September 17, 2021

கணக்கில் காட்டாத வருமானத்தை காண்பித்து நிம்மதியாக தூங்குவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு!

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கருப்பு பணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அண்மையில் சுவிஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஷா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்திருப்போர், அதை தாங்களாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அவர்கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்புக்கு ஏற்றாற்போல், அதற்கு 30 சதவீத வரியும், அதன்மேல் 7.5 சதவீத கூடுதல் வரியும், 7.5 சதவீத அபராதமும் என மொத்தம் 45 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.இந்த திட்டத்தின்கீழ், கருப்பு பண விவரங்களை தாங்களாக முன்வந்து தெரிவிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஜூன் 1–ந் தேதி தொடங்கிய அந்த அவகாசம், வருகிற செப்டம்பர் 30–ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறி இருந்தார்.

blacj money

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து மத்திய நிதி  அமைச்சர்அருண் ஜெட்லி, தொழில் துறையினர், ஆடிட்டர்கள் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜிதேந்தர் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன் பிறகு, அருண் ஜெட்லி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கருப்பு பண விவரங்களை அளிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் அருண் ஜெட்லி, நிருபர்களிடம் “கருப்பு பண விவரங்களை அளிப்பதற்கான திட்டம், செப்டம்பர் 30–ந் தேதி வரை அமலில் இருக்கும். கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்திருப்பவர்கள், அதை காண்பித்து 45 சதவீத வரி மற்றும் அபராதத்தை செலுத்தி, வருமானத்தை சட்டப்பூர்வமாக்கி கொள்ளலாம். அதே சமயத்தில், கருப்பு பண விவரங்களை அளிக்க செப்டம்பர் 30–ந் தேதிதான் இறுதிக்கெடு. அதை நீட்டிக்க முடியாது. கணக்கில் காட்டாத வருமானத்தை காண்பித்து நிம்மதியாக தூங்குவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.இந்த வாய்ப்பை புறக்கணித்து, தொடர்ந்து வருமானத்தை மறைத்து வருபவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திப்பார்கள். அவர்கள் மீது புதிய கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமர்ப்பிக்கப்படும் கருப்பு பண விவரங்களை பகிரங்கமாக வெளியிடவோ, அரசு விசாரணை அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ளவோ மாட்டோம். அவை பத்திரமாக பாதுகாக்கப்படும். வருமானம் வந்த வழி குறித்து கேட்க மாட்டோம். அதுபற்றி எந்த விசாரணையும் நடக்காது.கருப்பு பண விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரியை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்புகளும், ஆடிட்டர்களும் யோசனை தெரிவித்துள்ளனர். அந்த யோசனைகளை பரிசீலித்து, இந்த திட்டத்தை எளிமைப்படுத்த தயாராக இருக்கிறோம். இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில், வருமான வரித்துறை இத்திட்டம் பற்றி 3–வது முறையாக விளக்கங்களை வெளியிடும். அதில் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த திட்டம் பற்றி மக்களிடையே பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். மத்திய  அமைச்சர்களும், மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இதுபற்றி மக்களிடையே விளக்கிச் சொல்வார்கள். அதன்மூலம், நிறைய பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் சூழல் உருவாகும்மேலும், இந்த திட்டம், பொது மன்னிப்பு அளிக்கும் திட்டம் அல்ல. பொது மன்னிப்பு திட்டத்தில் அபராதம் இருக்காது. இதில் அபராதம் உண்டு” என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.