நோயாளிகளின் உடல்நிலையை கண்காணித்து மருத்துவருக்கு தகவல் அனுப்பும் தானியங்கி ஆடை!

நோயாளிகளின் உடல்நிலையை கண்காணித்து மருத்துவருக்கு தகவல் அனுப்பும் தானியங்கி ஆடை!

பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் 4 பேர், நோயாளிகள், முதியவர் கள் உள்ளிட்டோரின் உடல் நிலையைக் கண்காணிக்கும் சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இவர்களது கண்டுபிடிப்பு முதல் பரிசான ஆயிரம் டாலர் ரொக்கத்தை தட்டிவந்திருக்கிறது.

இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்வில் குடும்பத்திலுள்ள நோயாளிகள், முதியவர்கள், மன நிலை பாதிப்புக்கு உள்ளானவர்கள் போன்றோரை கண்காணிப்பதும் பராமரிப்பதும் பலருக்கு சவாலான விஷயமாகவே உள்ளது.

அவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணித்து, தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது பலருக்கு சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களையோ, வலிகளையோ வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருப்போர் பலர் உண்டு. அத்தகையவர்களை துல்லியமாகக் கண்காணித்து, அவர்களது உடல் மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் வழங்கக்கூடிய சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவிகளான சுஷ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய நால்வரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.

இந்த ஆடையானது நோயாளிகள், முதியோர், ஆட்டிசம் போன்ற பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு, சுவாச செயல்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்காணிக்கும் என்று மாணவிகள் கூறுகின்றனர்.

இந்த ஆடையில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு சாதனமானது செல்போனில் இணைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம், இதனை அணிபவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் குடும்ப மருத்துவர் களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும் என்கின்றனர் மாணவிகள்.

error: Content is protected !!