November 27, 2022

பொய் சத்தியம் செய்து பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது – ஒடிசா ஐகோர்ட் அதிரடி

காதல் – முன்னொரு காலம் வரை இது புனிதமானது.. அந்த கால காதலில் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் காமம் என்பது துளியும் தலைக் காட்டாது.. அதே சமயம் காதலிக்கும் பருவத்திலேயே காதலர்கள் செக்ஸில் ஈடுபடுவது என்பது மேலைநாட்டுக் கலாச்சாரம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் காதலிக்கத் துவங்கும் போதே செக்ஸிலும் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் காதல் என்பது செக்ஸோடு இணைந்தது. காதலின் ஒரு அங்கமாக நாம் முத்தமிடுதலை நினைக்கும் போது, அவர்கள் செக்ஸை நினைக்கின்றனர். இத்தகைய மேலை நாட்டு கலாச்சாரம் நைஸாக நம் நாட்டிற்குள்ளும் ஊடுருவி, திருமணத்திற்கு முன்னதாக செக்ஸ்வாழ்க்கை அல்லது காதலிக்கும்போதே செக்ஸில் ஈடுபடுவது தவறில்லை என்ற எண்ணத்தை பெரும் அளவில் மனதில் உருவாக ஆரம்பித்துள்ளது.

இது குறித்து இந்திய அளவில் அண்மையில் ஆன்லைன் சர்வே எடுத்த போது 90சதம் பேர் இப்படியான தப்பில்லை மனநிலையில் இருப்பது தெரிந்தது. இந்நிலையில் ஆண் – பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது என ஒடிசா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஒடிசா ஸ்டேட் கோராபுட் டிஸ்ட்ரிக்கைச் சேர்ந்த அச்யுத் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான பழங்குடியின இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே பாலியல் ரீதியான உறவு இருந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.

அதை தொடர்ந்து போன ஆண்டு நவம்பரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அச்யுத் குமார், பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும், இரண்டு முறை மாத்திரைகள் கொடுத்து கருவைக் கலைத்ததாகவும் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

இதை அடுத்து, அச்யுத் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கீழ் நீதி மன்றத்தில் அச்யுத் குமார் தாக்கல் செய்ய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட நிலையில், ஒடிசா ஐகோர்ட்டில் முறையிட்டார்.

இந்த மனு நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் ஜாமீன் வழங்கி யதுடன் அரசு தரப்புக்கு ஒத்துழைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டக் கூடாது என்று அச்யுத் குமாருக்கு நிபந்தனைகள் விதித்தார். மேலும், திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும், ஆண் – பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது.

பெண்கள், விருப்பத்தின்பேரில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் விவகாரங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை பயன்படுத்துவது சரிதானா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றார். இருப்பினும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, ஏழை பெண்களை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஆண்களால் பாலியல் உறவு கொள்ளப்பட்டால், அதற்கு தீர்வு காண பாலியல் வன்கொடுமை சட்டங்கள் தவறி விடுகின்றன என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.