இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில் பயிற்சிக்கு வந்திருந்த முருகன் என்கிற இளைஞரிடம் கேட்டேன். “இறையன்பு சார் மாதிரி ஆகணும்…” இதைச் சொல்லும்போது, அவர் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன. தொடர்ந்து அவர், “ஐஏஎஸ் அதிகாரி என்கிற ஸ்தானத்தை மதிப்புக்குரியதாக்கியவர். அவர்தான் என் ரோல் மாடல்… எனக்கு மட்டுமல்ல… என் நண்பர்களுக்கும் அவர்தான்…’ என்றார் நெகிழ்ச்சியுடன். ஆம். முன்னேறத் துடிக்கும் பல்வேறு இளைஞர்களின் கனவு நாயகன் வெ. இறையன்பு ஐஏஎஸ்.

பணியிலே அர்ப்பணிப்பானவர். அவரிடம் வரும் கோப்புகள் சிறகு முளைத்துப் பறக்கும். திட்டமிட்டு எதையும் செய்பவர். உடனடி நடவடிக்கைக்கு அதிரடி காட்டுபவர். சோர்ந்து போயிருக்கும் ஒரு துறையும் இவர் பொறுப்புக்கு வந்தபிறகு சுறுசுறுப்பாகும். இருண்டிருக்கும் துறையில் ஒளிவெள்ளம் பாயும். துறைதோறும் வளர்ச்சி என்பது இவரது ஆளுகையின்கீழ் சாத்தியமானது. எந்தத் துறைக்குச் சென்றாலும் தனது நிர்வாகத் திறனால் ஜொலிக்கவைத்தார். இறையன்புவின் பணி இயல்பை இப்படிப் பட்டியலிடலாம். ஒரு குடிமைப் பணி அதிகாரியாக அவரைப் பற்றி எனக்குத் தெரிந்து எவ்வளவோ நிகழ்வுகள் உண்டு. உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். நான் அந்த விவரங்களுக்குள் செல்லவில்லை. ஒரு பத்திரிகையாளனாக அவருடனான என் அனுபவங்களை என் பார்வையில் மட்டுமே இங்கு பகிர்கிறேன்.

‘புதிய தலைமுறை’ இதழில் அவர் ‘பத்தாயிரம் மைல் பயணம்’ என்ற தொடரை முதன்முதலில் எழுதியபோது, ஆசிரியர் மாலனைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். நான் என் இருக்கையில் அமர்ந்து மாலன் அறையை கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிதுநேரத்தில் அறையைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் இறையன்பு. கறுப்பு பேண்ட், வெள்ளைச் சட்டையில், கம்பீர எளிமையுடன் கடந்து சென்றார். என்னையும் அறியாமல் எழுந்து நின்றேன். முதல்முறையாக அவரை அப்போதுதான் பார்க்கிறேன். அறிமுகமில்லை. பேசிக் கொள்ளவில்லை. மீடியாவில் அவரது அதிரடிப் பணிகள் பற்றி அதிகம் படித்திருந்ததால் ஒரு பிரமிப்பில் ஆழ்ந்திருந்தேன்.

இது நடந்து சில தினங்கள் கழித்து இறையன்பு மீண்டும் அலுவலகம் வந்தபோது, மாலன் என்னை அழைத்து இறையன்புக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இனி தொடர் பற்றி உங்களிடம் கருணாகரன்தான் கம்யூனிகேட் செய்வார்…” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பத்தாண்டுகள் அவருடன் பழகும் வாய்ப்பு. ஒவ்வொரு சந்திப்பும் ஏதோ ஒரு புதிய தகவலை விதைத்துச் செல்லும் நாற்றங்காலாகவே அமைந்தது. ஒரு பெரிய அதிகாரி என்பதைத் தாண்டி ஓர் இனிய மனிதராக அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதுதான் அவரது தனித்துவம். எப்போதும் ஒரு மென்புன்னகை அவரது இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும். அவரது அலுவலகம் பரபரப்பாக இருக்கும். ஆனால், என்றும் பதட்டமாக இருந்து பார்த்ததில்லை. எப்போதும் நான் அவரது அறைக்குள் நுழைந்தவுடன் எதற்காக வந்தேனோ அதுபற்றி நான் பேச ஆரம்பித்து விடுவேன். அவரது நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற சிறிய பதட்டம் என்னிடம் தொற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அவரோ “பாஸ்… முதலில் ரிலாக்ஸ் பண்ணுங்க…” என்பார்.

அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எலுமிச்சைத் தேனீர் கண்டிப்பாகக் கிடைக்கும். அளவான சர்க்கரையுடன் சுவை அள்ளும். குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகே பேச வேண்டிய விஷயத்துக்கு வருவார். எதுபற்றிக் கேட்டாலும் அதுபற்றிய விரிவான தரவுகளுடன் மேடையில் பேசும் சொற்பொழிவுக்கான அத்தனை தகவல் அம்சங்களுடன் உரையாடுவார். அவர் படித்த பல்வேறு நூல்கள், சந்தித்த மனிதர்கள் என்று அனைத்தையும் ஒன்று திரட்டி அழகான உரைவீச்சாய் அது அமையும். அவரது பேச்சை அப்படியே எழுதினால் அது ஓர் அற்புதமான கட்டுரையாய் அமையும். அவரது பேச்சு, எழுத்து இரண்டுக்கும் துளியும் வித்தியாசம் இருக்காது.

தகவல்களை நினைவு கொள்ளல், தேர்வு செய்தல், வரிசைப் படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் ஓர் அபார ஒருங்கிணைப்பு. அது அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே அமைந்த ஒன்று. அவரிடம் வியக்க வைப்பது அவரது நேர மேலாண்மை. அவர் ஒரு தொடர் எழுதுகிறார் என்றால், முதல் தவணையாக பத்து அத்தியாயங்களை மொத்தமாக அனுப்பிவிடுவார். எந்த ஒரு வாரமும் அவர் கட்டுரைகள் தாமதமானதில்லை. எப்போதுமே பத்து, பத்து அத்தியாயங்களாகவே அனுப்பி வைப்பார். ஓர் அத்தியாயம் கொடுப்பதற்கே சிலர் படுத்தி எடுத்துவிடுவார்கள். இறையன்பு விஷயத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரே இரவில் ஐந்து அத்தியாயங்கள் கூட எழுதி அனுப்பி இருக்கிறார். பலமுறை பிரமித்திருக்கிறேன்.கடும் உழைப்பும் உடலில் நிலையான ஆற்றலும் மன ஒருமையும் இருப்பவர்களால் மட்டுமே அது முடியும்.

நேரம் ஒதுக்கிப் படிப்பது. அதனை ஆழ்ந்து படிப்பது. கல்லூரி நாட்களில் இருந்தே ஆழ்ந்து படித்தல் என்பது அவரது இயல்பாய் அமைந்த ஒன்று என்பதை அவர் பேட்டி மூலம் அறிந்திருக்கிறேன்.. ஒருமுறை படித்தால் மறக்கவே மறக்காது. ஆழ்ந்து படிப்பதை ஓர் உத்தியாகவே போட்டித் தேர்வர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். பத்திரிகையில் தொடர் எழுதும்போது, வாரம் தோறும் அவருடன் பேசிவிடுவேன். தொடர் முடிந்தபிறகு பேசுவதற்கு விஷயம் இல்லாத நிலையில், ஓர் இடைவெளி விழுவது போலிருக்கும். ஆனால், அவரே தொலைபேசியில் தொடர்பு கொள்வார். “நலமா கருணா?” என்பார். ஏதோ தகவல் சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக காத்திருப்பேன். “பேசி ஒரு மாசம் ஆச்சு. அதுதான் நலம் விசாரிக்கப் பேசினேன்…” என்பார். அதேபோல் அலுவலகம் வந்தால் பணிபுரியும் அனைவரிடமும் இயல்பாக உரையாடி விட்டுக் கிளம்புவார். ஒருவருடன் பழகுதல் என்பது ஒரு கலை. அந்தக் கலையை அவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும்.

புதிய தலைமுறையில் அவர் பத்தாயிரம் மைல் பயணம், போர்த்தொழில் பழகு, வையத் தலைமை கொள் என்று மூன்று தொடர்கள் எழுதினார். மூன்றுமே உலக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்களின் உள்ளத்தை அள்ளியவை. பின்னர் புத்தகமாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்தவை. அந்தத் தொடர்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு மாறுதலுக்காக கேள்வி – பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று ஆசிரியர் மாலன் கூற, ஆரம்பமானது ‘இனிய இறையன்பு’ என்ற அவரது கேள்வி – பதில் பகுதி. அது ஒரு புதிய அனுபவம். கேள்வி கேட்டவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருப்பவர்கள். வாரம்தோறும் குறைந்தபட்சம் ஐநூறு கேள்விகளாவது அஞ்சலில் வரும். இது ஒரு பெரிய எண்ணிக்கை. அவை தவிர, மின்னஞ்சலிலும் ஏகப்பட்ட கேள்விகள். அவற்றைப் பெரிய கவரில் போட்டு அவரிடம் எடுத்துச் சென்று தருவோம்.

