October 20, 2021

பெண்களுக்கு சம உரிமை வழங்வது 6 நாடுகள் மட்டுமே! – – உலக வங்கி தகவல்!

ஆணென்ன.. பெண்னென்ன.. நீயென்ன.. நானென்ன.. எல்லாம் ஓரினம்தான் என்ற பாடலை ரசிக்கும் நம்மில் பலரும் அப்பாடலின் பொருள் புரிவதில்லை போலும். உலகமெங்கும் உள்ள ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த 21ம் நுாற்றாண்டிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க பெரும்பாலான நாடுகள் முன்வருவதில்லை .

இதனிடையே மேலே சொன்னது போல் சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம், அரசியல் என பல்வேறு தளங் களிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும் ஆண் – பெண் சமநிலையில் பின்னடைவையே சந்தித்துவருகிறோம். உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) கடந்த 2014-ல் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. உலக அளவில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்பட நாம் 2095-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். அதே அமைப்பு தனது ஆய்வை விரிவாக்கி 2015-ல் மற்றொரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில், ‘தற்போது மக்களிடையே நிலவிவரும் மந்த நிலை, பாலினச் சமத்து வத்தை மட்டுப்படுத்திவருகிறது. அதனால் 2133-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த உலகம் பாலினச் சமத்துவத்தை உணர முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

அதையெல்லாம் இருபாலரும் மறந்து விட்ட நிலையில் பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் 6 நாடுகள் மட்டுமே முன்னணியில் இருப்பதாக உலக வங்கி தற்போது தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு, விடுமுறை, ஊதியம் என அனைத்து பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் நாடுகளை உலக வங்கி பட்டியலிட்டது.

இதில் பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க்,லாட்வியா, லக்ஸம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய 6 நாடுகள் மட்டுமே பணியிடங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதில் இந்தியா 71. 25% மதிப்பெண் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பிரான்ஸ் நாடு, பெண்கள் மீதான வன்முறை, பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளில் பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.மகப்பேறு விடுமுறை, ஊதியம் என பல சலுகைகளையும் வழங்குகிறது.

ஆனால் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இதில் 47 மதிப்பெண்களையே பெற்றுள்ளன.

அமெரிக்கா 97.5,

ஆஸ்திரேலியா 96.88,

ஜெர்மனி 91.88,

பிரிட்டன் 83.75

இந்தியா 71.25

பாகிஸ்தான் 46.25

கத்தார் 32.50,

ஈரான் 31.25,

சூடான் 29.38,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 29.37

சவுதி 25.63