September 17, 2021

தனியார் கணினிகளை உளவுபார்க்கும் விவகாரம்! மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

தனியாருக்கு சொந்தமான கணினிகளை மத்திய அரசு சார்பில் உளவுபார்க்கும் விவகாரம் தொடர் பாக ஆறு வார காலத்தில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண் காணிக்க சிபிஐ, அமலாக்கத்துறை, டில்லி காவல்துறை ஆணையர் உட்பட மத்திய அரசின் 10 விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளிப்பதாக கடந்த 2018ம் ஆண்டு  டிசம்பர் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதன்படி, உளவுத்துறை (Intelligence Bureau), போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau), அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate) மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes), வருவாய் புலனாய்வு (Directorate of Revenue Intelligence), சிபிஐ (Central Bureau of Investigation), தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency), டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த 10 விசாரணை முகமை களுக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7 ஆண்டு வரை கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தனிமனித உரிமைகளை மீறும் செயல். இது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் சாடி வருகின்றன. ஆனால் இந்த திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த புதிய ஐடி சட்டத்தின் கீழ் எந்த கிரிமினல் வழக்கு விசாரணையும் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட வேண்டும். அரசின் இந்த புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் 6 வாரத்திற்குள்  பதிலளிக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு  நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.