கேள்விகள் அனைத்தும் 360 டிகிரியில் இருக்கும். எல்லாத் துறைகளைப் பற்றியும் கேள்வி கேட்டிருப்பார்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராவது பற்றிய கேள்விகளும் நிறைய இருக்கும். சிறந்த கேள்விகளைத் தேர்வு செய்து பதில் கூறும் அவர், போட்டித் தேர்வுகள் பற்றிய கேள்விகள் அதிகம் வந்ததால் சிலவற்றுக்கு மட்டும் இதழில் பதிலளித்துவிட்டுப் பலருக்கும் மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ தனிப்பட்ட முறையில் பதில் அளித்தார். அவர் அந்தக் கேள்விகளைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். என்றாலும் மெனக்கெட்டு தனிப்பட்ட முறையில் அவர் பதில் அளித்ததிலிருந்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். அது ஆர்வமிருந்தும் திக்குத் தெரியாமல் திணறுபவர்களுக்கு வழிகாட்டும் ஓர் உயர் நோக்கம். அதில் சுயநலமில்லை. இங்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பல மாணவர்களுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். வாழ்வில் அடிமட்டத்திலிருக்கும் ஒருவரை மேலே கொண்டு வரவேண்டும் என்பதில் தணியா ஆர்வம் அவரிடம் உண்டு.

இதுபற்றி அவர் ஒருமுறை கூறும்போது, “நானும் ஒரு காலத்தில் திக்குத் தெரியாமல் தடுமாறியவன்தான். எனக்கு வழிகாட்ட யாருமில்லை. என் சுயமுயற்சியிலேயே படித்து மேலே வந்தேன். அதனால், அத்தகையவர்களுக்கு உதவி வழிகாட்ட வேண்டும் என்ற பரிவும் உந்துதலும் இயல்பிலேயே எழுகிறது. அடுத்து, நான் பிறந்த தமிழ் மண்ணைச் சார்ந்த மாணவர்களே இந்தியா முழுவதும் உள்ள எல்லா உயர்ந்த பதவிகளையும் அலங்கரித்து இந்நாட்டை உயர்த்த வேண்டும் என்கிற பேராசையும் அதில் உண்டு…” என்றார் புள்ளகையுடன்.

‘புதிய தலைமுறை கல்வி’ இதழுக்கு நான் ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் முதல் இதழிலேயே அவரை வைத்து ‘அன்புள்ள மாணவனே…’ என்று ஒரு தொடர் ஆரம்பித்தோம். மாணவர்களுக்கு அவர் வாரம்தோறும் ஒரு கடிதம் எழுத வேண்டும். ஒரு சிற்பி சிலை செதுக்குவதுபோல், மாணவர் களுக்கான செயல்பாட்டு இலக்கணங்களை கடிதம் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார். ஒவ்வொரு பள்ளி மாணவனும் அவசியம் படிக்க வேண்டிய கடிதங்கள் அவை. முதல் அத்தியாயம் வெளிவந்த இதழின் அட்டைப்படத்தையே வித்தியாசமாக வடிவமைத்தோம். டபுள் ஸ்பிரட்டில் டபுள் ஆக்ஷனில் இறையன்புவின் படத்தை கிராபிக்ஸில் வடிவமைத்திருந்தோம்.

அந்த அட்டைப்படத்துக்கு வாசகர்களிடம் அமோக வரவேற்பு. அதைத் தொடர்ந்து இரு மாதத்துக்கு ஒருமுறையேனும் அவரது படம் கல்வி இதழின் அட்டையில் இடம்பெற்று விடும். அதற்குக் காரணமும் இருந்தது. வெளியில் செல்லும்போது, புத்தகக் கடைக்காரர்களிடம் நான் விசாரிப்பேன். “இறையன்பு சார் அட்டையில் இடம் பெறும் இதழ் நன்றாக விற்கிறது…” என்பார்கள். அவரை அட்டையில் வெளியிட்டால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பிடித்திருந்தது. பல ஆசிரியர்களிடம் கேட்டு நான் அதை உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டாண்டு காலத்திலான கல்வி இதழ்களில் பலமுறை அவர் படம் அட்டையில் இடம் பெற்றிருக்கிறது.

அவர் தமிழ்நாடு தலைமைச் செயலராய்ப் பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது நினைவிருக்கும். அதில் ஆய்வுக்கு வரும்போது, இரண்டு காய்கறிகளுடன் எளிமையான சைவ உணவு வழங்கினால் போதும் என்று கூறப்பட்டிருந்தது. அது உண்மை. அவர் சைவ உணவர். கூட்டு, பொறியல் என்று இரண்டு வகைக்காய்களுடன் சாம்பார், ரசம் என்று எளிமையானதாகவே அவரது உணவு இருக்கும். நண்பர்களுடன் பகிர்ந்து உண்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். அந்த வகையில் நான்கைந்துமுறை நானும் அவருடன் மதிய உணவு உண்டிருக்கிறேன். பொன்னான பொழுதுகள் அவை.

