February 7, 2023

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

நல்லதொரு படைப்பு என்று சொல்லப்படும் ஒவ்வொன்றும் நம் மனதை வருடி அல்லது கீறி ரண மாக்கி விடும். அதாவது ஆகச் சிறந்த கதை, நாவல் அல்லது கவிதை ஒன்றைப் படித்து முடித்ததும் நம் வாழ்க்கையில் நடந்த சில பல நிகழ்வுகள் நினைவுக்கு வந்து போகும். சில நினைவுகள் பாடாய் படுத்தும். அது போன்றதொரு உணர்வு சில சினிமாக்களாலும் ஏற்படும். அப்படியோர் காதல் நினை வுகளைக் கிளறும் படம்தான் ‘சில்லுக்கருப்பட்டி’ என்று சிம்பிளாய் சொல்லி விடலாம். ஆனால் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் பயன் உள்ளதாக இருக்கும். பனையில் இருந்து உற்பத்தி யாகும் பதநீர் இயற்கை குளிர்பானம் ஆகும். அந்த பதநீர் விற்பனை செய்தது போக எஞ்சிய பதநீரை காய்ச்சி கருப் பட்டி மற்றும் சுக்கு, ஏலக்காய், மிளகு என நான்கும் கலந்த சில்லுக் கருப்பட்டி எனப்படும் புட்டு கருப்பட்டியாகவும் கிடைக்கும். அதன் சுவை அபாரமாக இருக்கும்.. அதே போலொரு சுவையை அதிலும் நான்கு துளியாக கொடுக்கும் இந்த கோலிவுட்டின் கற்பக விருட்சத்தில் உருவாகி உள்ள சில்லுக்கருப்பட்டி சினிமா நிஜமாலுமே பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..!

ஏற்கெனவே ’பூவரசம் பீப்பி’ படம் எடுத்து தனிக் கவனம் பெற்ற ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் மானிடத்தில் நிகழும் பால்ய காதல், பருவக் காதல், பக்குவப்பட்ட காதல், முதுமைக் காதல் என நான்கு வெவ்வேறுக் காலகட்ட கதைகளை ஒன்றாகக் கோர்த்துச் சொல்லும் ‘ஆந்தாலஜி’ வகையைச் சேர்ந்தது. கொஞ்சம் விரிவாக சொல்வ தானால் குப்பைகளை கிளறி அதில் கிடைக்கும் விலையுள்ள பொருட்களை பொறுக்கி வாழும் ஒரு சிறுவன். ஏதோ ஒரு சுழலில் பிங்க் கலர் கவரில் இருக்கும் பொருட்களையும் மட்டும் எடுத்து பாதுக்காத்து வருகிறான். அப்படியான சூழலில் ஒரு பிங்க் கலர் கவரில் வைர மோதிர மொன்று கிடைக்கிறது. அதைக் கண்டு அதிர்ந்து போகும் சிறுவன் அந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறான். அதே சமயம் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த வைஅர் மோதிரத்தை தொலைத்துவிட்டு துயரப்படும் பணக்கார வீட்டு சிறுமி, மோதிரம் திரும்ப கிடைத்தவுடன், அந்த குப்பைப் பொறுக்கும் பொடியனிடன் அதே பிங்க் கவரில் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். இதுதான் காதலா? என்று யோசிப்பதற்குள், நெக்ஸ்ட் எபிசோட் போய் விடுகிறது.

அடுத்த கதையாக மீம்ஸ் உருவாக்கிக் கூட கை நிறைய சம்பாதிக்கும் இளைஞன் மணிகண்ட னுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் ஆணுறுப்பு‘விரை’(இதில் எல்லாமா)யில் கேன்சர் வந்தது தெரிகிறது. இதனால் திருமணம் நின்றும் போகிறது. அதனால் என்னக் கொடுமைடா இது? என்ற நினைப்போடு கால் டாக்ஸி ஒன்றில் மணிகண்டன் போகும் போது, அதே கால் டாக்சியில் பங்கு பயணியாக வரும் ஃபேஷன் டிசைனர் நிவேதிதா சதிஷ் இந்த விரைக் கேன்சர் உள்பட எல்லாம் அறிந்து புரிந்து அவனை அரவணைக்கிறாள்.

