October 21, 2021

சென்னையில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகம்! –

நம் இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் முன்னரே வெளியான ஓர் ஆய்வில் தெரிய வந்ததும் அதிலும் உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள் என்பதும் தெரிந்திருக்கும்.

child mar 7

இன்றைய சூழ்நிலையில் உலகிலேயே அதிகம் பாலியல் வன்முறைகள் நிகழும் நாடாக இந்தியா மாறியிருக்கின்றது. தேசிய குற்றப் பதிவு அமைப்பின் கணிப்பின் படி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் மீதான குற்றம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது என்பது தெரிய வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொடுமைகள், ஆணவக் கொலைகள், பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் தொழில் தள்ளப்படுதல், கட்டாயத் திருமணங்கள், ஆசிட் வீசுதல், சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள் என கட்டுக்கடங்காத வகையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

அதிலும் இத்தகைய பாலியல், வன்முறைகள் தினம் தினம் சின்னத்திரை மூலம் நமது வீட்டு வரவேற்பு அறைக்குள் வந்து உரத்தக் குரலில்தான் சொல்கின்றன. ஆனால் நாம் தான் அவற்றைக் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் வாழ்கின்றோம். கடந்த 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். மற்றும் பாலியல் வன்கொடுமைக் குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர் என்பதெல்லாம் முன்னரே வெளியான தகவல்கள்தான்.

இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை -சென்னையில் அதிகளவில் நடந்தது தெரியவந்துள்ளது பேரதிச்சியாகவே இருக்கிறது.. இந்த குழந்தை பலாத்கார குற்றவாளிகளுக்கு கருணை அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின் படி, தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் சென்னையில் அதிகளவில் நடந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி, சேலம், வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் காணப்படுவதாக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ஆயிரத்து 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், சட்டத்தின் தவறு மற்றும், மறைக்கப்பட்ட உண்மைகளால் 26 வழக்குகள் முடிந்ததாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தொடர்பான குற்றங்களை சென்னை போன்ற பெருநகரங்கள் கண்டுகொள்வதில்லை என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் பெரும்பாலான குற்றவாளிகள் தப்பிவிடுவதாகவும், வேதனை தெரிவித்துள்ளனர். வழக்கு ஒன்றில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 45 வயதுடைய ஆட்டோ ஓட்டுனருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டதாக கூறிய வழக்கறிஞர் போஸ்கோ, குற்றவாளி சிறை தண்டனை அனுபவிக்காமல் பெயில் பெற்று மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார்.

குற்றவாளிகள் மீதான தண்டனைகளை சீர்திருத்தம் செய்து, கடுமையாக்க வேண்டும் என பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறியுள்ளார். தண்டனைகள் கடுமையாக்கப்படாவிட்டால், அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.