March 31, 2023

அதிபர் டிரம்பின் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து ஏராளமான வழக்குகள்!

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவது அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திஎல்லைச் சுவர் எழுப்புவதற்கு தேவையான நிதியை அரசிடமிருந்து பெற அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் 16 மாகாணங்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்கும் வகையில் அமெரிக்க எல்லையில் பலமான சுவர் எழுப்ப அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்காக பட்ஜெட்டில் கூடுதலாக 570 கோடி டாலர் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் என்று எச்சரித்தார்.

ஆனால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் டிரம்பின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதன் காரணமாக கடந்த வாரம் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அதிபர் டிரம்ப். இதற்கு பலதரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

டிரம்பின் இந்த முடிவை எதிர்த்து நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த 16 மாகாணங்களின் அட்டார்னி ஜெனரல்கள் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்பின் அவசரநிலை பிரகடனம் அரசியலமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று 16 மாகாணங்களும் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளன.