February 7, 2023

’சைமனர்’களுக்கான இணையதளம்!

மனர்கள் தெரியும், சைமனர்கள் தெரியுமா? சைமனர்களுக்காக சைமனர் ஒருவர் உருவாக்கிய இணையதளம் பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம். இந்த இணையதளம் ஒரு தகவல் சுரங்கம் என்பது மட்டும் அல்ல, அந்த தளமே ஒரு தகவல் தான். ஆம், நிரலாளர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையான ’கித்தப்’ கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கித்தப் கொண்டு இணைய பக்கங்களை உருவாக்கலாம் என்பது, நிரலாளர்கள் சமூகத்திற்கு வெளியே புதிய தகவலாக இருக்கலாம். இப்போது சைமனர்களுக்கு வருவோம். சைமனர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முதலில் ’சைமன் போன்’ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஐபிஎம் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சைமன் போன் தான் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என அறியப்படுகிறது. உலகின் முதல் புரட்சிகர போன் என்றும் ஐபிஎம் சைமனை வர்ணிக்கலாம். ஒரு சாதனத்தை புரட்சிகரமானது என வர்ணிப்பது மிகையாகத் தோன்றினாலும், தொழில்நுட்ப வரலாற்றில் சைமனின் இடத்தை கருத்தில் கொள்ளும் போது, இது பொருத்தமாகவே அமைகிறது. சைமன் ஸ்மார்ட்போன், 1994 ல் அறிமுகமானது என்பதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்திவிடும்.

ஸ்மார்ட்போன்களை மறந்துவிடுவோம், 1994 ல் செல்போன்களே அந்த அளவு பிரபலமாகவில்லை என்பது மட்டும் அல்ல, நாமறிந்த வகையில் இணையமும் கூட பரவலாக அறியப்படாத காலகட்டம் அது. அப்படியிருக்க, இமெயில் மற்றும் பேக்ஸ் அனுப்பும் அம்சங்களோடு போன் பேசும் வசதி கொண்ட கையடக்க சாதனமாக ஐபிஎம் சைமன் அறிமுகமானது. முக்கியமாக அது தொடுதிரை வசதி கொண்டிருந்தது.

செல்போன் வரலாற்றில் முதல் அலைவரிசை காலமாக அறியப்படும் கட்டத்தில் சந்தைக்கு வந்த சைமன் போன், பருமனான அளவு, குறைந்த பேட்டரி திறன் போன்ற பலவீனங்களை கொண்டிருந்தாலும், நாட்காட்டி, ஜிபிஎஸ் இருப்பிட வசதி, கேம்கள் மற்றும் முகவரி புத்தகம் ஆகிய அம்சங்களையும் கொண்டிருந்தது.

இத்தகைய வசதிகள் கொண்ட ஐபோனை, 13 ஆண்டுகளுக்கு பிறகே ஆப்பிள் அறிமுகம் செய்தது எனும் போது, 1994 ல் அறிமுகமான சைமனின் மகத்துவத்தை நன்கு புரிந்து கொள்ளலாம்.

இன்றைய புதிய மாடல் நாளை காலாவதியாவதாக கருதப்படும் செல்போன் உலகில், என்றோ அறிமுகமாகி, காலத்திற்கு முந்தைய தன்மையால் வரவேற்பை பெறாமல் போன் சைமன் போன் பற்றி விவரிப்பது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், செல்போன் வரலாற்றில் சைமன் ஒரு மைல்கல்.

ஏனெனில், எதிர்கால போனில் என்ன எல்லாம் சாத்தியம் என்பதை உணர்த்தக்கூடிய முன்னோடி போனாக சைமன் உருவானது.

சைமனின் தொழில்நுட்ப பெருமைகள் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் என்றாலும், அவற்றை அறிவதற்கான அருமையான இடமாக சைமனர் (https://simoneer.github.io/history/) இணையதளம் அமைந்துள்ளது.

சைமன் போன் தொடர்பான தகவல்களின் ஆவண காப்பகமாக திகழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒரு பக்க இணையதளம், சைமன் வரலாற்றை சுருக்கமாக விவரிக்கிறது. சைமன் வரலாறு தொடர்பான முக்கிய தகவல்களுக்கு பிறகு, ‘ பல விதங்களில் சைமன் காலத்திற்கு முந்தையது” என குறிப்பிடப்பட்டு, அதற்கான விளக்கமும் தொடர்கிறது.

