மோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு! – சர்வே ரிசல்ட்!

2016-ம் வருஷம் நவம்பர், 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அறிவித்த போது இதன் மூலம் கருப்பு பணத்தை ஒழியும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து அதன் மூலம், வர்த்தகத்தை கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவதுதான் இதன் நோக்கம் என்றும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. மோடி தரப்பில் சொன்னதை போலவே பணத்திற்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதியோர் பலரும் மயங்கி விழுந்து பலியான கொடுமைகளும் அரங்கேறின. ஆனால் பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 19.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளது என்றெல்லாம் தகவல் வெளியான நிலையில் அந்த பண மதிப்பிழப்பு நடந்து முடிந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்து புழக்கத்தில் இருந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அச்சமயம் ஜஸ்ட் 50 நாட்களில் மக்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று அரசு கூறிய நிலையில், இயல்புக்கு வர 6 மாதங்கள் ஆகியது. வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் பணத்தை பெறவும், எடுக்கவும் வரிசையில் நின்று நாடுமுழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்(ஏபியு) ‘ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா’ என்ற தலைப்பில் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில் (சிஎம்ஐஇ) இருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இருந்தே வேலையின்மை அளவு படிப்படியாக அதிகரித்து, பணமதிப்பிழப்புக்குபின் 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுக்கு இடையே நாட்டின் வேலையின்மை இருமடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் வேலையில் இருப்போரில் சதவீதம் அடிப்படையில் பணமதிப்பிழப்புக்கு முன் அதாவது 2016 ஜனவரி முதல் ஏப்ரல் இடையே 78 சதவீதமாக இருந்தது. ஆனால், 2018, டிசம்பர் மாதத்தில் 68 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல நகர்புறங்களிலும் வேலைசெய்வோரின் எண்ணிக்கையும் சதவீதம் அடிப்படையில் 68 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இதுகுறித்து ‘ஸ்டேட் ஆப் வொர்க்கிங் இந்தியா”‘அறிக்கையை தயாரித்த அமித் பசோல் , ” பண மதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், படித்துமுடித்து கனவுகளுடன் வரும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன, தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலைஉருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன.

குறிப்பாக இதற்குக் காரணம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான். பண மதிப் பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் ” எனத் தெரிவித்தார்.

இந்த அறிக்கையில், குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிலும் பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் சந்தையிலும், புள்ளிவிவர அமைப்பு முறையிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது என்று அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.