சிந்துபாத் – விமர்சனம்!

சிந்துபாத் – விமர்சனம்!

தமிழ் நாளிதழ் படிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பேப்பர் தினத்தந்தி. அத் தந்தி டெய்லி படித்த சகலருக்கும் தெரிந்த சித்திரக் கதை கன்னி தீவு. ஆரம்பத்தில் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் சிந்துபாத்தின் மூலக் கதையை அப்படியே படக்கதையாக தொடர்ந்து வெளியிட்டார்கள். ஓவியர் கணு என்பவர் படங்களை வரைந்தார். பிறகு பாலன் போன்றவர்கள் வரைந்தனர். எல்லாம் கறுப்பு வெள்ளை படங்கள்தான். இப்போது வண்ணப் படங்களாக இந்த கதை வருகிறது. அப்புறம் சிந்துபாதின் ஏழு பயணங்களும் முடிந்த பிறகு கதை என்பது வேறு திசையில் கற்பனையாக வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சாதனைக்காக நிறையபேர் இந்த கதையை மாறி மாறி இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். 1960 இல் தொடங்கிய இந்த படக்கதைக்கு, இன்றைக்கு தொடரும் என்று போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கதையை வைத்து நிறைய விஷயங்களில் மற்றவர்களை கிண்டலடிப்பது வழக்கம். பிரச்சினைகள் அல்லது வழக்குகள் வழ வழ என்று இழுத்துக் கொண்டே போனால் தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போகிறது என்பார்கள். ஒருவகையில் சொல்லப் போனால், இப்போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்படும் மெகா சீரியல்களுக்கு முன்னோடியே நம் ‘கன்னித்தீவு’தான். நம்முடைய இந்தக் கிண்டலையெல்லாம் ‘தினத்தந்தி’ சீரியஸாக பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதால்தான் கன்னித்தீவு பல் ஆயிரம் நாளை தாண்டி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகளவில் எந்த ஒரு ‘காமிக்ஸ்’ தொடரும் இத்தனை நாட்களாய் தொடர்ந்ததில்லையாம். அந்த வகையில் இது ஒரு உலக சாதனை. ‘தினத்தந்தி’ நிர்வாகம் இந்தச் சாதனையை கின்னஸுக்கு விண்ணப்பித்தால், நிச்சயம் அப்புத்தகத்திலும் ‘கன்னித்தீவு’ இடம்பெறும்” என்றார், காமிக்ஸ் ஆர்வலரான விஸ்வா. அப்படியாப்பட்ட கன்னிதீவு என்ற பெயரில் ஒரு படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படத்தினை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் மூன்றாவதாக விஜய் சேதுதபதியுடன் இணைந்து எடுத்து ரிலீசும் செய்துள்ளார்.

இதன் கதை என்னவென்று கேட்டால் மலேசியாவில் வேலை செய்யும் அஞ்சலி தாயகம் திரும்புகின்றார். கொஞ்சம் சத்தமாக பேசும் அஞ்சலிக்கு கொஞ்சம் காது கேட்காத விஜய் சேதுபதிக்கு காதல் மலர்கின்றது. இதை அவர்கள் வீட்டில் எதிர்க்கிறார்கள். மீண்டும் மலேசியா திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும்போது அஞ்சலிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறார் விஜய் சேதுபதி. இரண்டு நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லி மலேசியா செல்லும் அஞ்சலி மலேசியாவில் இருந்து சிலரால் தாய்லாந்துக்கு கடத்தப்படுகிறார். அந்த தகவல் அறிந்த விஜய் சேதுபதி தன்னை சிந்துபாத்-தாக நினைத்துக் கொண்டு தாய்லாந்து செல்கிறார். பின்னென்ன தன் லைலாவான அஞ்சலியை மீட்டாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

விஜய் சேதுபதி வழக்கம் போல தன் பங்களிப்பை கச்சிதமாக வழங்கி படத்தை தாங்குகிறார், அஞ்சலி -அந்த கால அங்காடித் தெரு ஹீரோயின் பாணியில் அலட்டல் பெண்ணாக முதல் பாதியில் அசத்துகிறார். விஜய் சேதுபதி மகன் படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வருகிறார், முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாதியில் வரும் விஜய் சேதுபதி – அஞ்சலி க்கு இடையேயான காதல் காட்சிகள் , விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் பண்ணும் காமெடி & அலப்பறை வழக்கமானதாக இருந்தாலும் ரசிக்கும் படி உள்ளது. முதல் பாதி வரை நன்றாக சென்ற காட்சிகள், இடைவேளைக்கு பின் எங்கு நோக்கி செல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது. பிரம்மாண்டமான கதை என்றாலும் திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லை.

எதையுமே மிரட்டலாக செய்யாத வில்லன் என்றாலும் அவர் இண்டர்நேஷனல் தாதா இல்லையா? அவரை நம்ம விஜய் சேதுபதி அசால்ட்டாக வீடு புகுந்து தாக்கி அந்த தாதாவை முழு டம்மியாக்குவது, விஜய் சேதுபதி – அவரது கூடவே இருக்கும் மகன் இருவருக்கும் என்ன உறவு என்று லாஸ்ட் வரை விளக்காதது, எதிர்பாரா திருப்பங்கள், மாஸ் காட்சிகள் போன்ற வழக்கமான மாசலா கதைக்குண்டான எதுவுமில்லாமலும் கொட்டாவி விட வைத்து விடுகிறார்கள்

யுவனின் இசையில் பாடல்கள் கை எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை தனிக் கவனம் பெறுகிறது. விஜய் கார்த்திக் கண்ணன் கேமரா ஒர்க்-க்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

மொத்ததில் இந்த சிந்துபாத் தந்தியில் வரும் சிந்துபாத் பரவாயில்லை என்று சொல்ல வைத்து விட்டான்

மார்க் 2.5 / 5

error: Content is protected !!