செல்பேசிகள் அனலாக் நுட்பத்தை பயன்படுத்திய காலத்தில் ( 1 ஜி) சைமன், தொலைதூர கம்ப்யூட்டர்களை தொடர்பு கொண்டு தரவுகளை பரிமாற்றம் செய்ய தனக்குள் மோடமை கொண்டிருந்தது. இணையம் பரவலாக அறியப்படுவதற்கு முன்னதாக என்பதால், தொலைதூர கம்ப்யூட்டர்கள் லோட்டஸ் நோட்ஸ் கொண்டு இயங்கின. கம்ப்யூட்டர்கள் கீபோர்டு, பிளாப்பி டிஸ்க் கொண்டு டாஸில் இயங்கிய காலத்தில் சைமன், தொடுதிரையுடன், மெய்நிகர் நினைவாற்றலுடன், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நேவிகேட்டர் கொண்டு இயங்கியது.

இந்த வரிகளில் அடங்கியிருக்கும் தொழில்நுட்ப பாய்ச்சல்களை புரிந்து கொள்ள, டாஸின் முக்கியத்துவம், லோட்டஸ் நோட்ஸ், நேவிகேட்டர் என்று எல்லாவற்றுக்கும் தனியே குறிப்பு எழுத வேண்டும். எனவே, சைமன் போனை தன் காலத்திற்கு முந்தைய போன என சுருக்கமாக வர்ணித்து விடலாம்.

இந்த போனை ஐபிஎம் வடிவமைத்து, மிட்சுபிஷி நிறுவனம் தயாரித்து பெல்சவுத் எனும் செல்லூலார் நிறுவனம் விநியோகித்தது. 1992 காம்டெக்ஸ் கண்காட்சியில் முன்னோட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் சந்தைக்கு வந்தது. துவக்கத்தில் ஆங்லர் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருந்த இந்த போனை, பிராங்க் கனோவா (Frank Canova ) எனும் வடிவமைப்பாளர் உருவாக்கினார்.

அறிமுகமான வேகத்தில் 50 ஆயிரம் போன்கள் விற்பனையான சைமன் பின்னர் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. காரணம், அதன் பயன்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பம் அப்போது அந்த அளவு வளர்ந்திருக்கவில்லை.

இந்த போன பின்னர் நியான் எனும் பெயரில் ஐபிஎம்மால் மேம்படுத்தப்பட்டு அதன் பிறகு, ஸ்மார்ட்போன் வளர்ச்சியை மற்றவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என ஐபிஎம் கைவிட்டதாகவும் இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைமன் போனை புரிந்து கொள்ளக்கூடிய வளங்களும் அடிக்குறிப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.

விக்கிபீடியா பக்கம் உள்பட பல இணையதளங்கள் சைமன் போனுக்காக இருந்தாலும், சைமன் போனின் தொழில்நுட்ப ஆன்மாவை உணர்த்தும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. சைமன் போனை உருவாக்கிய கனோவாவின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் சைமனை உருவாக்கிய குழுவில் இருந்த சக சைமனர்கள் மூலம் திரட்டிய தரவுகள் கொண்டு இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைமனர்கள் பெயர் காரணம் இப்போது புரிந்திருக்கும். தொடர்புடைய இன்னொரு சுவாரஸ்யமான தகவல், சைமன் போன் பற்றிய அறிமுகத்தில் முன்னோடி தொழில்நுட்ப இதழான பைட், பிடிஏக்களின் சைமனாக்கம் என்றே இந்த போனை வர்ணித்துள்ளது. பிடிஏ என்பது தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளர்கள் சாதனங்களை குறிக்கும். பாம் பைலட் போன்ற இத்தகைய கையடக்க சாதனங்கள் பிரபலமாக இருந்த நிலையில், அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக சைமனை வர்ணிக்க, சைமனாக்கம் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. –https://web.archive.org/web/19990221174856/http://byte.com/art/9412/sec11/art3.htm

ஆக, உண்மையில் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சியில் நாம் சைமனாக்கத்தை தான் இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

சைபர்சிம்மன்