October 22, 2021

திசைமாறும் ரெமோ கண்ணீர்…! சன் டிவிக்கு எதிராக திரும்புகிறதா தயாரிப்பாளர் சங்கம்…?

கலாச்சார சீர்கேடான கதையை எடுத்து விட்டு பிரமாண்ட செலவில் விளம்பரங்கள், கவர்ச்சி போஸ்டர்கள் மூலம் படத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்த ‘ரெமோ’ டீமுக்கு எதிர்மறை விமர்சனங்கள் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதை சரி கட்டுவதற்காக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி அதில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘எங்களை வேலை செய்ய விடுங்கள். இப்போது நல்ல படம் எடுக்காமல் போனாலும் என்றைக்காவது நல்ல படம் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இணைந்திருக்கிறோம்’ என்று மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இதன் மூலம் சரியத் தொடங்கிய செல்வாக்கை தூக்க நிறுத்திவிடலாம் என்று நினைத்தவருக்கு மீண்டும் சறுக்கலே ஏற்பட்டிருக்கிறது.

remo oct 14 a

ஒரு அடி முன்ன போனா நாலு அடி இழுத்துவிட்ட மாதிரி சிவகார்த்திகேயன் கண்ணீர் காமெடியாக மாறியிருக்கிறது. பொதுவாகவே டிவி ஷோக்களில் அந்த நிகழ்ச்சியின் ரேட்டிங்கை உயர்த்துவதற்காக திடீரென சண்டையிட்டு கொள்வதும், திடீரென சென்டிமெண்ட்டாக அழுவதும் வழக்கம். அதை அப்படியே படம்பிடித்து வெளியிட்டு நிகழ்ச்சியின் தரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த டெக்னிக் தெரிந்த முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனும் ‘இம்சை அரசன்’ படத்தில் 23ம் புலிகேசி அம்பு விட்டகதையாக சிவகார்த்திகேயன் விட்ட ‘கண்ணீர்’ ஆயுதம் அவர்கள் மீதே திரும்பி தாக்க மேலும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது ரெமோ டீம்.

இதற்கிடையில், ஊதாரி காதலை நியாயப்படுத்தி உதவாத படம் எடுத்து விட்டார் சிவகார்த்திகேயன். இதன் மூலம் பெண் ரசிகர்களின் ஆதரவு குறைந்து போனது, திரையிட்ட தியேட்டர்களிலும் வசூல் பாதிப்பு, பல தியேட்டர்களில் 4 காட்சிகள் இரு காட்சிகளாக மாற்றப்பட கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்ட விளம்பரங்களை கொடுத்தும் படத்தை தூக்கி நிறுத்த முடியவில்லையே என்று ரெமோ தயாரிப்பு டீம் கடும் அதிர்ச்சியில் அடைய…. ரெமோ படத்தின் விளம்பரத்திற்கு மட்டும் பல கோடிகளை செலவு செய்திருக்கிறார்கள். தேறாத கதையாக இருந்தாலும் எழுதி தேற்றி விடுகிறோம் எங்களை விட்டால் சினிமாவில் எழுதுவதற்கு ஆளே இல்லை என்பவர்களின் பேச்சை நம்பி விளம்பரங்களுக்கும், எழுத்துக்களுக்கும் லட்ச லட்சமாக வாரி கொடுத்தும் வெளியான விமர்சனங்களால் கதவிடுக்கில் மாட்டி நசுங்கிய எலி போல விழிபிதுங்கிப் போயிருக்கிறார்கள்.

இதன் அடுத்த படியாக ஜே.எஸ்.கே.கோபி என்பவர் சினிமா விமர்சனம் செய்கிற பிரசாந்த், புளூசட்டை மாறன் மீது வழக்கு போடப்போகிறேன் ஆதரவு தாருங்கள் பொது தளமான பேஸ்புக்கில் ஆதரவு திரட்ட…. அவருக்கு வரிந்து கட்டி சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். வழக்கு போடுபவருக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணுவும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் என்று அவரையும் இதில் இழுத்து விட்டிருக்கிறார்கள். இதன் மூலம் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதில் வேடிக்கையே படம் வழக்கு போடப் போகிறோம் என்று குறிப்பிடும் இருவரில் ஒருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் திரை விமர்சனம் செய்பவர். இவர்கள் வழக்கு போடுவது சன் டிவிக்கு எதிராக என்றும் அதை நேரடியாக செய்ய முடியாது என்பதால் அதில் விமர்சனம் செய்பவர் மீது அவர் வைத்திருக்கும் ஆன்லைன் நிறுவனம் மீதும் வழக்கு போடுகிறோம் என்கிறார்கள். வழக்கு போட்டதற்காக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை.

வழக்கு போடுகிறோம் என்று செய்திகளை மட்டும் கசிய விட்டிருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணுவும் ஆதரவு தெரிவித்திருப்பதாக அவரையும் இழுத்து விட்டிருக்கிறார்கள். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது இணைப்பு கிடைக்கவில்லை. வாட்ஸ் அப்பில் நமது கேள்வியை எழுதி அதற்கான விளக்கத்திற்கு காத்திருப்பதாக செய்தி அனுப்பியும் அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

பொதுவாக மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு மவுனமாக இருப்பதால் இந்த வழக்கு விவகாரம் அவருக்கு தெரியவில்லை என்றே எடுக்கவேண்டியிருக்கிறது. அவருக்கு தெரியாமலேயே அவர் ஆதரிப்பதாக செய்திகள் வெளியாவதால் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முறையான விளக்கம் வெளியானால் தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கப்படும்.

ஏற்கனவே, படம் வெளியாக விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள் என்று சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார். அதேபோல, அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து கொடுக்க மறுக்கிறார் என்று சிவகார்த்திகேயன் மீதும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் பிரபல தொலைக்காட்சிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் திரும்புகிறதா அல்லது வாங்கியதற்கு ஆதரவாக பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறாரார்களா என்பதை தயாரிப்பாளர் சங்கம்தான் தெளிவு படுத்தவேண்டும்.

கோடங்கி