October 21, 2021

மக்களவை தேர்தலில் 4 டூ 5 % வாக்குகளை சமூக வலைதளங்கள் மூலம் மாற்றி விழச் செய்யலாம்!

நம் நாட்டில் பொதுத் தேர்தல்களை வெளிப்படையாக, அமைதியாக நடத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ள, பல்வேறு நாடு கள் ஆர்வமாக உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப் படி, ஐ.நா. சபை சார்பில், இந்தியா வில் வெளிப்படையான தேர்தலுக்கு தகவல் தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று முன்னரே தகவல் வெளியானது நினைவிருக்கும். இதனிடையே வர இருக்கும் மக்களவை தேர்தலில் 4 முதல் 5 சதவீத வாக்குகளை சமூக வலைதளங்கள் இடம் மாற்றி விழச் செய்யலாம் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அலுவலர் டி.வி. மோகன்தாஸ் பைய் தெரிவித்துள்ளார்.

இன்னும் நான்கைந்து வாரங்களில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை யொட்டி அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.1000 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கலாம் என்றும்  தாஸ் பைய் கூறியுள்ளார்.

இது குறித்து மோகன்தாஸ் பைய் செய்தியாளர்களிடம் விவரித்த போது, “இளைஞர்கள் குறிப்பாக தேர்தலில் முதல் முறை வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலான இளைஞர்கள் டிவி பார்ப்பதில்லை, செய்தி தாள்,புத்தகம் படிப்பதில்லை. அவர்கள் அதிகம் யூ டியூப் வீடியோக்களை பார்க்கிறார்கள்.

40 முதல் 50 சதவீத இளம் வாக்காளர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தான் முதல் கட்ட தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வரும் தகவல்களின் அடிப்படை யில் இளைஞர்களின் தேர்தல் குறித்த நிலைப்பாடு அமைய வாய்ப்புகள் அதிகம். எனவே எனது கணிப்பின்படி மக்களவை தேர்தலில் பதிவாகும் 4 முதல் 5 சதவீதம் வாக்குகளில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அரசியல் கட்சிகள் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்க அவர்களின் உணர்வுகள், விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகளை அறிய வேண்டும். அவர்களுக்கு சமூக வலைதளம் மூலம் வளமையான எதிர் காலம் குறித்த நேர்மறையான தகவல்களை அனுப்ப வேண்டும்.

பல இளைஞர்கள் உலகளவில் இந்தியாவின் மதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கவும் பலர் ஆசைப்படுகிறார்கள். எனவே வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவிடலாம்.

இன்றைய சூழ்நிலையில் நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவ்வாறு இல்லை. ராகுல் காந்தி 1990ம் ஆண்டு களின் மொழியில் பேசுவது தான் இதற்கு காரணம்” என்று மோகன்தாஸ் பைய் கணித்துள்ளார்.