திறமைக்காட்டும் சீனா, திகைக்கும் அமெரிக்கா! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

திறமைக்காட்டும் சீனா, திகைக்கும் அமெரிக்கா! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மீபத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிர்ச்சி அடையும்படி ஒரு செயலை சீனா செய்துள்ளது. உலகிலேயே அதி வேகமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியை விட நூறு மடங்கு விரைவாகவும், இதர ஏவுகணைகளை போல இல்லாமல் தாழ்வாகப் பறந்து தாக்கக்கூடியது. தாழ்வாகப் பறக்கும் ஏவுகணையை ரேடார்களால் கண்டறிய முடியாது. அப்படியே கண்டறிந்தாலும் ஏவுகணையைத் தடுப்பதற்கோ, பதிலடி கொடுப்பதற்கோ நேரம் இருக்காது. எனவே அமெரிக்கா இப்போது திகைப்பில் ஆழ்ந்துள்ளது. 1957 சோவியத் ஒன்றியம் ‘ ஸ்புட்னிக்’ செயற்க்கைக்கோளை விண்ணில் செலுத்தி அமெரிக்காவை போட்டியில் பின் தங்கச் செய்தது. அது போன்றதொரு தருணத்தைத் தாங்கள் உணர்வதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கருதுகிறது.

சீனாவின் இந்த வெற்றி இராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். ஏற்கனவே இந்தியா உட்பட பல அண்டை நாடுகளுடன் எல்லைப்பிரச்சினையில் மல்லுக்கட்டும் சீனா இப்படி அதி நவீன ஆயுதங்களை தானே உருவாக்குவது உறுதியாக ஆபத்தானது. ஹைப்பர்சோனிக் என்று அழைக்கப்படும் புதிய ஏவுகணை 8000 கி.மீ வரை பறந்து சென்று தாக்கும் என்கின்றனர். அணு ஆயுதத்தையும் சுமந்து செல்லும்.

அமெரிக்காவின் ஏவுகணைகளும் துல்லியமாக உலகின் எந்தவொரு பகுதியையும் தாக்கும் தன்மை படைத்தவை. அவை அணு ஆயுதத்தை சுமந்து செல்பவை. கப்பல், தரை, வானிலிருந்தும் செலுத்து வசதியை அமெரிக்க இராணுவம் பெற்றுள்ளது. இராணுவ நோக்கிலிருந்து பார்த்தால் அமெரிக்க காலாட்படையை விட சீனாவின் காலாட்படை பெரியது. ஆயினும் சீன இராணுவத்திற்கு போர் அனுபவமே இல்லை. இந்திய வீரர்களிடம் கத்திச் சண்டைப் போட்டு 45 வீரர்களை இழந்தப் பிறகு எல்லைக்குள் நுழைவதோடு நிறுத்திக் கொண்டுள்ளது சீனா. அத்துடன் மியான்மர், பூடான், பங்களாதேஷ் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நெருக்கத்தை வளர்த்து வருகிறது. அதேபோல தென் சீனக் கடலில் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறி, பல தென் கிழக்கு ஆசிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கூடவே நீண்டகால பிரச்சினையான தைவானை தனதாக உரிமைக்கோருவதிலிருந்தும் விலகவில்லை. அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பிராந்தியத்தில் தொடர்ந்து சுற்றி வருகின்றன. சீனாவின் இந்த அடாவடிக்கு என்னத் தீர்வு என்பதை யாராலும் கூற முடியவில்லை. போர் நடந்தாலும் நடக்கலாம். ஆனால் போர் அனுபவமற்ற சீன இராணுவத்தினால் எளிதாக வெல்ல முடியாது.

மேலும் ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் மோதுவது சாத்தியமற்றது. அதற்கு பதிலாக அந்நாடுகளில் தனது செல்வாக்கை நிலைநாட்டி பொம்மை அரசுகளை ஏற்படுத்த முயலலாம். இதை நேபாளம், பூடானில் செய்ய முயல்கிறது; ஆயினும் ஈடேறவில்லை. மாலத்தீவுகளில் முதலில் வெற்றி கிடைத்தாலும் பின்னர் தோல்வியே!

சீனாவின் பலம் அதன் பொருளாதாரம். இப்போது அதுவும் ஆட்டம் கண்டு வருகிறது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை சீனாவிலிருந்து இடம் மாற்றி வருகின்றன. உள்நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. பொருளாதார தேக்கத்தை சந்திக்கிறது. இந்த நிலையில் போர் ஒரு திசைமாற்று விவகாரமாக இருக்க வாய்ப்பு அதிகம். அதை மக்கள் விரும்பவில்லை என்றாலும் சரி.

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டில் இந்திய கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு தடைப்போட்டு வருவதாக கூறினார். இந்தியாவுக்குள் 300 கோடி தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க முடியும் என்றால் உலகம் முழுதும் ஏழை நாடுகளுக்கு அளிக்க முடியும். எனவே சீனா பரவ விட்ட தொற்று நோய்க்கு தடுப்பூசியை அளிப்பதன் மூலம் இந்தியா உலகளாவிய பெருமையை அடைய முடியும். இச்செயல் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும். ஆகவே சீனா உ.சு.மையம் கோவேக்சினை அவசரக்காலப் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதை தடுக்கிறது. கொரோனா பரவல் சீனாவிலிருந்து தொடங்கியது என்றாலும் இதை விசாரிக்க உ.சு.மையம் தயங்குகிறது. இப்படியான சூழலில் இந்தியா பெயர் வாங்குவதை சீனா எப்படி விரும்பும்?

சீனாவின் செயல்களால் வெறுப்படையும் காலத்தில் ஹைப்பர்சோனிக்குகள் உதவுமா என்பதுதான் கேள்வி.

ரமேஷ்பாபு

error: Content is protected !!