October 6, 2022

ரொம்ப காலத்திற்கு பிறகு ஒரு அழகான நாவல் போன்றதொரு கதை. ஒவ்வொரு காட்சியும் மனதில் ரம்மியமாய் ஒட்டிக்கொள்ள அந்த நாவலின் அத்தியாங்கள் போல் வழுக்கிக் கொண்டே நகர்கிறது. கதை முழுதும் ராஷ்மிகா என்ற கேரக்டரின் பார்வையில் விசாரணையில் நமக்கு சொல்லப்படுகிறது. அதன் மூலமே பல முடிச்சுகள் அவிழ்கின்றன. மொத்த படமும் முடிந்து நிமிர்கின்ற பொழுது ஒரு பேரானுபவத்திலிருந்து வெளிவந்த உணர்வு. இது ஒரு வகையில் இது காதல் படமாக இருந்தாலும், அப்போதைய இந்திய – பாகிஸ்தான் பிரச்னை, இந்தியாவிற்குள் ஊடுருவும் தீவிரவாத அமைப்பு என பல விஷயங்களை, படு சுவாரஸ்யமாகக் கோர்த்து கவனமாக கதையாக்கியுள்ளனர் என்பதுதான் ஹைலைட்.

கதை என்னவென்றால் ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் ஒரு வீர தீர செயல் மூலம் பிரபலமாகிறான். அதை அடுத்து அவன் ஒரு நேர் காணலி அநாதை என்று சொன்னதை வானொலி மூலம் கேட்டு நாடு முழுவதிலிமிருந்து அவனுக்கு உறவுகள் என கடிதம் வருகிறது. அதில் ஒரு கடிதம் நான் உன் மனைவியாக்கும் என வருகிறது, அதிர்ந்து போன அவன் அவளை தேடி போய் பெரும்பாடுப் பட்டு கண்டுபிட்க்கிறான். ஆனால் அவளால் இவன் காதலை ஏற்க முடியவில்லை. அது ஏன்? அவர்களின் காதல் சேர்ந்ததா? என்பதே சீதா ராமம்.

ராணுவ லெப்டினன்ட் ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்ததை காட்டிலும் லவ்வர் பாயாக நடித்திருக்கும் நடிப்பில் செஞ்சுரி அடித்துள்ளார். காதல் வந்த இளைஞரின் உணர்ச்சிகளை தன் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி ராம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்துள்ளார். மிகவும் கடினமான காட்சிகளில் கூட இவரின் அசால்ட்டான நடிப்பு யதார்த்தமாக அமைந்து நடிப்பதே தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே நாயகி மிருணால் தாக்கூர் தான். இவர் எந்த காட்சியில், எந்த பிரேமில், எந்த உடையில் பார்த்தாலும் அழகாக தெரிகிறார், அம்சமாக நடித்திருக்கிறார். குறிப்பாக விண்டேஜ் காட்சிகளாக நகரும் இப்படத்தில், அந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களின் நடை உடை பாவனைகளை மிக அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறியிருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம்.

1964, 1984 என இரண்டு காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. அந்த காலகட்டத்தை அதன் பிரமாண்டத்தை அட்டகாசமாக திரையில் வடித்திருக்கிறார்கள். படத்தின் மேக்கிங் உலகத்தரம். கேமரா எடிட்டிங் இசை , திரைக்கதை என அனைத்தும் ஒரு படத்திற்குள் எப்படி பொருந்திப் போக வேண்டும் என பாடமெடுக்க இது மிகச்சிறந்த படைப்பு.

விஷால் சந்திரசேகர் இசையில் சில பாடல்கள் மட்டும் தரம். பின்னணி இசை உலகத்தரம். பிஎஸ் வினோத் & ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்து பிரமிப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மிருணாள் தாகூர் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் மிக அழகாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இப்படm ஏற்படுத்தும் பிரமிப்புக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது இப்படத்தின் கலை இயக்கம். 1960-களில் ஆரம்பித்து 1980 களில் நடக்கும் கதையாக இருப்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலிக்க சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார் கலை இயக்குநர். அதேபோல, அக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல் அழகான உடைகளை சரியான கலவையில் கொடுத்து படத்தை இன்னமும் மெருகேற்றி உள்ளார் காஸ்ட்யூம் டிசைனர்.

மொத்தத்தில் நாட்டுப்பற்றையும், காதலையும் இரண்டு கண்களாக பாவித்து உருவாக்கப்பட்டப் படைப்பைப் பார்க்காதோர்கள் ஐயோ பாவம் என்றே சொல்லலாம்

மார்க் 4/5