெயரைத் தவறாக எழுதினால் ஏற்போமா ?
*
8. ஆங்கிலத்தில் நம் ஊர்ப்பெயரை வழங்க வேண்டும் என்றால் அதனை மொழிபெயர்த்து ஆங்கிலேயர்கள் வழங்கிக்கொள்ளட்டும். வண்ணாரப்பேட்டை என்பதனை வாசர்மென்பேட்டை என்று வழங்கியது அம்மொழிப்படியான பொருள்கோள் முறை. புதுநகரம் என்பதனை நியூடவுன் என்று ஆங்கிலேயர் வழங்கலாம். நாம் எதற்கு அவ்வாறே வழங்க வேண்டும் ? தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் ஓர் ஊர்ப்பெயரை எழுதிக் காட்டுவதற்குத் தமிழ் வழக்கையே ஒட்டியிருக்க வேண்டும். அக்காலத்தில் ஆங்கிலேயர்க்குத் தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் ஓர் ஊர்ப்பெயரைச் செவிவழியாகக் கேட்டு ஆங்கிலத்தில் ஓரளவு ஒலிப்பு பொருந்திப்போகும்படியாக எழுதினார்கள். அவ்வாறு எழுதப்பட்டவைதாம் ஆங்கிலப் பெயர்கள். அவற்றை முற்றாகத் துறக்க வேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
*
9. தமிழ்ச் சொற்கள் பல அழிந்துவிட்டன, வழக்கொழிந்து போயின, மறக்கப்பட்டுவிட்டன என்னும் கவலைகள் நமக்குத் தேவையில்லை. தமிழ்நாட்டரசின் உள்ளாட்சி அமைச்சகத்தில் ஏறத்தாழ முப்பதாயிரம் முதல் எழுபதாயிரம் வரையிலான ஊர்ப்பெயர்களின் ஆவணம் இருக்கிறது. அந்தப் பெயர் ஒவ்வொன்றிலும் வழக்காறின்றி ஒழிந்துபோய்விட்ட ஒரு தமிழ்ச் சொல் இருக்கிறது. செங்கழுநீர்ப்பட்டு என்பது ஓர் ஊர்ப்பெயர். பட்டு என்பது சிற்றூரைக் குறிக்கும் பெயர். கழுநீர் என்பது என்ன ? கழுவியபின் தேங்கும் நீரா ? இல்லை. கழுநீர் என்பது ஆம்பல் மலரைக் குறிக்கும் அருஞ்சொல். செங்கழுநீர் என்பது செவ்வாம்பல் மலர். செவ்வாம்பல் மலர்கள் நிறைந்து பூத்திருக்கும் நீர்நிலைகள் விளங்கிய சிற்றூர்தான் செங்கழுநீர்ப்பட்டு. இப்போது செங்கல்பட்டு. அதனால் ஊர்ப்பெயர்கள் அவற்றின் தொன்மையான தமிழ் வழக்காற்றின்படி விளங்குவது தமிழைப் புதுப்பிப்பது ஆகும். மறைந்து போய்விட்ட ஒவ்வொரு சொல்லையும் அகழ்ந்தெடுப்பதாகும்.
*
10. முதலில் எல்லா ஊர்ப்பெயர்களையும் முறையான தமிழ்ச்சொற்களாகவே தமிழில் எழுதவேண்டும். அவ்வாறே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுதவேண்டும். அந்தப் போக்கு நிலைத்த பிறகு ஒவ்வோர் ஊர்ப்பெயரையும் வன்மையான மொழியாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்பெயர்களின் திருத்தமான, தொன்மையான தமிழ்வடிவத்தை அறிவிக்க வேண்டும். பேரறிஞர் குழுவொன்று இத்தகைய செய்கையில் ஈடுபடலாம். அதனை ஈடேற்ற ஒரு சொல்லைத் தேடி ஓர் ஊருக்குச் சென்றும் ஆராய நேரலாம். இன்றில்லா விட்டாலும் எல்லாம் கைகூடிவரும் நாளில் அத்தகைய ஆய்வினைச் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
*
கவிஞர் மகுடேசுவரன்