January 28, 2023

வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு!

சினிமா கற்பனைக்கும் அப்பால் காவியங்களையும், சாதனைகளையும் படைத்த வண்ணம் இருக்கிறது. திரைகளில் மலர்ந்தாலும் காலங்கள் பல கடந்த நிலையிலும் சில பல ஆளுமைகளை இன்றைக்கும் நம் கண் முன் நிறுத்தும் படைப்புகள் பலவுண்டு. அப்படியான கலைப்படைப்பில் ஒன்றுதான் இந்த வீரபாண்டிய கட்ட பொம்மன்.. “வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வசனத்தில் வீர உரமேற்றி ஒலித்த குரலை இன்றும் இளையோர் கூட ரசிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.. அந்த சாதனைப்படைத்த பட தொடக்கம் குறித்து சில ஞாபகக் குறிப்புகளை பொறுக்கி எடுத்து வழங்கினார் நம் சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா.

அதாவது சிவாஜிகணேசனும் கதை வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியும் ஒரு பயணத்தின் போது கயத்தாறு வழியாகப் போயிருக்காங்க. கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்ட அந்த இடத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ‘வேரபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாகப் போடலாமே’ அப்படீன்னு யதார்த்தம சொல்லியிருக்கிறார் சிவாஜி. ‘ஓ.. பேஷ்.. பேஷ்.. அப்படியே செய்வோம்’ என்று ஆமோதித்த சக்தி கிருஷ்ணசாமி ஒரே மாசத்தில் கதை, வசனத்தை எழுதி முடித்திருக்கிறார். முதல் நாடகம் சேலத்தில் அரங்கேறியது. 50 ஆயிரம் செட்டுகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த  வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக வெளி வருவதற்குமுன் 100 முறை நாடகமாக நடத்தப்பட்டது. நாடக வசூலின் மூலம் கிடைத்த முப்பத்து இரண்டு லட்ச ரூபாயை பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.அந்த வீர வரலாற்றை த்ன் வாழ்நாளின் மிகச் சிறந்த படமாக உருவாக்க வேண்டும் அப்படீன்னு இயக்குநர் பி.ஆர்.பந்துலுவைக் கேட்டுக் கொண்டார். அதே காலக் கட்டத்தில், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘ஜெமினியின் அடுத்த தயாரிப்பு கட்டபொம்மன் வரலாறு’ என்ற விளம்பரத்தை வெளியிட்டார். இதைக் கண்டு ஷாக் ஆன சிவாஜி கணேசனும் பி.ஆர். பந்துலுவும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, அந்த முயற்சியைக் கைவிட்டார் வாசன். அதுமட்டுமல்ல, கட்டபொம்மன் வரலாறு குறித்து சேகரித்து வைத்திருந்த குறிப்புகளை சிவாஜியிடம் கொடுத்து, ‘இவை உங்களுக்கு உதவும்’ என்று கூறி வாழ்த்தியிருக்கிறார்

ஆனாலும் , கவிஞர் கண்ணதாசன் மருது சகோதரர்களின் வரலாற்றை ‘சிவகங்கைச் சீமை’ என்ற தலைப்பில் கட்டபொம்மன் படத்துக்குப் போட்டியாக எடுக்கத் தொடங்கினார். அந்த கட்டபொம்மன் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரைத் தேர்ந்தெடுத்தார் பந்துலு. கட்டபொம்மன் கதையில் வெள்ளயத் தேவனாக நடிக்கவிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ‘சிவகங்கைச் சீமை’ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். சிவாஜி உடனே சாவித்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளயத் தேவனாக நடிக்க ஜெமினி கணேசனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஜெமினிகணேசன் ஜெய்ப்பூர் வந்துசேர்ந்தார். படப்பிடிப்பு வெகு வேகமாக நடந்து முடிந்தது.

அந்தக் கால ஊடக மகிமையால் மக்களின் மனங்களை வெல்லப்போவது ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னா அல்லது ‘சிவகங்கைச் சீமை’யா என்று பேசத் தொடங்கினார்கள். ‘சிவ கங்கைச் சீமை’ படத்தைப் பார்த்த நாடகக் கலைஞர் ஒளவை சண்முகம், “வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை சிவகங்கை சீமை முறியடித்துவிடும்” எனக் கூறினார். ஏவி. மெய்யப்ப செட்டியார், “இரண்டு படங்களையும் பார்த்தேன். ஒன்றுக்கொன்று போட்டிப் படங்களல்ல, ஒரே வரலாற்றின் தொடர்ச்சி. எனவே, வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்து 50 நாட்கள் ஆனபின் ‘சிவகங்கைச் சீமை’ யை வெளியிட்டால் இரு படங்களுமே வெற்றி பெறும்” என்றார்.ஒரு வழியாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ 1959 மே 10-ம் தேதி வெளிவர, ‘சிவகங்கைச்சீமை’ அதே வருடம், அதே மாதம் 19-ம் தேதி வெளிவந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் மட்டுமே வெள்ளிவிழாப் படமானது.

