ஆடைக்கு மேல் சிறுமியின் மார்பைத் தொட்டாலும் குற்றமே- சுப்ரீம் கோர்ட்!

ஆடைக்கு மேல் சிறுமியின் மார்பைத் தொட்டாலும் குற்றமே- சுப்ரீம் கோர்ட்!

பொதுவாக ஆடைக்கு மேல் தொட்டால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று கூறிய மும்பை ஐகோர்ட் நாக்பூர் அமர்வு தீர்ப்பு, பலதரப்பினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் மார்பகத்தைத் தடவியிருக்கிறார் என்பதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சட்டப்பிரிவு 7-ன் கீழ் தோல் மீது தோல்பட்டு செய்யப்படும் அத்துமீறல்கள்தான் பாலியல் தாக்குதலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 7-வது சட்டப் பிரிவுப்படி பாலியல் நோக்கத்தோடு பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டதாக இருக்க வேண்டும். அதனால் , இதைப் பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்திருந்தது, இது போன்ற மற்ற வழக்குகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்த நிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று மேற்படி தீர்ப்பை ரத்து செய்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சதீஷ் ரெக்டே என்பவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியைக் கொய்யாப்பழம் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவ வழக்கை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து சதீஷ் ரெக்டே மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, போக்சோ சட்டத்தில் பாலியல் நோக்கத்துடன் ஒருவரைத் தோலுடன் தோல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். பாலியல் நோக்கத்துடன் விருப்பமில்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால், அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது என்று தெரிவித்திருந்தார்.

பெண் நீதிபதியின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த முறையீட்டை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மும்பை ஐகோர்ட் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு, மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்தது.

மேலும் குற்றவாளியைச் சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம். ஆடைக்கு மேலோ அல்லது உடலினை உரசியோ எப்படியாக இருந்தாலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் என்ற நோக்கத்தில் தொட்டாலே, அது குற்றம் தான் என்று கருத்து தெரிவித்தது. மேலும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

Related Posts

error: Content is protected !!