October 19, 2021

அப்படி என்ன செய்தார் கருணாநிதி..? – ப. திருமலை

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். இந்த தேசத்தின் முக்கிய, தவிர்க்கமுடியாத தலைவர்களில் ஒருவர் அவர். அவரது சினிமா வசனங்களுக்கு இணையாக அவரது திரைப்படம் சாராத எழுத்துகள் என்ன வசப்படுத்தியது உண்டு. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு விலகியிருந்த நேரம். 1973 ஆம் ஆண்டு முரசொலி பொங்கல் மலர். அதில் கலைஞர் ஒரு நீண்ட கவிதை எழுதியிருந்தார். “நெற்கொண்டு பாலுடன் பொங்கிய சர்க்கரை அடிசிலைத் / தலைவாழை இலை மீது தாய்மார்கள் இட்டிடக் / கலகலலெனக் சிரிப்புடன் கையிலொரு கவளம் / எடுத்து நுனிநாவிலே இட்டுச் சுவை மிகுந்திடத் / தொடுத்து மீண்டும் அடுத்த கவளம் இடுங்கால் / பல் மீது கல்லொன்று பட்டென்று உராய்ந்திடச் / சொல்மணம் தவறியே சுருங்கிய முகத்துடன் / பொங்கலின் சுவை மீது குறை காண்பார் அன்றோ? / இங்கு நம் நாட்டிலும் இன்றுள்ள நிலை என்ன?… “அரிசியிடைக் கல்போல வரிசைபெறு நம்மையிடைச் / சிறுசலனம் ஏற்படுத்தக் கல்முறை கையாளுகிறார் / என அழகாக எழுதியிருந்தார். வசீகரித்தன அந்த வார்த்தைகள். இந்த மனுஷனைப் பார்க்கணும் மனதுக்குள் ஆசை எட்டிப்பார்த்தது.

அடுத்த சில ஆண்டுகளில் நான் இதழியல் துறைக்கு வந்தபிறகு அவர் பேசும் கூட்டங்களில் செய்தி சேகரிக்கும் வாய்ப்பும், தொடர்ந்து அவர் நேர்காணல்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டியது. அவரது நேர்காணல்களுக்குச் சென்று கேள்வி கேட்பததென்றால் தேர்வுக்கு தயாராகி செல்வது போலச் செல்லவேண்டும். நம் கேள்விகள் மூலமே நம்மை மடக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு.பின்னர், நிறைய தடவை அவரை நேர்காணல் செய்திருக்கிறேன். சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு என்னை நினைவில் வைத்துக் கொண்டார். பலர் பணத்துடன் தொல்காப்பிய பூங்கா நூல் வாங்கக் காத்திருந்தபோது, என்னை அழைத்து தொல்காப்பிய பூங்கா நூல் ஒன்றை கையெழுத்திட்டுத் தந்தார். சில வேளைகளில் ஆஃப் த ரிக்கார்டாக அவர் சொல்லும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அவரது அரசியல் குறித்து நான் பேசத் தலைப்படவில்லை. அது அரசியல். மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவர் ஏதாவது செய்திருக்கிறாரா..? என்ற கேள்வியை எழுப்புகிறவர்கள் இருக்கிறார்கள்.

அவர் முதல்வராக இருந்தபோது கம்பம் பகுதியில் உப்புத்தரிசு என்ற இடத்தில் கூட்டாக குழிகளுக்குள் நடக்கும் விபசாரம் குறித்து ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தேன். அதில் காவல்துறையின் “ஒத்துழைப்பையும்” குறிப்பிட்டிருந்தேன். அடுத்த சில நாட்களில் அந்த கட்டுரைக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. “அந்த இடத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சம்பந்தப்பட்ட இடம் பேருந்து விரிவாக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும்” என விளக்கமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நான் அந்த இடம் சென்று பார்த்தபோது குழிகள் மூடப்பட்டு சமதளப்படுத்தப்பட்டிருந்தது.

ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, “செம்மொழிநாயகர் பரிதிமாற் கலைஞருக்கு அவர் பிறந்த மதுரை விளாச்சேரியில் நினைவில்லம் அமைக்கவேண்டும்” என மனிதத்தேனீ சொக்கலிங்கம் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, “அப்படியொரு அடையாளம் அங்கு இல்லை” எனத் தெரிவித்துவிட்டனர். கலைஞர் முதல்வரான பிறகு இது தொடர்பாக நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கட்டுரையின் தலைப்பு “தமிழ் தெருவில் நிற்கிறது”. அதாவது, விளாச்சேரி பேருந்து நிறுத்தத்துக்கு மட்டுமே பரிதிமாற்கலைஞர் பெயர் உள்ளது. தமிழை இப்படி தெருவில் நிறுத்தலாமா? என வினா எழுப்பியதோடு, பரிதிமாற்கலைஞர் வீட்டினை நினைவில்லம் ஆக்கவேண்டும் என்றும் அவர் நினைவு தபால்தலை வெளியிடவேண்டும் என்றும் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவேண்டும் என்றும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இதழ் வெளிவந்த மாலையிலேயே முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. “பரிதிமாற் கலைஞர் கட்டுரைத் தொடர்பாக கூடுதல் தகவல்கள் வேண்டும்” என்றார்கள். “அவர்கள் குடும்பத்தில் யாரையாவது தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் சொல்லியுள்ளார்” என்றார்கள்.நான் பரிதிமாற்கலைஞரின் பேரன் பேராசிரியர் வி.சு. கோவிந்தன் அவர்களை (என் தமிழாசிரியர் அவர்) சந்தித்துக் கூறினேன். மறுநாளே அவர் குடும்பத்துடன் சென்னை சென்றார். முதல்வரை சந்திக்க உடனடி அனுமதி கிடைத்தது. “கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவையே எங்கள் கோரிக்கை” என முதல்வர் கருணாநிதியிடமும் அவர் சொல்லியிருக்கிறார். மதுரை திரும்பிய பிறகு தங்கள் குடும்பத்தை முதல்வர் வரவேற்று உபசரித்ததை நெகிழ்ந்து சொன்னார்.அடுத்த சில மாதங்களில் நினைவில்லம் தயாராயிற்று. தபால்தலை வெளியிடப்பட்டது. நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. நினைவில்லம் திறப்பு விழாவுக்காக மதுரை வந்திருந்தார் கலைஞர். நன்றி சொன்னேன். புன்னகைத்தார்.

கருணாநிதி என்ன செய்தார்..? என்ற சிலர் கேட்கலாம். ஆனால் நான் அப்படி கேட்கமுடியாது. காரணம் மேலே சொன்ன இரண்டு சம்பவங்கள் போல பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அவைகளை என்னால் பட்டியலிடமுடியும்.

.அவர் வாழும் வரலாறு. நீடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

 ப. திருமலை