மீ டு பிரச்னையா? முதலில் ஷீ பாக்ஸில் புகார் கொடுங்க!

மீ டு பிரச்னையா? முதலில் ஷீ பாக்ஸில் புகார் கொடுங்க!

மீடு என்னும் இயக்கத்தின் மூலம் அனைத்து துறை பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் மேனகாகாந்தி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி 3 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர்களின் குழு அமைத்திருப்பது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை என்று சொல்கிறார் சமூக சேவகி ரஞ்சனா குமாரி. “இந்தக் குழுவால் எந்த பலனும் இருக்காது. பிரச்சனைகளை நீர்த்து போகச் செய்வதற்கான அரசின் முயற்சி இது” என்று அவர் கூறுகிறார்..

கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் அலுவலக உயரதிகாரியால் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் சுவாதி. அடிக்கடி தனது அறைக்கு சுவாதியை அழைப்பதில் தொடங்கிய உயரதிகாரி யின் செயல், ஆபாச நகைச்சுவைகளை சொல்வது என மாறியபோது சங்கடமாக உணர்ந்தார். ஒருநாள் பேச்சுவாக்கில் ஆபாச வீடியோ ஒன்றையும் காட்டினார் அதிகாரி. நிலைமை எல்லை மீறிவிட்டதை உணர்ந்த சுவாதி, அலுவலகத்தில் புகார் அளித்தார். விதிமுறைகளின்படி இது போன்ற பாலியல் ரீதியிலான புகார்களை விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும் சுவாதியின் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. திடீரென்று அவரது பணியில் குறைகள் அதிக அளவில் சுட்டிக்காட்டப்பட்டன. சில நாட்களிலேயே, பணியில் கவனக்குறைவாக இருப்பதால் சுவாதி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று கூறி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். உயர்திகாரியின் மீதான புகாருக்கு, தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இது என்று சொல்லும் சுவாதி, ஆனால் தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றே தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் என்பதுதான் நிஜம்.

இத்தனைக்கும் நம் நாட்டில் 2013ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் பணி யிடங் களில் எழுப்பப்படும் பாலியல் புகார்களை தீர்ப்பதற்கு, விசாரணைக் குழுக்கள் உருவாக்கப் பட்டிருந்தாலும், அவை முறையாக செயல்படுகிறதா இல்லையா, இதை கண்காணிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது.

சட்டத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு பெண் தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும். விசாரணைக் குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் முறைகேடுகள் தொடர்பாக பணியாற்றிவரும் வெளி அமைப்பு ஒன்றின் பிரதிநிதியும் குழுவில் இடம்பெறவேண்டும்.

ஆனால், தனது அலுவலக விசாரணைக் குழுவின் நடுநிலைத்தன்மை பற்றி புகார் கொடுத்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அது குறித்து அறிந்து கொள்ள ‘ஷி-பாக்ஸ்’ என்ற ஒரு வலைதளத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. ‘http://www.shebox.nic.in/’ என்ற ஆன்லைன் புகார்களுக்கான வலைதளத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் துவக்கியிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், முறைசார் மாற்றும் முறைசாரா அமைப்புகளை சேர்ந்த பெண்கள் என பலதரப்பட்ட பெண்களும் இந்த வலைதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம்.

இந்த ‘ஷி-பாக்ஸ்’ எப்படி வேலை செய்கிறது? என்று கேட்டால் http://www.shebox.nic.in/ என்ற வலை தளத்திற்கு சென்று, அங்கிருக்கும் இரண்டு தெரிவுகளில் உங்கள் துறைக்கு உரிய தெரிவில் கிளிக் செய்யவும். அதன் பிறகு அங்கிருக்கும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களையும், நீங்கள் புகார் தெரிவிக்கும் நபர் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டும். அலுவலகம் தொடர்பான தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

போர்டலில் புகார் பதிவு செய்த பிறகு, அது தேசிய பெண்கள் ஆணையத்திற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்படும். அந்த புகாரை, தேசிய மகளிர் ஆணையம், குறிப்பிட்ட அலுவலகத்தின் புகார் குழு அல்லது உள்ளூர் புகார் குழு (பணியாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக இருந்தால்)விற்கு அனுப்பப்பட்டு, அறிக்கை கோரப்படும்.

