October 2, 2022

சிவகுமாரின் சபதம் – விமர்சனம்!

கோலிவுட்டில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த தயாரிப்பாளரும் சினிமாவில் லாபம் பார்க்கவில்லை என்று ஏகப்பட்ட புரொட்யூசர்கள் சொல்லி வருகிறார்கள்.. இதனிடையே எடுத்த படத்தை விற்க புரொடியூசர்கள் படும் பாடு சொல்லி மாளாது என்பதும் தனி எபிசோட். இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அரைவேக்காடுகளெல்லாம் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு, நாயகன் என சகல தளங்களிலும் ஒருவரையே முன்னிலைப் படுத்துவோரை நம்பி களமிறங்குவதுதான் என்று அடித்து சொல்லலாம். அப்படி நவீன டி.ஆர் பாணியில் ஹிப் ஹாப் ஆதி என்பவரை நம்பி சத்யஜோதி நிறுவனம் ஒரு படத்தை எடுத்து கொடுத்து இரண்டரை மணி நேரத்தை வீணடித்து விட்டார்கள்.. அதிலும் இப்படத்தின் புரொமோசனுக்காக நடந்த பிரஸ்மீட்டில் ‘மூன்றாம் பிறை படத்திற்கு பிறகு இந்தப் படம்தான் என்னை அதிகம் பாதித்தது’ என்றெல்லாம் புரொடியூசர் தியாகராஜன் சொன்னதை படம் பார்த்த பிறகு நினைத்து நெஞ்சே வெடிக்கிறது.

கதை என்னவென்றால் பணத்திற்காக காஞ்சிபுரத்தின் பழம்பெருமை மிக்க தறிநெய்யும் குடும்பத்தை ஏமாற்றும் ஒருவனுக்கும், தறி நெய்யும் குடும்பத்திற்கும், உள்ள உறவு சிக்கல்கள் தான் கதையின் மையம், தறி நெய்யும் குடும்பம் தறியின் பெருமையை எப்படி காப்பாற்றி, ஜெயிக்கிறது என்று சொல்ல முயன்றிருக்கிறார்.

இந்த ஆதி படங்கள் கல்லூரி இளைஞர்களை குறி வைத்ததாகவே இருக்கும். ஆனால் இம்முறை காலேஜ், நண்பர்கள், காதல் எனும் அவரது வழக்கமான ரூட்டை மாற்றி குடும்பத்திற்குள் போயிருக்கிறார் ஆனால் அது ஏனோ ஒர்க் அவுட் ஆகவில்லை. தறிநெய் தொழில் தான் படத்தின் மையம், ஆனால் அது கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அதுவும் விக்ரமன் பட லாலா லாலா போல எந்த டீடெயிலுங்கும் இல்லாமல் பாடுகிறார்கள். ஆதி படங்களில் வழக்கமாக நிறைய கதாப்பத்திரங்கள் தலை காட்டும் பல சர்ப்ரைஸ்கள் தொடர்ந்து வந்து படத்தை தாங்கிப்பிடிக்கும், இதில் எல்லாமே மிஸ்ஸிங். காட்சி கோர்வையில் எந்த வித தொடர்பும் இல்லாமல் துண்டுதுண்டாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும், எல்லோரும் நின்று, பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு தான் தலைவலி வருகிறது.

இணையத்தில் கலக்கும் இளைஞர்கள் ஆதி படத்தில் அசத்துவார்கள், இப்படத்தில் பிராங்க்ஸ்டர் ராகுல் நடிப்பில் சிவாஜியை கேலி செய்திருக்கிறார். அவர் வரும் காட்சி காமெடியாகவும் இல்லாமல், செண்டிமெண்டாகவும் இல்லாமல் சொதப்பாலாக இருக்கிறது. இடைவேளை காட்சி முதல் பல இடங்களில் அவரது நடிப்பு எரிச்சல். விஜே பார்வதி ‘உப்புக்கு சப்பாணி’ படத்தில் அவருக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. காஞ்சிபுரத்தின் பெருமை மிக்க மனிதர் என தாத்தாவை காட்டுகிறார்கள் ஆனால் அவரை பல காட்சிகளில் இவர்களே காமெடி தாத்தாவாக ஆக்கி வைத்துள்ளனர்.
எதிர்பார்க்கும் எந்த சுவாரஸ்யமும் இந்த படத்தில் இல்லாதது ஏமாற்றம். ஒரு பணக்கார குடும்பத்திற்கும் ஏழை சம்பந்தி குடும்பத்திற்கும் உள்ள உறவு சிக்கல்களாகத்தான் கதை போகிறது. ஆனால் அதிலேயும் எந்த சுவாரஸ்யமும் இல்லை, லாஜிக்கும் இல்லை. உறவுக்கார நாயகி யாரென்று நாயகனுக்கு தெரியாது என்பதெல்லாம் காதில் சுத்தும் பூ.

ஆரம்பத்தில் சொன்னது போல் இதுவரையிலும் வந்த படங்களில் ஆதிக்கு சரியான பக்கபலமான இணை இயக்குநர் கூட்டம் இருந்தது இந்தப்படத்தில் ஆதியே எல்லாவற்றையும் செய்திருக்கிறார் ஆனால் ஒரு காட்சி கூட ஒரு முழுமைத் தன்மை இல்லாமல் இருக்கிறது. இயக்கத்தில் ஒரு அமெச்சூர் தனம் தெரிகிறது. தயவு செய்து அவர் நடிப்போடு நிறுத்திக்கொள்வது அவருக்கு நல்லது. பார்வையாளர்களுக்கும் நல்லது.

படத்தொகுப்பில் இன்னும் கச்சிதமாக்கி பல தேவையற்ற காட்சிகளை வெட்டியிருந்தால் படத்தை கொஞ்சம் காப்பாற்றி இருக்கலாம். ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். அங்கங்கே வரும் சிறு சிறு காமெடிகளுக்காக மொத்த படத்தை பொறுத்துகொள்ள முடியாதே. பாடல்கள் அனைத்தும் காதுகளை பதம் பார்க்கிறது. ஹிப்ஹாப் ஆதி இசையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மொத்தத்தில் கடுப்பேற்றிட்டார் மை லார்ட்.

மார்க் 2.25/5