October 26, 2021

ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை தமிழகத்தில் விநியோகம் செய்யவிடாமல் முடக்கும் முயற்சி

உலக நாடுகளை முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் என்பது இதுநாள்வரை குணப் படுத்த மருந்தில்லாத நோயாகவே இருக்கிறது. பல தரப்பட்ட மருத்துவர்கள் பழைய ஆன்டி வைரல் மருந்துகளை மேம்படுத்தி புதிதாக ஒன்றை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். சிலர் இன்னும் காலப்போக்கில் இந்த வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த சில தொழில்நுட்பங் கள் மருத்துவ அறிவியல் இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எய்ட்ஸ்ஸை விட இந்த வைரஸ் தொற்றுக்கு ஏன் இந்த பதட்டம் என்றால் இது வேகமாக பரவும் முறை தான். இந்நிலையில் இன்று நம் தமிழகத்தில் அனைவரும் அறிந்த கொரோனா எதிர்ப்பு மருந்து என்றால் அது “கபசுர குடிநீர்” மட்டுமே. இந்த ரகசியம் உலக சுகாதார அமைப்பிற்கு தெரியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு இன்றுடன் மிகச்சரியாக ஒரு மாதம் நிறைவடைகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் குறைவில்லை.

இது ஒரு புறம் இருக்க, சித்த மருத்துவர்கள் எதன் அடிப்படையில் இந்த மருந்துகளை அவர்கள் தேர்வு செய்தனர்? என்ற கேள்வி நம் அனைவரின் மனதில் உதிக்கும் ஒன்று. இது போன்ற பல கேள்விகளின் தொகுப்பு தான் பின் வரும் கேள்விகள். சித்தர் நூலில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் பதில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பின் வரும் கேள்விகள்

1. சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் COVID-19 என்பது என்ன?

2. COVID-19-ல் எந்த தோஷங்களின் மிகுதி அல்லது குறைவு உள்ளது?

3. சித்த மருத்துவத்தில் உள்ள நூல்களில் குறிப்பிட்ட நோய்களில் எந்த நோய்களுடன் COVID-19 ஒத்து போகின்றதது? அவை எவை?

4. அவ்வாறு ஏதாவது ஒரு நோயின் குறுகுணங்களுடன் ஒத்து போகுமானால், அதற்கு சிகிச்சை அளிக்க சொல்லப்பட்ட சித்தர் பாடல்கள் எங்கே?

5. கபசுர குடிநீர் எந்த சித்தர் நூலில் உள்ளது, அதன் மூலப்பாடல் என்ன? அதை வெளியிடாமல் இருப்பதன் காரணம் என்ன?

6. 1998 ஆம் ஆண்டு வெளிவந்த சித்த மருத்துவ திரட்டு என்று நூலில் குறிப்பிட்டுள்ள கபசுர குடிநீரில் சந்திரோதயம் மாத்திரை மற்றும் கோரோசனை மாத்திரை கலந்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பு உள்ளது, தற்போது இது போன்று எதுவும் தராமல் வெறும் குடிநீர் மட்டுமே தந்தால் பலன் தருமா?

7. கபசுர குடிநீர் எந்த தோஷங்களை குறைக்கும், அதிகரிக்கும்?

8. கபசுர குடிநீர் என்ற மருந்தின் சுவை, குணம், வீரியம் என்ன? இவைகள் எப்படி COVID-19 என்ற வியாதிக்கு எதிராக செயல்படும்?

9. சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய சித்தர் குறிப்புகள் எந்த நூலில் எந்த சித்தர் பாடல் சொல்கிறது?

10. சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த தோஷங்களின் மூலமாக செயல்படும்?

11.நோய் எதிர்ப்பு சக்தி என்ற கருத்தை சித்தர்கள் எங்கும் கூற வில்லை என்றால், அப்படிப் பட்ட ஒரு கருத்து அவர்களிடம் அவர்களின் நூலில் இல்லை என்றால் எப்படி நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மட்டும் அவர்கள் நூலில் இடம் பெற வாய்ப்பு உள்ளது?

12. கபசுர குடிநீர் எவ்வளவு நாள் எந்த அளவில் எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கும்?

13. அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் அதை எவ்வாறு உணர அல்லது அளவீடு செய்வது எப்படி?

14. கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றால் எந்த தோஷங்களின் மாறுபாட்டை இது ஏற்படுத்தும்?

15.COVID-19 ஒரு தொற்று நோய், தொற்று நோய் பற்றிய குறிப்புகள் அதாவது எவ்வாறு உருவாகின்றது, எவ்வாறு பரவுகினறது, அவை எந்த நோய்கள் அதற்கு சிகிச்சை தத்துவங்கள் பற்றி எந்த சித்த மருத்துவ நூலில் உள்ளது, அந்த சித்தரின் பாடல்கள் எங்கே?

16. தொற்று நோய் பற்றிய கருத்து சித்த மருத்துவ நூலில் இல்லை என்றால், சித்தர்கள் எப்படி இல்லாத தொற்று நோய்க்கான மருந்துகள் பற்றி சொல்ல வாய்ப்பு உள்ளது?

இவை எல்லாம் அடிப்படை கேள்விகள், மேலும் கபசுர குடிநீர் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையில் இது உஷ்ணம் என்றும் அதனால் கபத்தை குறைக்கும் என்று கூறியிருந்தது, ஆனால் இன்று மூத்த மருத்துவர் சிவராமன் எழுதிய கட்டுரையில் பித்தத்தை சீராக்கும் என்று எழுதி உள்ளார். என்ன ஒரு அபத்தமான கருத்து இது. உஷ்ண வீரியம் உள்ள ஒரு மருந்து உஷ்ண என்ற குணம் உள்ள பித்தத்தை சீராக்கும் என்று எந்த சித்தர் நூலில் உள்ளது? எப்படி இது சாத்தியமாகும்? கபசுர குடிநீர் முதலில் கபம் அதிகரித்து சுரம் வந்த நிலையில் இதை கொடுக்கலாம் என்றனர் இன்றோ அவர் பித்தத்தை சீராக்கும் என்கிறார். ஏன் இந்த குழப்பம்?

எந்த ஒரு தெளிவான கருத்தையும் முன் வைக்காமல், எந்த ஒரு தெளிவான விளக்கமும் தராமல், சித்த மருந்து மட்டுமே அனைத்து மருத்துவர்களும் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது எவ்வாறு சரி? மேலும் கேரளா, கோவா, குஜராத், டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயன் படுத்தி நல்ல பயன் தந்த ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை தமிழகத்தில் விநியோகம் செய்யவிடாமல் முடக்கும் முயற்சிகள் ஏன்?

அகஸ்தீஸ்வரன்