நம் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி தொடர் வீழ்ச்சி பாதையில் போகிறது!

நம் மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”2018-19ஆம் நிதி யாண்டின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதற்கு தனிநபர் நுகர்வு குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே நிலையான முதலீடுகள் அதிகரித்துள்ளதும், ஏற்று மதியில் போதுமான வளர்ச்சி இல்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை” என்று தெரிவித்திருந்த நிலையில்  நிக்கி இந்தியாவின் சேவை வர்த்தக வளர்ச்சி குறியீட்டு எண் கடந்த மார்ச் மாதம் 52 ஆக இருந்த நிலையில் 2019-20 நிதியாண்டின் துவக்கமான ஏப்ரல் மாதத்தில் 51 ஆக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏழு மாதங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பி.எம்.ஐ குறியீட்டு எண் 50க்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சி விரிவடைவதாகவும் 50க்கும் குறைவாக இருந்தால் வளர்ச்சி குறைவதாகவும் அர்த்தமாக்கும்.

இந்த ஆய்வறிக்கையை தயாரித்த ஐஎச்.எஸ் மார்கிட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் போலியானா டி லிமா இது குறித்து விளக்கிய போது, “இந்திய தனியார் துறையின் பொருளாதாரம் பலவீனமான வளர்ச்சிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும் தற்போதுள்ள மந்தநிலைக்கும் தேர்தல்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் தொடர்பு உள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்ததும் நிறுவனங்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சேவை துறை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவுக்கு தேர்தலை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன. அதிகரிக்கும் போட்டித்தன்மை, அதிகரித்துள்ள ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை புதிய வர்த்தக ஆதாயங்களை கட்டுப்படுத்தியுள்ளன, மேலும் சேவைத்துறை நடவடிக்கைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று போலியானா டி லிமா தெரிவித்துள்ளார். அதேசமயம் நம்பிக்கையூட்டும் வளர்ச்சித் திட்டங்கள் புதிய வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் சேவைத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் போலியானா டி லிமா கூறியுள்ளார்.

இதற்கிடையில், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்துறையை பொறுத்தவரை நிக்கி இந்தியா குறியீட்டு எண் மார்ச் மாதத்தின் 52.7 புள்ளிகளில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 51.7 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வைப் பொறுத்தவரை, உள்ளீட்டு செலவுகள் மற்றும் வெளியீட்டுக் கட்டணங்களுக்கான பணவீக்க வீதங்கள் பலவீனமாகவே உள்ளன.

இந்த முடிவுகளிலிருந்து தெரியவரும் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள பணவீக்க அழுத்தங்களின் பற்றாக்குறை ஆகும். இது மெது வான பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்திருப்பதோடு, மறு மதிப்பீட்டு விகிதத்தில் வெட்டு விழுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, மத்திய புள்ளியியல் அலுவலகமும், 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.