‘துலாபாரம்’ தராசு அறுந்து படுகாயம்: சசிதரூரை சந்தித்து நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்!

துலாபாரத்தில் தனது எடைக்கு எடை வாழைப்பழம் காணிக்கையாக அளிக்க முயன்றபோது, தராசின் இரும்பு கம்பி தலையில் பட்டு  படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் 3-வது முறையாக போட்டி யிடுகிறார். நேற்று மலையாள வருடப் பிறப்பு என்பதால் கேரளாவில் உள்ள கோவில்களில் விசே‌ஷ வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலுக்கு சசிதரூர் சென்றார். அங்கு அவர் வழிபாடு நடத்திவிட்டு தனது எடைக்கு எடை தானியங்கள், பழங்கள் துலாபார காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

இதற்காக தராசின் ஒரு தட்டில் மலர்கள், தானியங்கள், பழங்கள் வைக்கப்பட்டது. மறு தட்டில் சசி தரூர் அமர்ந்து இருந்த போது தராசின் கொக்கி உடைத்து அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்ததால் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சசிதரூரின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சசிதரூரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார். அப்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் நிர்மலா கேட்டு அறிந்தார்.

தன்னை நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி சசிதரூர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில்  ‘இந்திய அரசியலில் இந்தப் பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக அவரைப் பார்க்கிறேன். தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசிதரூர்  குறிப்பிட்டுள்ளார்.