March 31, 2023

வயதானவர்களை வாழ வைக்கும் சின்னத் திரை சீரியல்கள்!

ண்மையில் சின்னத்திரை சீரியல் இல்லையென்றால் வயதானவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும். மகன், மகள், பேரன், பேத்தி… என அனைவரும் பகலில் வெளியே சென்று விடுகிறார்கள். மாலை / இரவு அவர்கள் வீட்டுக்கு வரும்போதே அவரவருக்கான பணிச்சூழல் சார்ந்த அழுத்தங்களுடன் வருகிறார்கள். அதிலிருந்து மீள கேட்ஜெட்ஸை தஞ்சம் அடைகிறார்கள். இந்நிலையில் இன்று வயதானவர்களுடன் அமர்ந்து பேச யார் இருக்கிறார்கள்? எனவேதான் காலை முதல் இரவு உறங்கச் செல்லும் வரை இவர்கள் சீரியல் பார்க்கிறார்கள்.

பகல் முழுக்க வீட்டில் நிலவும் அமானுஷ்ய அமைதியை எதிர்கொள்ள யாராவது பேச வேண்டியிருக்கிறது. டிவியை ஆன் செய்தால் அங்கே குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன. மாமியார் மருமகள்; தாத்தா பாட்டி; மகன் மகள்; பேரன் பேத்தி; பெரியம்மா பெரியப்பா சித்தி சித்தப்பா அத்தை மாமா… என உறவுமுறையுடன் சீரியலில் நடக்கும் உரையாடல் முழுக்க தங்களுடன் நடப்பதாக வயதானவர்கள் கருதுகிறார்கள். அதன் வழியாக தனிமையில் தாங்கள் இல்லை என ஆறுதல் அடைகிறார்கள். உண்மையில் ரத்தமும் சதையுமில்லாத ஆனால், உணர்வுப்பூர்வமான – உணர்ச்சிப்பூர்வமான உறவு முறை இது. இந்த உறவால்தான் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் இன்னமும் மனநலம் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

எப்படி ஓடிடி தளத்தில் படங்களைப் பார்த்து நமக்குள் இருக்கும் நம்மை உயிர் வாழ வைக்கிறோமோ அப்படி வயதானவர்கள் சீரியலை பார்த்து தங்கள் மனநலத்தை தக்க வைத்து கொள்கிறார்கள். சீரியல் காட்சிகள் அல்லது சீரியலில் வரும் ப்ளாக்குகள் அபத்தமாக இருந்தாலும் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. அபத்தம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்; வில்லன் / வில்லியிடம் சிக்கிக் கொள்ளும் ஹீரோ / ஹீரோயின் எப்படியும் தப்பித்து விடுவார்கள் என்பதையும் அறிவார்கள். ஆனாலும் அந்த விளையாட்டு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது; பிடித்து இழுக்கிறது. ஆடுகிறார்கள்; ஆடத் தொடங்குகிறார்கள்.

வெற்றி தோல்வி அற்ற அந்த விளையாட்டின் வழியாக தங்களது முழு வாழ்நாட்களையும் அசைபோடுகிறார்கள். சீரியல் என்பது வயதானவர்களின் சர்வரோக நிவாரணி. – சீரியல் தொடர்பாக நண்பர் சுரேஷ் கண்ணன் ஒரு நிலைத்தகவலை எழுதியிருக்கிறார். அங்கு எழுதிய மறுமொழி இது.
தனிப்பட்ட சேமிப்புக்காக இங்கே தனி நிலைத்தகவலாக பதிக்க முற்பட்டபோது வேறு நில எண்ணங்கள் தோன்றின.

டைரி குறிப்புகளாக அவையும் இங்கே…

யோசித்துப் பார்த்தால் இன்று நாம் அனைவருமே வயது வித்தியாசம் இல்லாமல் பிம்பங்களுடன் மட்டுமே உரையாடுகிறோமோ என்று தோன்றுகிறது. பிம்பங்களை முன்வைத்தே அல்லது பிம்பங்களை சார்ந்தே நம் நண்பர்களுடன் / உறவினர்களுடன் உரையாடுகிறோம். அது கிரிக்கெட் / ஃபுட்பால் / ஏதோவொரு விளையாட்டு மேட்ச் ஆக இருக்கலாம் அல்லது வெப் சீரிஸ் / படங்களாக இருக்கலாம் அல்லது தொலைக்காட்சி விவாதமாக இருக்கலாம் அல்லது தேர்தல் / நீதிமன்ற வழக்கு தீர்ப்பாக இருக்கலாம்…

ஆனால், இருவருக்கு இடையிலான உரையாடல் என்பது ஏதோவொரு பிம்பத்தை / பிம்பங்களை முன்வைத்தே அரங்கேறுகிறது. பிம்பங்கள் அற்ற உரையாடல் இருவருக்கு இடையில் இன்று அரங்கேறுவதே இல்லை அல்லது குறைவாக இருக்கிறது… பிம்பங்களைக் கடந்த உரையாடல் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்…1

கே.என்.சிவராமன்