April 2, 2023

செரீனா வில்லியம்ஸ் : டென்னிஸ் ஆட்டத்துக்கு டாட்டா சொல்லிட்டார்!

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்து கண்ணீருடன் விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் ,23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7–-5, 6-–7, 6–-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். 41வயதாகும் இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியம்ஸ் கண்ணீருடன் நிறைவு செய்தார். ஆட்ட முடிவில் கண்ணீர் விட்டபடி டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இது பலரது ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. செரீனா தனது கையில் அன்பு சின்னத்தை காட்டி கண்ணீர் விட்டபடி புறப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும். அந்த சூழல் தற்போது எனக்கும் வந்துள்ளது. நான் டென்னிஸை ரசிக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. நான் ஒரு தாயாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை. நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம். நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான மற்ற விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். நான் ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் நிச்சயம் டென்னிஸில் இருந்து விலகி இருக்க மாட்டேன் . தற்போது என் குழந்தையை வளர்பதில் நான் கவணம் செலுத்த வேண்டும் என கூறினார்.