ஷிண்டே அணிக்கே சிவசேனா சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஷிண்டே அணிக்கே சிவசேனா சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

காராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஆண்டு, ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் தனி அணியாகவும் செயல்பட்டுவருகிறது. தேர்தல் கமிஷன் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை முடக்கியது. அதோடு இரு அணிகளுக்கும் தற்காலிமாகத் தனித்தனிச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வில் அம்பு சின்னத்தை முடக்கும் தேர்தல் கமிஷனின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் தாக்கல்செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரண்டில் யாரது அணி உண்மையான சிவசேனா என்று முடிவுசெய்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. தேர்தல் கமிஷனும் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தேர்தல் கமிஷன் இரு தரப்பினரும், தங்களிடமிருக்கும் ஆதாரங்களைத் தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேரின் ஆதரவு இருக்கிறது. எம்.பி-க்கள் ஆதரவும் ஷிண்டே அணிக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், தனது முடிவை ஒத்திவைத்திருந்தது. சுப்ரீம் கோர்ட் வரும் 21-ம் தேதி இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தவிருந்த நிலையில், திடீரென தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவித்திருக்கிறது. இதன்படி சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை, தேர்தல் கமிஷன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு ஒடுக்கீடு செய்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் நேற்று தனது தீர்ப்பில், இதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கை பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

சுப்ரீம் கோர்ட் அவ்வாறு தெரிவித்தவுடன் தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தேர்தல் கமிஷனின் தீர்ப்பு உத்தவ் தாக்கரே அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஓரிரு மாதங்களில் மாநகராட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு உத்தவ் தாக்கரேவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “இந்தத் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்ததுதான். தேர்தல் கமிஷன்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றார். தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவிருக்கிறது.

error: Content is protected !!