இதன் பிறகு, அலுவலக உள் விசாரணைக் குழு நடவடிக்கை எடுக்கும். அந்த வழக்கை அமைச்சகம் கண்காணிக்கும். புகாரளித்த பெண், அந்த வலைதளத்தின் மூலமாக தனது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். இதற்காக, புகாரளித்தவருக்கு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். அதன் மூலமாக அவர் ஷி-பாக்ஸ் போர்ட்டலில் பயன்படுத்தலாம்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மாவிடம் இது பற்றி விசாரித்த போது. “புகார் தாரரின் அலுவலகத்தில் இருக்கும் உள் விசாரணைக் குழுவிடம் இருந்து அறிக்கையை பெறுவோம்.  முதலில் அவர்களிடம் புகார் வந்ததா என்பதை கேட்டறிவோம். புகாரைப் பெற்றிருந் தால், மூன்று மாதங்களுக்குள் அதன்மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால், அது பற்றிய விளக்கம் கேட்போம். புகாரளித்த பெண் பிறகு தொந்தரவு செய்யப்பட்டாரா என்பதையும் புகார்தாரரிடம் விசாரிப்போம். விசாரணை முழுவதையும் நாங்கள் கண்காணிப்போம். புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தால், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்திற்கு வழக்கு கொண்டு செல்லப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

“வழக்கு மிகவும் பழையதாக இருந்தாலும், இப்போது புகார்தாரரும், தவறிழைத்தவரும் ஒன்றாக வேலை செய்யவில்லை என்றாலும் கூட, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண் புகார் செய்யலாம். இந்த வழக்குகள் அந்த அலுவலகத்தின் உள் விசாரணைக் குழுவிற்கு அனுப்பப்படாது, நேராக காவல்துறைக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட பெண்கள் நீதிமன்றத்திற்கும் செல்லலாம்.  மேலும் #MeToo பிரசாரத்திற்குப் பிறகு, தேசிய மகளிர் ஆணையம், பெண்களுக்கான பிரத்யேக [email protected] ஐயும் தொடங்கியுள்ளது.” என்றும் சொன்னார்

தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறார் ஏஷ்யன் ஏஜ் பத்திரிகையின் சுபர்ணா ஷர்மா. இவர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தவர்களில் ஒருவர்.

“வெளியில் இருந்து ஒருவர் விசாரணையை கண்காணிப்பது உண்மையிலுமே நல்லதுதான்” என்கிறார் சுபர்ணா ஷர்மா. ஒரு பெண் தனது முதலாளிக்கு எதிராக புகார் செய்தால் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் இந்த ஷி-பாக்ஸ் முறையாகக் கையாளப்படுவது அவசியம். இல்லாவிட்டால், இத்தனை உதவிகள் முன் வைக்கப்பட்டாலும், அதனால் பயனேதும் இருக்காது.

அதிலும் அந்த ”

ஷி-பாக்ஸ் எப்போது தொடங்கப்பட்டது? என்று தெரியுமா?

2013ஆம் ஆண்டு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் உருவாக்கப்பட்டபோது, அது சரியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஷி-பாக்ஸ் எப்போது தொடங்கப்பட்டது. தற்போது #MeToo பிரசாரத்திற்கு பிறகு, அது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2014 முதல் 2018 வரை ஷி-பாக்ஸ்க்கு சுமார் 191 புகார்கள் வந்துள்ளன. ஆனால்

நான்கு ஆண்டுகளில் 191 புகார்கள் மட்டும்தானா? என்ற கேள்வியை எழுப்புகிறார் சமூக சேவகி ரஞ்சனா குமாரி.

சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட #MeToo பிரசாரத்திற்கு வந்திருக்கும் புகார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு என்று அவர் கூறுகிறார்.

மேலும் ஷி-பாக்ஸ் என்ற அரசின் புகார் வலைதளம் இருப்பதே பெண்களுக்குத் தெரியாது என்று சொல்கிறார் ரஞ்சனா குமாரி.

