பட்ஜெட் 2022: ஏன் இந்தத் தொடர்ச்சி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பட்ஜெட் 2022: ஏன் இந்தத் தொடர்ச்சி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

த்திய நிதிநிலை அறிக்கை 2022-23 ஆண்டில் எவ்விதமான மாற்றமும் இன்றி கடந்தாண்டின் தொடர்ச்சியாக இருப்பதன் காரணம் என்ன என்பது பலரது கேள்வி. காரணங்கள் பலவாறாக இருக்கலாம். குறிப்பாக தொடர்ச்சி என்பது அரசின் கொள்கை தொடர்புடையது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பதே முக்கிய குறிக்கோள். ’அச்சே தின்’ என்பதை உண்மையாக்க வேண்டுமென்றால் நிலைத்த வளர்ச்சி விகிதம் தேவை. அதை உறுதி செய்ய வேண்டுமென்றால் நிலைத்த வளர்ச்சி அவசியம். நிலைத்த வளர்ச்சிக்கு நிலைத்தக் கொள்கைகளும், நடைமுறைகளும் தேவை. இதையைத்தான் கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு 2020 ஆம் ஆண்டில் திடீரென தோன்றிய கொரோனா நோய்த்தொற்று பெரும் அதிச்சியாக அமைந்தது. ஆனாலும் பொது முடக்கம் இருந்த காலத்திலேயே பல சீர்திருத்தங்களை அறிவித்து எல்லோரையும் அதிர வைத்தது அரசு. ‘ஆத்ம நிர்பார் பாரத்’ எனும் தற்சார்புக்கொள்கையை முன்னெடுக்க அரசு உறுதி பூண்டது. இதனையொட்டியே உள்நாட்டிலேயே இரண்டு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதை பரவலாக மக்களிடையே கொண்டுச் சேர்த்தது. குறுகிய காலத்தில் தடுப்பூசி உருவாக்கப்பட்டு கொரோனா உருவாகிய இரண்டாண்டுகாலத்திற்குள் ஏறக்குறைய இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது வியப்பானதாகும். இதற்கு அரசின் உறுதியான நடவடிக்கைகளே காரணம் என்றால் மிகையில்லை.

அது மட்டுமின்றி பொருளாதாரம் மீண்டு எழுந்து நிதிநிலை அறிக்கையில் 9% ற்கும் மேலாக வளர்ச்சி அடையப்பெற்றது அடுத்த வியப்பாகும். அடுத்து வரவுள்ள நிதியாண்டிலும் 9.27% வளர்ச்சியை அரசு ஏற்படுத்தவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளத இந்த நிலையில் அரசின் இலக்கு உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதிலும், பின் தங்கிய மலையகப் பகுதிகளை முன்னேற்றுவதிலும் கவனம் குவிக்கிறது. கங்கைக்கரையோரமாக 2500 கிலோமீட்டர் நீளத்திற்கும், 10 கிலோமீட்டர் அகலத்திற்கும் இயற்கை வேளாண்மையை நடைமுறைப்படுத்த திட்டம் வகுத்துள்ளது. அதே போல பர்வதமாலா எனும் திட்டம் மூலம் வடக்கு-வடகிழக்கு மலையகப்பகுதிகளை வளர்ச்சி அடையச் செய்யும் முயற்சியையும் மேற்கொள்ளவுள்ளது. இது தவிர சுமார் 3 இலட்சம் கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வங்கிக் கணக்குகளில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. கால நிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்க நினைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசு ’க்ரீன் பாண்ட்ஸ்’எனும் பசுமைப் பத்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. கால நிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த அரசுக்கு சுமார் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் தேவை என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காகவே பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு அந்த வருவாய் மூலம் கதிரொளி திட்டங்கள், மின்சார பேட்டரிகள் போன்றவற்றின் உற்பத்திக்கு செலவழிக்கப்படலாம். இன்றும் கூட இப்புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகளும், ஆய்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தூய்மையான ஹைட்ரஜன் திட்டத்திற்கும் கூட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்கிற ஒன்றில்லை. இதை உருவாக்க பெரும் செலவு பிடிக்கும்; எனவே பசுமைப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.

அரசு நாட்டின் ஒருபுறம் மட்டுமே வளர்ச்சிப் பெறக்கூடிய வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாது. அனைத்து மாநிலங்களும் சமமான, நியாயமான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்றால் அனைத்து திட்டங்களும் பரவலாக சென்றடைய வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் குறைந்து வரும் நிலத்தடி நீர் நிலவரத்தை மேம்படுத்த நதிகளை இணைக்கும் திட்டம் தீட்டப்பட்டது. இதுநாள் வரை மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அத்திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. இப்போது அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் பெண்ணாறு-காவிரி இணைப்பு என்பதை மாநில அரசே மேற்கொள்ளலாம். இதற்கான செலவை மத்திய அரசு வழங்கும். ஆனால் கோதாவரி-பெண்ணாறு திட்டத்தை நிறைவேற்ற ஆந்திர அரசு ஒத்துழைக்க வேண்டும். இந்திய நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு சுமார் 6 இலட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பீடு 10 ஆண்டுக்காலத்திற்கு முந்தையது. இப்போது எவ்வளவு செலவாகும் என்பது தெரியவில்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் ஏமாற்றம் தரும் விஷயங்களாக வருமான வரிக்கான நிலைத்தக்கழிவு உயர்த்தப்படும் எனும் எதிர்ப்பார்ப்பாகும், இரண்டாண்டுகள் மத்திய அரசின் வருவாய் குறைந்த நிலையில் எந்த வரியையும் மாற்றியமைக்கும் நிலையில் அரசு இல்லை. எனவே அதைச் செய்யாது எனும் வாதமே இறுதியில் வென்றுள்ளது. இந்தியாவில் வருமான வரியின் கீழ் ஏராளமானவர்கள் கொண்டு வரப்பட வேண்டும்; இம்முறை அதை நோக்கிய நடவடிக்கை ஏதுமில்லை. மேலும் வருமான இடைவெளி பெருகி வரும் சூழலில் செல்வந்தர்கள் மீதான அதிக வரி விதிப்பும் இல்லை. சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய சரிபாதியாக உள்ள குத்தகை விவசாயிகள், விவசாயக் கூலிகள் ஆகியோரின் நலன்களுக்காக ஏதும் பிரத்யேகமாக இல்லை.

மாநில அரசுகள் பத்திரப்பதிவுத்துறையில் இழைக்கும் கோளறுபடிகளிலும், முறைகேடுகளிலும் தங்களது சொந்த வருவாயைக் கடுமையாக இழக்கின்றன. எனவே நாடு முழுதும் ஒரே பத்திரப்பதிவு நடைமுறையை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மாநில அரசுகளின் உரிமையில் இந்த எண்ணம் தலையிடுவதாக தமிழக முதல்வர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். ஆயினும் மத்திய அரசு இத்திட்டத்தை எப்படி நிறைவேற்றும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

கல்வி, அனைவருக்குமான வீடு, குடிநீர் திட்டம் போன்றவையும் அதிக நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்டகால வளர்ச்சியை அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதிநிலை அறிக்கைகள் அரசின் கொள்கை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம்.

ரமேஷ் பாபு

error: Content is protected !!