இதை அடுத்து வரும் மூன்றாம் கதையில் மனைவியை இழந்து முதிர்ந்த வயதில் தனிமையில் இருக்கும் ஸ்ரீராம், திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழும் லீலா சாம்சனைச் சந்தர்ப்ப சூழ்நிலையால் அடுத்தடுத்து சந்திக்கிறார்.முகமும், மனமும் மலர்கிறார். இதையடுத்து ஒரு கட்டத்தில் தன் அன்பை தெரிவித்து லீலா சாம்சனுடன் அடைக்கலம் ஆகி விடுகிறார்

நான்காவது எபிசோட்டாக தாலிக் கட்டிய கணவனுக்கான மனைவியாகவும், மூன்று பிள்ளை களுக்கான அம்மாவாக, ஒரு இயந்திரம் போல வாழும் சுனைனா, தனது கணவரிடம் இருந்து மட்டுமே குறைந்தப்பட்ச அன்பைக் கோருகிறார்.அவ்வளவே..!

இப்படி முன்னரே சொன்னது போல் நான்கு தனித்தனிக் கதைகளை இணைத்திருந்தாலும் நான்கிலும் இழையும் காதல், அன்பு, சிநேகிதம், நட்பு, பிரியம், பரிவு, வாத்சல்யம் என்ற பல சொல் மூலம் அழைக்கப் படும் ஒற்றை உணர்வையே கொண்டிருப்பதாலும் நான்கு கதைகளின் கேரக்டர் களும், ஒவ்வொரு கதையிலும் வந்து போவதாலும் தனித் தனி கதை என்ற உணர்வே ஏற்பட வில்லை என்பதுதான் சில்லுக்கருப்பட்டியின் ஸ்பெஷல். அதிலும் படத்திற்க்கான கேரக்டர் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையில் நம்மை அல்லது நம்மில் ஒருவரை நினைவூட்டுவது போலவே அமைந்து உள்ளது. எடுத்து கொண்ட மெல்லிய காதல் என்னும் இழை கொஞ்சம் கனமானாலும் காமக் கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ள கதையை அதைத் தாங்கி நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைத்து நடிகர்களுக்குமே ஸ்பெஷல் போக்கே பார்சல்..

அத்துடன் நான்கு பருவக் காதல்(களு)க்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என நான்கு பேர் கேமிராவை கையாண்டுள்ளார்கள். யாரும் சோடை போகவில்லை.. பிரதீப் குமாரின் இசை இந்த சில்லுக் கருப்பட்டியின் சுவையை அதிகரிக்கிறது. வசனம் ஒவ்வொன்றும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் நுழைந்து வாழ்ந்து அங்கிருந்து எடுக்கப்பட்டவை போல் நம் கன்னத்தில் அறைகிறது. யோசிக்க வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. புன்னகைக்க வைக்கிறது. சபாஷ் சொல்லவும் வைக்கிறது. அத்துடன் படம் பார்க்கும் எல்லா பருவத்தினரின் பர்சனல் ஃபீலிங்கையும் கிளறி விட்டதில் இயக்குநர் ஜெயித்து விட்டார் என்றும் சொல்லியே ஆக வேண்டும்.

ஆனாலும் நவீனமயமான இப்போதையைக் காலக் கட்டத்தில் ஒரு கிராமத்துக்கு அழைத்து போய் அங்குள்ள திண்ணை ஒன்றில் உட்கார வைத்து வயதானவர் ஒருவர் கதை சொல்லுவது போல் ஸ்லோமோஷனில் கதையைக் கொண்டு போவதால் கொஞ்சம் நெளிய வைக்கிறது. எடிட்டர் ஒருவரை எக்ஸ்ட்ராவாக போட்டிருந்தால் படம் இன்னும் சுவைக் கூடி இருக்கும்

மொத்தத்தில் இந்த சில்லுக்கருப்பட்டி சுகர் பேஷண்ட் உள்ளிட்ட எல்லா தரப்புக்கும் பிடிக்கும்

மார்க் 3.5 / 5