October 27, 2021

சிவகங்கையில் ஜாதி மோதல் : இருவர் பலி- பதட்டம் தொடர்கிறது!

மிகவும் வளர்ந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் தமிழகத்தில் இன்றளவும் ஜாதிக் கலவரங்கள் நடப்பது தொடர்கதையாகி விட்டது. பகுத்தறிவை வளர்ப்பதாக ஒரு சாரார் சொல்லி வந்தாலும், ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக இன்னோர் தரப்பு முழக்கமிட்டாலும் சில ஜாதியினர் தங்கள் கணில் கூட படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வன்முறையில் ஈடுபவது 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டே இருப்பது மிகவும் வேதனையான விஷயம். அந்த வகையில்தான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள திருப்பாச்சேத்த்தியை அருகிலுள்ள ஆவரங்காடு – கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை வழி மறித்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன், இரவு நேரத்தில், கச்சநத்தம் கிராமத்தினுள் புகுந்த மற்றொரு சமூக இளைஞர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருதுபாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ், சந்திரசேகர், சுகுமாறன், தனசேகரன் உள்ளிட்ட மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடந்த பிரச்னை குறித்து விசாரித்த போது, ”மாற்று சாதியினர் எங்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள். எங்களை ஊரைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். எங்க பசங்க டீ கடையில் உட்கார்ந்து கால்மேல் கால்போட்டு டீ குடித்திருக்கிறார்கள். அப்போது, மாற்று சாதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் அருண், அந்த வழியாக வந்திருக்கிறார். ஏண்டா நான் வர்றேன் கால்மேல கால்போட்டு உட்காந்திருக்கேனு சொல்லி பிரச்னை செய்திருக்கிறார்கள். அடுத்ததா கோயில் சாமி கும்பிடுவதில் பிரச்னை. இப்படியாகத் தொடர்ந்து பிரச்னைகள் செய்துவருகிறார்கள். நாங்கள் எப்படி இந்த ஊரில் வாழ்வது என்றே தெரியவில்லை. இரண்டு உயிரை இன்று இழந்திருக்கிறோம்” என்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்திய எவிடன்ஸ் கதிர், “கச்சநத்தம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 5 குடும்பங்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் சுமன். இவர்மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே நிறைய வழக்குகள் இருக்கின்றன. கடந்த வருடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கிலும் சுமன் தொடர்புடையவர்.

கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தெய்வேந்திரன், பிரபாகரன் ஆகிய இருவரும் மே 26 அன்று ஊரில் உள்ள கோயிலில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தனர். அந்த வழியாக வந்த சுமன் மற்றும் அவரது கூட்டாளிகளும் எங்கள் முன்னால் “கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறாயா?” என்று கேட்க, இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த தெய்வேந்திரன் இது தொடர்பாக பழையனூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். சுமனும் அவரது கூட்டாளிகளும் தலைமறைவாகிவிட்டனர். இதன் காரணமாக காவல் துறையினர் சுமனின் தந்தையை அழைத்துக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுமன் அருகில் இருக்கும் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த, அவரது சமூகக் கூட்டாளிகள் 20 பேரை அழைத்துக்கொண்டு கச்சநத்தம் கிராமத்திற்கு நேற்றிரவு (மே 28) கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஆறுமுகம், சண்முகராஜன் ஆகிய இருவரும் இறந்தனர். மேலும் ஆறு பேர் உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமன் உட்பட அவரது கூட்டாளிகள் 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இதில் தொடர்புடைய 5 பேர் சரணடைந்துள்ளனர். பாதுகாப்பிற்காக கச்சநத்தம் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்”என்று எவிடன்ஸ் கதிர் தெரிவித்தார்.

ஆக, இந்த ஹைடெக்கான உலகத்திலும் நம் தமிழகத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து கச்சநத்தத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது தலைகுனிவான விஷயம்தான். அதே நேரம் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகராஜன் ஆகிய இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் லதாவுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குக் காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

“இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8.25 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையிலிருந்தும் 1.75 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் நலத் துறையிலிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.