June 23, 2021

வைகோ-வை கேரோ செய்து கேள்விகள் கேட்ட சிங்களர்கள்!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என்று ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சுற்றி வளைத்து சிங்களர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பிதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ:

கடந்த 25ஆம் தேதியன்று ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். அவர் தனது உரையில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும் இருக்கின்ற ஒரே வழி, மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்னையை ஐ.நா.வின் பொதுச்சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத் தமிழர்களுக்கும் நடக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். இந்த உரையை, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர்.

ஆனால், உரை முடித்துவிட்டு இரண்டு எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீங்கள் இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.
உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார்.அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார்.நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார். அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட இலங்கையர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள்.

லட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள்எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள் என்றார். இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம்தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள். அந்தப்பெண்மணி வைகோவுடன்தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள் கவுன்சிலுக்குள் வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது என்று ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்றே வைகோவை அடையாளம் காட்டிச் சிங்களவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலைப்படுகின்றார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.