April 13, 2021

வாட்சன் கிரிக்கெட் போட்டிகளுக்கு டாட்டா!

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். உட்பட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் ஒருந்தும் ஓய்வு பெறப்போவதாக ஷேன் வாட்சன் நேற்று அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், சி.எஸ்.கே அணியில் ஷேன் வாட்சன் பயிற்சியாளராகவோ அல்லது பேட்டிங் ஆலோசகராகவோ ஷேன் வாட்சன் தொடர்ந்து பணியாற்றுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டுகிறது. சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனியுடனான அவரது நட்பே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நடப்பாண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்ட தடங்கல்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்றுவருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை நேற்று விளையாடியது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி முதல்முறையாக இந்த ஆண்டு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. தொடக்க போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்த சென்னை அணி கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றிப்பெற்றது.

போட்டிக்கு பின்னர் உடை மாற்றும் அறையில் தனது சக வீரர்கள் முன்னிலையில் பேசிய ஷேன் வாட்சன் ஐ.பி.எல். உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார். இந்த செய்தியை அவர் தெரிவிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசமான மனநிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் கடந்த 2018 ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொண்டது. அந்த தொடரில் இருந்தே ஷேன் வாட்சனும் சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்தார். அந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல ஷேன் வாட்சன் மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2018ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்து சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார் வாட்சன்.

அதுமட்டும் அல்லாமல் சென்னை அணிக்காக 2019 மற்றும் 2020ம் ஆண்டும் விளையாடி பல வெற்றிகளை தேடி தந்துள்ளார் ஷேன் வாட்சன். 2018ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றிருந்தாலும் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியதன் மூலம் ரசிகர்கள் மனங்களில் தொடர்ந்து நிலைபெற்று வந்தார். மொத்தம் 145 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன் 43 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் 59 டெஸ்ட், 190 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காவும் வாட்சன் விளையாடியுள்ளார்.