September 27, 2021

பிரெஞ்ச் ஓபனில் களமிறங்கினார் செரீனா வில்லியம்ஸ்!

அம்மா-வாகி விட்ட வில்லியம்ஸ் வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்குகிறார்.

உலகின் தலைசிறந்த டென்னிஸ் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனும் காதலித்து வந்தனர். திருமணம் நடக்காமலேயே செரீனா கருவுற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என்ற பெயர் சூட்டப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு மாதம் கழித்து மீண்டும் டென்னிஸ் விளையாட செரீனா களம் இறங்கினார். ஆனால் முன்பு போல அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில்,பாரீசில் வருகிற 27-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப்போவதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார். இது குறித்து ‘Being serena’ என்ற டாக்குமென்ட்ரியை எச்பிஓ ஒளிப்பரப்பியது. அப்போது ‘‘நான் ஜஸ்ட் திரும்பவும் டென்னிஸ்க்கு வரவேண்டும் என்பதற்காக திரும்பவில்லை. வெற்றி பெற திரும்ப வந்திருக்கிறேன்’’ என்றார். அவரது நீண்ட கால பயிற்சியாளரான பாட்ரிட் ‘‘செரீனா பிரெஞ்ச் ஓபனில் வெற்றி பெறுவதற்காக விளையாட இருக்கிறார்’’ என்றார். நேற்றில் இருந்து செரீனா பயிற்சியை தொடங்கியுள்ளார்.

23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ் இன்னும் ஒருமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால், மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்வார் என்பதால் தற்போது மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.