ஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்!

ஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்!

இந்திய அளவில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அதை இன்று
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பத்திரிகை, கல்வி, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை புரிந்த, மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், 1 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மணி மண்டபத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது இதுதான்:-

சி.பா.ஆதித்தனார்- கோவிந்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராக 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி மரியாதைக்குரிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தார். பள்ளிப் பருவத்தில் சென்னை, இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள், பின்னர், மாநிலக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்தது டன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவரது தந்தையார் திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள், படிக்காத பாமர மக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் 15.10.1942 அன்று, முதன் முதலாக மதுரையில் ‘அன்றைய செய்தியை அன்றே படியுங்கள்’ என்ற முழக்கத்துடன் ‘தந்தி’ என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார். இதுவே சென்னையில் ‘தினத்தந்தி’ என்ற பெயரில் தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வழிவகுத்தார்.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழி போல், திரு. சிவந்தி ஆதித்தனார் பள்ளி யில் படிக்கும் பொழுது ஒரு நாள் தினத்தந்தியில் வெளியிட ஒரு சிரிப்பு துணுக்கு ஒன்றினை தன் தந்தையிடம் கொடுத்தார். அந்த சிரிப்பு துணுக்கு என்னவென்றால்,

ஆசிரியர் மாணவரிடம் கேட்கிறார் பாம்பு என்று எழுதச் சொன்னால் ‘பம்பு’ என்று எழுதியிருக்கிறாயே?

அதற்கு மாணவன், பாம்புக்குத் தான் கால் கிடையாதே சார் என்று பதில் கூறுகிறார்.

தனது மகனின் பத்திரிகை ஆர்வத்தை உணர்ந்த திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள் பத்திரிகைத் தொழிலில் தனது வாரிசாக அவரை உருவாக்கினார். 1958ஆம் ஆண்டு திரு. சிவந்தி ஆதித்தன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், அவரை அழைத்து பத்திரிகைத் துறையில் பயிற்சி அளித்தார்.

“பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்”

என்ற புரட்சித் தலைவர் அவர்களின் பாடலுக்கேற்ப, அவரது தந்தையார், சிவந்தி ஆதித்தனுக்கு பயிற்சி அளித்தார். அச்சு கோர்ப்பாளராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புவராக, நிருபராக, துணை ஆசிரியராக என்று பத்திரிகைத் துறையின் அத்தனை பிரிவுகளிலும் பயிற்சி கொடுத்தார்.

பின்னர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் நெல்லைக்கு சென்று ‘மாலை முரசு’ பத்திரிகையை தொடங்கினார். அவரது அயராத உழைப்பினால் ‘மாலை முரசு’ நாளிதழ் நெல்லை மக்களின் பேராதரவைப் பெற்றது. இதன் எதிரொலியாக மற்ற மாவட்டங்களிலும் மாலை முரசுகள் தோன்றின.

பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணியினை கண்ட அவரது தந்தையார், ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை 1959ஆம் ஆண்டு ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தினத்தந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று தலைமை உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஓர் அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்ல முறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு.

அந்த விதமான நிலையில்லாமல் திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’ நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையில், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே தினத்தந்தி நாளிதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தினாரின் திருமகன் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு உரிய பங்கு உண்டு. ஆதித்தினார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை தொடர்ந்து நடத்த தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்” என்று, திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களை பாராட்டிப் பேசினார்கள்.

இன்று தினத்தந்தி பத்திரிகை பல கோடி வாசகர்களுடன், நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதை உணர முடிகிறது.

திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்த நிறுவனங்களை அவருடைய மகன் திரு.சிவந்தி ஆதித்தன் கட்டிக்காத்து வருவதுடன், மெச்சத் தகுந்த வழியில் வளர்த்து வருகிறார்” என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள்.

“தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும், பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய வர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். இவர் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் எளிமையானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர்” என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

தினத்தந்தி பத்திரிகை மட்டுமின்றி, 1962ஆம் ஆண்டு ‘ராணி’ வார இதழ் தொடங்கப்பட்டது. திரு. ஆதித்தனார் அவர்கள் பாமர மக்களையும், நாளிதழ் படிக்க வைத்தார் என்றால், பட்டி தொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் பரப்பினார். இதனைத் தொடர்ந்து ‘ராணி முத்து’, ‘ராணி காமிக்ஸ்’ ஆகிய இதழ்களையும் தொடங்கினார்கள். இன்று தமிழ்நாடு மக்களின் வீடுகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் ‘ராணி முத்து’ காலண்டர்களை வெளியிட்டவரும் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான். இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தார்.

“இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தார் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் தாராளமாக நிதி உதவி செய்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மாளிகையை கட்டிக் கொடுத்தார்.

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்கள் ஏழை எளிய குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது, முதலில் திருச்சி பாப்பாக்குறிச்சியில் தன் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தவர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை, விளையாட்டுத் துறை வளர்ச்சியிலும் காட்டினார்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த அவர், 1987ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவி வகித்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000ஆவது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கெளரவித்தது. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தன.

இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, 22.11.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் அறிவித்தேன்.

அதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபம் அமைக்க 10.10.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இந்த மணிமண்டபத்தினை அமைக்கும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, இன்று நான் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வாக்குறுதிகளை கொடுப்பதோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்ற நாங்களும், “சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்ற கொள்கையின் அடிப்படையில், செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆளுமைமிக்க மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் போல் நாங்கள் இல்லை. எங்களின் சுய லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு, வாய்ச்சொல் வீரராக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 8 அடி பாய்ந்தால், அவர் மகன் திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள் 16 அடி அல்ல, 32 அடி பாய்ந்துள்ளார்கள். தன் தாத்தா சி.பா. ஆதித்தனார், தந்தை சிவந்தி ஆதித்தன் உருவாக்கிய ‘தினத்தந்தி’யை மேலும் வளர்த்து இன்று துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பதிப்பு என்ற பெருமையையும் ‘தினத்தந்தி’ குழுமத்துக்கு பெற்று தந்துள்ளார்.

நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். திரு. பாலசுப்பிரமணியன் தாத்தா ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்கள் சிறந்த பத்திரிகையாளர் என்று. அவர் தந்தை சிவந்தி ஆதித்தன் அவர்கள் சிறந்த நிர்வாகி என்று. ஆனால் திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் தாத்தா, தகப்பனாரின் கலவையாக சிறந்த பத்திரிகையாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார் என்பதற்கு அவரது நிர்வாகத்தில் இயங்கும் ‘தினத்தந்தி’, டி.டி. நெக்ஸ்ட் ஆங்கில பத்திரிகை, மாலை மலர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம்., மற்றும் சில வார, மாத இதழ்களே சாட்சி. இப்போது தன் மகன்களான சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அந்த இளைஞர்களும் தன் பூட்டனார், தாத்தா, தந்தை போல பத்திரிகை துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். இந்நிகழ்ச்சியினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து விழா நடைபெறும் வீரபாண்டியபட்டணத்திற்கு கார் மூலம் வருகை தந்தார். அவரை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முன்னதாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார். சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை போர்த்தி துணை முதலமைச்சரை வரவேற்றார்.

error: Content is protected !!