ஷி-பாக்ஸ் பற்றி தனக்கு தெரியாது என்கிறார் சுவாதி. தனக்கு அது தெரிந்திருந்தால், நியாயம் கிடைத்திருக்கும் என்று அவர் வருத்தப்படுகிறார்.

“ஷி-பாக்ஸ் பற்றி பெண்களுக்கு அரசு தெரியப்படுத்தவேண்டும். ஷி-பாக்ஸ்க்கு வரும் புகார்கள், அதில் பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா போன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடவேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் கொடுக்கும்” என்று சொல்கிறார் ரஞ்சனா குமாரி.

“தகவல் தெரிந்தால் தானே ஷி-பாக்ஸில் புகார் அளிக்க முடியுமா? இல்லாவிட்டால், ஷி-பாக்சும் பிற உதவி எண்கள், வலைதளங்கள், திட்டங்கள் போன்று ஆவணங்களிலேயே தேங்கிவிடும்” என்று எச்சரிக்கிறார் ரஞ்சனா.

இந்தியாவில் முறைசாராத் துறையில் பெருமளவிலான பெண்கள் பணியாற்றுகின்றனர்   –  BBC

‘படித்த பெண்களுக்கானது’

எல்லா பெண்களும் ஷி-பாக்ஸ் மூலமாக புகாரளிக்கலாம் என்று அமைச்சகம் கூறினாலும், இது படித்த பெண்களுக்கும், ஆங்கிலம் தெரிந்த பெண்களுக்கு மட்டுமானது என்கிறார் ரஞ்சனா.

“இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் இன்னும் இணையதளத்தை அணுகவே இல்லை. #MeToo போன்றே, ஷி-பாக்சும் படித்த, ஆங்கிலம் தெரிந்த பெண்களுக்கானது என்ற நிலையில், கல்வியறிவில்லாத பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை எப்படி ஆவணப்படுத்துவார்கள்? ஆனால் படித்தப் பெண்களுக்கும் ஷி-பாக்ஸ் மூலம் ஏதாவது நன்மை ஏற்படுகிறதா என்பதும் தெரியவில்லை” என்று கூறுகிறார் ரஞ்சனா.

“அரசு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும், இப்படி ஒரு அரசின் வலைதளம் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரியது” என்கிறார் ரஞ்சனா குமாரி.

ஷி-பாக்ஸ் பற்றி பெண்களுக்கு தெரியவில்லை என்றாலும், தேசிய மகளிர் ஆணையம் இந்த ஆண்டு இதுவரை 780 பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெற்றுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்கள்த்தொகையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான எண்ணிக்கையே. தகவல் தெரியாததுதான் காரணம் என்று கூறலாமா? அல்லது புகாரளிக்கும் தைரியம் பெண்களுக்கு வரவில்லை என்று புரிந்து கொள்வதா?

சுபர்ணா ஷர்மாவின் இதற்கு பதிலளிக்கிறார். “நம்முடைய அமைப்பு மந்தமாக செயல்படுகிறது. அதோடு, பல பெண்கள் மெளனத்தை உடைக்க தயாராக இல்லை. அவர்களுக்கு தைரியம் கொடுத்து, ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.”

அமைச்சர்களின் குழு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்துதலை தடுக்கும் சட்டத்தை இந்த குழு மறுபரிசீலனை செய்யும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்குள், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்தக் குழு பரிந்துரை செய்யும்.

இந்தக் குழுவில், நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி, நிதின் கட்கரி ஆகிய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சர்களின் குழு அமைத்திருப்பது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை என்று சொல்கிறார் சமூக சேவகி ரஞ்சனா குமாரி. “இந்தக் குழுவால் எந்த பலனும் இருக்காது. பிரச்சனைகளை நீர்த்து போகச் செய்வதற்கான அரசின் முயற்சி இது” என்று அவர் கூறுகிறார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக வாக்குறுதிகளை அளிப்பதில் மட்டுமே அரசு முனைப்பு காட்டுகிறது. இப்படி குழுக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பொதுமக்களிடமிருந்து இதுதொடர்பான கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் சட்டத்தை கட்டமைக்க வேண்டும்” என்கிறார் ரஞ்சனா குமாரி.

error: Content is protected !!