December 7, 2022

கண்ணுலே காசைக் காட்டப்பா – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் வேட்பாளர்கள்!

மிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் பத்து, பதிமூன்று நாட்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நகரம், பேரூராட்சி, நகராட்சி, கிராம உள்ளிட்ட பகுதிகளுக்கு வேட்பாளர்களுக்கான விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பந்தலுக்கு ரூ.3,500ம், சாமியானா பந்தலுக்கு ரூ.9,500ம், சுவரொட்டிக்கு (ஆயிரம்) ரூ.12,500ம், ஒரு சதுர அடி கட்அவுட்டுக்கு ரூ.65ம். வாழை மரத்துக்கு ரூ.700ம், பட்டாசு (ஆயிரம் வாலா) ரூ.600ம், தொப்பி ரூ.50ம், சைவ பிரியாணி ரூ.100ம், சாப்பாடு ரூ.100ம், சிற்றுண்டி ரூ.100ம், கலவை சாதம் ரூ.50ம், குளிர்பானங்கள் ரூ.75ம், தேநீர் ரூ.10ம், காபி ரூ.15ம், பால் ரூ.15ம், தண்ணீர் ஒரு லிட்டர்ரூ.20ம் நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம். மேலும், மோர் ரூ.10ம், ரஸ்னா ரூ.20ம், மட்டன் பிரியாணி ரூ.200ம், சிக்கன் பிரியாணி ரூ.180ம், 5 நட்சத்திர விடுதி (ஒரு நாள் வாடகை) ரூ.7,500ம், 3 நடசத்திர விடுதி (ஒருநாள் வாடகை) 5,000ம், சாதாரண விடுதி (ஒரு நாள் வாடகை) ரூ.3,500ம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பல திமுக தொண்டர்கள் பாக்கெட் வாட்டர் வாங்கிக் குடிக்கக் கூட காசில்லாமல் அல்லாடுவதாக சேதி வருகிறது.

ஆம்.. இந்த வெயிலையும் தாண்டி கொஞ்சம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக தேர்தல் களம்.. கிட்டத்தட்ட எல்லா ஸ்டார் வேட்பாளர்களும், குறிப்பாக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மினிமம் இரண்டு பி.கே டீம் (சோஷியல் மீடியா பப்ளிசிட்டி) யை நியமித்து அனல் பரக்க பரப்புரை செய்து வருகிறார்கள் இப்படி அன்றாடம் செல்லும் வேட்பாளர்களுக்கு பிரச்சார சுற்றுப்பயணத்தில் தினசரி உடன்வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சாப்பாடு, மற்ற செலவுகள், பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு பாயிண்ட்டிலும் ஒலிப்பெருக்கி அமைக்க, பட்டாசு போட, அங்கு வேட்பாளர்கள் வருவதற்கு முன் திரட்டப்படும் கட்சியினருக்கு சாப்பாடு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன.. ஆனால் விஷயம் என்னவென்றால் இப்படி எல்லா வேட்பாளர்களும் செலவு செய்தாக வேண்டும் என்ற சமாச்சாரமே திமுக தலைவருக்கு ஸ்டாலினுக்கு தெரியவில்லையா ? என்றுதான் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பல வேட்பாளர்கள் வாய் விட்டுக் கேட்டுக் கண்ணீர் வடிக்கிறார்கள்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது அதேபோன்று சட்டமன்ற தேர்தலிலும் நடைபெறும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணியினர் (மட்டும்) நம்புகிறார்கள். இதற்காகவே சுமார் 360 கோடி பேக்கேஜில் பிரசாந்த் கிஷோர் தனியாக வேலை செய்கிறது. ஆனால் அப்ப்டி எல்லாம் கனவு காண்பதை நடக்க விடாமல் திமுகவே தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறது என்றும் குறிப்பாக தென் தமிழகத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் தாங்கள் குறுநில மன்னர்கள் போல் தங்களை நினைத்துக்கொண்டு கூட்டணிக் கட்சிகளை சார்ந்தவர்களையும் வேட்பாளர்களையும் அதட்டி, அசிங்கப்படுத்தி இப்போதே அலட்சியப்படுத்துகிறார்கள் என்று நம் ஆந்தை டெஸ்க் கவனத்துக்கு செய்தி மேல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன்.

