June 23, 2021

ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் சமீபத்தில் விலகினார். ஜக்மோகன் டால்மியாவுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டு கடந்த 7 மாதங்கள் அதில் நீடித்திருந்த சஷாங்க் மனோகர், பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூருக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பினார். அதில், பிசிசிஐ தலைவர், ஐசிசிக்கான இந்திய மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பிரதிநிதி ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

cri mar 12

ஐசிசி விதிகளில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, ஐசிசி தலைவராக போட்டியிடும் நபர் வேறு எந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி லோதா தலைமையிலான குழு ‘ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்று பரிந்துரைத்துள்ள நிலையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார். ஐசிசி தலைவர் பதவிக்கு தனக்கான அனைத்து வாய்ப்புகளும் உறுதியாகியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

இந்நிலையில், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். அவர், ஐசிசி தலைவராக இரண்டு வருடங்கள் பதவி வகிப்பார்.