இன்னும் கொஞ்சம் இப்படம் குறித்த சுவையான தகவல்களை நினைவு கூறுவதென்றால் துல்லியமான திட்டத்துடன் மிகப் பிரமாண்டமாய் ஏகப்பட்ட துணை நடிகர்கள் பங்களிப்புடன் கேவா எனப்படும் டெக்னிக் கலரில் வந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப் பட்டுச்சாக்கும். சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லத்தில் அக்டோபர் 1957 இல் ஒரு பூஜையுடன் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டில் மெட்ராஸில் பரணி ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின் போது, ​​அடூர் கோபாலகிருஷ்ணன் (ஒரு நாள் பிற்பகல் படப்பிடிப்பைப் பார்த்தவர்) செட்டில் கடுமையான வெப்பம் இருந்ததால் ஒவ்வொரு டேக்கிற்கும் பிறகு வெளியே ஓடிவந்த நடிகர்களை நினைவு கூர்ந்தார். அதாவது பரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது, விளக்கு வெளிச்சத்தின் வெப்பம் தாங்காமல் பல துணை நடிகர்கள் அழுது புலம்பினார்களாம். அவர்களது கேரக்டர் என்ன தெரியுமா? ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று முழங்கியபடி எதிரிகளைப் பந்தாடும் படைவீரர்கள்.

அப்படி 1957ல் தொடங்கப்பட்ட படம் 1959ல் திரையைத் தொட்டிருக்கிறது. 16.5.59ல் தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு முன்னர், இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி லண்டனில் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. அந்த விழாவுக்கு நம் நாட்டின் முதல் வெளிநாட்டுப் பெண் தூதுவரும் நேருவின் சகோதரியுமான விஜயலட்சுமி பண்டிட், தலைமையேற்று சிறப்பித்தார். 1960 ஆம் ஆண்டு எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடந்த ஆசிய – ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ‘ஆசியாவின் சிறந்த நடிகர்’ என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என்ற அடிப்படையிலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ விருதுகளை அள்ளினான். அந்தவகையில் இரண்டு பெரிய கண்டங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்ற முதல் தமிழ்ப்படம், முதல் இந்தியப்படம் மற்றும் முதல் ஆசியப்படம் என்கிற பெருமையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்குக் கிடைத்தது.

இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஆரம்பத்தில் வெள்ளையத்தேவனின் பாத்திரத்தை வழங்கினார், அவர் சிவகங்கை சீமாய் மீதான உறுதிப்பாட்டின் காரணமாக மறுத்துவிட்டார். பின்னர் அவர் நடிகை சாவித்ரியிடம் அவரது கணவர் ஜெமினி கணேசனை இந்த பாத்திரத்தில் நடிக்கும்படி கேட்டார். ராஜேந்திரனை மாற்றுவது “முறையற்றது” என்று கருதி ஜெமினி ஆரம்பத்தில் அந்த பகுதியை ஏற்க தயங்கி தன் பதிலை சொல்லாமலே இருந்தார். அதைக் கேள்விப்பட்டு ஜெமினி வெள்ளையத்தேவன் பாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜேந்திரன் பந்துலுவுக்கு எழுதி கொடுத்த பின்னர், நடிகர் ஒப்புக்கொண்டார். முன்னரே சொன்னது போல் இது வண்ண நிழற்படத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் ஆகும். ஜெவாகலரில் படமாக்கப்பட்டு பின்னர் லண்டனில் வண்ண நிழற்படமாக மாற்றப்பட்டது.

இப்படம் வெளியான போது விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. கட்டபொம்மனாக நடித்த சிவாஜி கணேசனின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. அதே சமயம் சில விமர்சகர்கள் தலைப்பு மற்றும் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு வரலாற்று ரீதியாக ஆதாரமில்லாதது என்று கமெண்ட் போட்டு கலாய்க்க முயன்றார்கள். ஆனாலும் இது வணிக ரீதியான வெற்றி பெற்று, 25 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா படமாக மாறியது. இப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் வீரபாண்டிய கட்டபிரம்மனாகவும், அடுத்த ஆண்டு ஹிந்தியில் அமர் ஷாஹீத் என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.

நெக்ஸ்ட் இயரான 1960ல் கெய்ரோவில் 1960-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆப்ரோ-ஆசியன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசை இயக்குனருக் கான சர்வதேச விருதுகளை பெற்ற முதல் தமிழ் சினிமா இதுவாகும். மேலும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதின் ஒரு பகுதியாக மெரிட் சான்றிதழை பெற்றது. ஆம் .. 1960 பிப்ரவரி 29 முதல் மார்ச் 11 வரை கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசியா திரைப்பட விழாவில் கணேசனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று தந்தது. அதே விழாவில், ஜி.ராமநாதன் சிறந்த இசை இயக்குனர் விருதையும், படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. சர்வதேச விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் கணேசன் ஆவார், மேலும் அவர் தனது விருதை எகிப்திய ஜனாதிபதி கமல் அப்தெல் நாசரிடமிருந்து பெற்றார். அவர் மெட்ராஸுக்கு திரும்பியபோது, ​​தென்னிந்திய நடிகரான கில்ட் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு ஏற்பாட்டை ஏற்பாடு செய்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் 1984 இல் வெளியிடப்பட்டது. மீண்டும் டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட பதிப்பு 21 ஆகஸ்ட் 2015 அன்று வெளியிடப்பட்டது. இரண்டுமே வணிக ரீதியான வெற்றி பெற்றதாக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ரிலீஸான நாள் சிறப்புக் கட்டுரை