உதாரணத்துக்கு தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது இந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சரியாக வேலை செய்வதாக தெரியவில்லை அதே சமயத்தில் காந்தி விஷயத்தில் கறாராக இருக்கிறார்கள் தங்களுக்கு வர வேண்டிய காந்தி- களை கொடுத்தால் வேலை செய்வதாக வேட்பாளருக்கு வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள் . அதிலும் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள், 25 பேரில், பாதி பேர் பணம் படைத்தவர்கள். மீதிப்பேர், தேர்தல் செலவு செய்கிற அளவுக்கு செல்வந்தரல்ல. என்றாலும், நேர்காணலில், இத்தனை கோடி செலவு செய்வதாக, சும்மானாச்சும் சொல்லி ‘சீட்’ வாங்கி விட்டனர். இதை அடுத்து பட்டியலில் பெயர் வந்ததும் சந்தோஷம் அடைந்தவர்கள், தொகுதியில் கால் வைத்ததும், மிரண்டு போய் விட்டார்களாம். சொந்தக்கட்சி, கூட்டணி கட்சி என கூட்டம் கூட்டமாக வர துவங்கி விட்டனர்.

‘லிஸ்ட்’ போட்டு, இன்னாருக்கு இவ்வளவு என்ற ரீதியில், பேசத் துவங்கிய பின் தான், பெட்டி பெட்டியாக பணம் தேவை என்பது தெரிய வந்திருக்கிறது.உடனடியாக கட்சி தலைமைக்கு போன் போட்டு, நிலவரத்தை சொல்லி, ‘டில்லியில பேசுங்க. எப்படியாவது, அஞ்சு, ‘சி’ வாங்கி குடுங்க’ என்று கெஞ்சாத குறைதானாம். ‘டில்லியிலயா… நயா பைசா தேறாது’ என்று, பவன் வட்டாரத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதிலும் டெல்லி தொடங்கி சென்னை வரையிலான கட்சி ஆபீஸ் ஊழியர்களுக்கு சம்பளம் போடவே வழியில்லாமல் பரிதாப நிலையில் இருக்கிறோம் என்று தி.மு.க., – மா.செ.,க்களிடம், ‘உங்க தலைமைகிட்ட சொல்லி, ஏற்பாடு செய்யுங்க’ என, மன்றாடுவதாக தகவல்.

அதே சமயம் பல வேட்பாளர்களும் வேறு வழியில்லாமல் கையில் உள்ள அனைத்தையும் காட்டி புலம்புகிறார்களாம் இதனால் வெறுப்படைந்த கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடாமல் வாக்குகளை சிதறடிக்க செய்கிறார்கள். ஆனால் அதிமுக அமைச்சர்கள், அக்கட்சியின் மற்ற வேட்பாளர்கள், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ற மூன்று அடிப்படையில் திமுக வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை செலவுக்கு பணம் வழங்க திட்டமிட்டு வருகிறது. இதில், திமுகவின் மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளைக் காட்டிலும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு 50 சதவீதம் கூடுதல் தேர்தல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது, என்றெல்லாம் செய்தி மட்டும் வருகிறது.

ஆனால் இப்போதைக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. பொதுவாக தேர்தல் களத்தில் மிகப்பெரிய செலவாகப் பார்க்கப்படுவது பூத் கமிட்டிக்குக் கொடுக்கப்படும் பணம்தான். அந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., முதல் ரவுண்டாக ஒவ்வொரு பூத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார்களாம். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளைத் தவிர பல வேட்பாளர்கள் பூத் கமிட்டிக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். நம்மிடம் பேசிய கொங்கு மண்டல தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர், “பத்து வருஷமா நாங்க ஆட்சியில இல்லை… வேட்புமனுத் தாக்கல் செய்யவே பல தி.மு.க வேட்பாளர்கள் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் நிலைதான் உள்ளது. தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது 40 லட்சத்துக்குக் குறையாமல் செலவாகிறது. மாவட்டத்தில், ‘யார் இந்தச் செலவைப் பிரித்துக்கொள்வது?’ என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள், சர்ச்சைகள் வருகின்றன. பக்கத்துத் தொகுதிக்குத் தலைவர் வரும்போது, ஒட்டிக்கொண்டு நின்றுவிடலாம் என்று பலரும் கணக்கு போடுகிறார்கள். தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கே தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைதான் இருக்கிறது.

இதனால் திமுகவுக்குதான் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்

கண்டு கொள்வாரா ஸ்டாலின்!