April 12, 2021

தற்கொலையைத் தடுக்க தனி அமைச்சர் !

தனிமையில் வாடுபவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கென தனித் துறையை உருவாக்கி ஓர் அமைச்சரையே நியமித்திருக்கிறது ஜப்பான் அரசு. கடந்த 11 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜப்பானில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பெண்கள் இந்த நிலைக்கு அதிகம் தள்ளப்படுகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும், ஒட்டுமொத்தமாக அதுவரை ஜப்பான் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களைவிட, தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

ஏற்கெனவே ஜப்பான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள டெட்சுஷி சகமோட்டோ, தனிமையில் வாடுவோர் குறை தீர்க்கும் துறையின் அமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து, தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளைச் சீரமைக்கும் பணியை அமைச்சர் மேற்கொள்வார் என ஜப்பான் பிரதமர் கூறியிருக்கிறார்.

தனிமையில் இருப்போர் அல்லது தனித்து விடப்பட்டோர் மன உளைச்சலை எதிர்கொள்ள முடியாமல் தங்களை மாய்த்துக் கொள்வதைத் தீர்வாகத் தேர்வு செய்கிறார்கள். இதற்குப் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் உண்டு. ஜப்பான் அரசு இப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தனி அமைச்சர் வரை சென்றிருக்கிறது.

பொதுவாக ஜப்பானியர்கள் பற்றியும் ஜப்பானின் வளர்ச்சி குறித்தும் வியப்பாகவே இதர உலகம் கேள்விப்பட்டு வந்தது. இப்போது அதற்கு மாறான சித்திரம். உலகில் இப்படியான ஓர் அமைச்சரை நியமித்த இரண்டாவது நாடு ஜப்பான்; முதல் நாடு பிரிட்டன். இரண்டாண்டு களுக்கு முன்பு அங்கு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 90 லட்சம் மக்களுக்கும் மேலானவர்கள், தாங்கள் அடிக்கடி தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்வதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு இது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஓர் அமைச்சரை நியமித்துவிட்டது. இந்தத் துறையின் அமைச்சர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மாறிவிட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

ஆஸ்திரேலிய அரசும் இது போன்ற ஓர் அமைச்சரை நியமிப்பது குறித்து பரிசீலித்ததாகச் சொல்லப்பட்டது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று அறிவுறுத்திய நமது மண்ணில் தனிமையும் தனித்து விடப்படுதலும் சார்ந்த பிரச்சினைகள் நிறைய உண்டு. வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு நிகராக இப்பிரச்சினையைக் கையாளத் தனித் துறையை உருவாக்கி அமைச்சரையும் நியமிப்போம் என அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளிக்கலாம்.

மாறி வரும் உலக் சூழலில், ஒவ்வொரு மனிதனும் தனிமையால் துரத்தப்படுகிறான். பெரும் சவால் காத்திருக்கிறது.

Elayaperumal Sugadev