முதல் நாளே தொலைபேசியில் அழைத்துவிடுவார். சாப்பாடு வீட்டிலிருந்தே வரும். சில நேரங்களில் அவரது நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்தும் சாப்பிட்டிருக்கிறோம். உணவில் அவர் காய்கறிகள்தான் அதிகம் எடுத்துக்கொள்வார். அன்று சமைக்கப்பட்டுள்ள காய்களின் மருத்துவப் பலன்களைப் பற்றி விளக்கிக் கூறி, இன்னும் கொஞ்சம் போட்டுக்குங்க என்று அன்புடன் பரிந்துரைப்பார். ஓர் அதிகாரியாக எந்த அளவுக்கு அவர் வெற்றிகரமாக ஒளிர்ந்தாரோ அதற்கு இணையாக எழுத்தாளராகவும் அவர் மிளிர்ந்தார். அதனால்தான் புத்தக உலகில் சதமடித்து அவரால் சாதனை செய்ய முடிந்தது. இத்தனைக்கும் இவர் முழுநேர எழுத்தாளர் அல்ல. முழுநேர எழுத்தாளர்கள் செய்வதற்கே அரிதான ஒரு சாதனை அது. அவரது புத்தகங்களை அனைத்துமே முழுமையை நோக்கிய ஒரு பயணம். அவர் புத்தகங்கள் எதுவும் அச்சடித்து அடுக்கி வைக்கப்படுவதில்லை. விற்பனையில் உச்சம் தொட்டவை. உறுத்தாத சொல்வளம், மிரட்டாத கருத்துநயம், தமிழின் எளிய வாசகனையும் தரமுயர்த்தும் நோக்கத்துடன் இயங்குபவை அவரது எழுத்துகள். நூறு புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மேலாண்மை, வேளாண்மை, வரலாறு, அறிவியல், ஆட்சிப் பணி, போட்டித் தேர்வு, நாவல், சிறுகதை, உளவியல், தத்துவம், தன்னம்பிக்கை, கவிதை என்று ஒவ்வொரு புத்தகமும் ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் வகைக்கொன்றாய் அமைந்து வாகை சூடியவை. அவர் தொடாத துறை இல்லை. அவர் தொட்டதெல்லாம் துலங்கியதென்றால் அது மிகையில்லை. அவரது எழுத்துக்கள் பொழுதுபோக்கு என்ற சட்டகத்துக்குள் அடங்காதவை. கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உயர்வான கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவை. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் நாம் ஏதேனும் ஒன்றை நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும்.

இவரது இலக்கியத்தில் மேலாண்மை புத்தகம் அமரர் ஆதித்தனார் நினைவு விருதை வென்றது. அந்த விருதை இவருக்கு வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. பரிசுத் தொகையாக தனக்கு வழங்கப்பட்ட இரண்டு லட்ச ரூபாயை ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு வழங்கினார். அந்த விருதுப் பணம் மட்டுமல்ல, தான் எழுதிய புத்தகங்களுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகைகளைக் கூட பொதுச்சேவை அமைப்புகளுக்கே வழங்கி வந்தார்.
பணி நெருக்கடிகளின் போதும் அவர் தொடர்ந்து எழுத்தின் மீதும் நேசம் கொண்டு அதற்கென்று நேரம் ஒதுக்கி இயங்கி வந்ததற்குப் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போது, இலக்கியமே அவரது முதல் இலக்காக இருந்திருக்கிறது. நண்பர்களின் வலியுறுத்தல்களால் உந்தித் தள்ளப்பட்டு, பின்னர் அதுவே லட்சியமாகி குடிமைப் பணி தேர்வெழுதினார். அவர் தனது முதல் இலக்கையே துரத்தியிருந்தால், ஒரு புதுமைப்பித்தனோ, ஜெயகாந்தனோ தமிழுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

நண்பர்களுடன் அதையொட்டி விவாதிக்கும்போது, “அவர் சினிமாப் பாடல் துறையில் இறங்கியிருந்தால், வைரமுத்துக்குப் போட்டியாளராகி இருப்பார். சினிமாத்துறைக்குள் இறங்கியிருந்தால் ஒரு பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் கிடைத்திருக்கக் கூடும். காரணம், அவர் விருப்பப்பட்ட துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு அத்துறையில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு…” என்று பேசிக் கொள்வோம்.
இலக்கியத்தை இலக்காய் வைத்திருந்தவர் சட்டென்று அதை உதறி, குடிமைப் பணியின் மீது ஆர்வமுள்ளவராக மாறியது எப்படி? அவரே ஒரு பேட்டியில் சொல்கிறார். கேட்போம்.“ஐஏஎஸ் பணி சவால்கள் நிறைந்த சேவை. அதில் மக்களோடு இணைந்து பணியாற்ற முடியும். களத்தில் இறங்கிக் கை வைக்க முடியும். எனக்கு மக்களைச் சந்திப்பதும் பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும். சின்ன அளவில் நம் கண்முன் பல நற்செயல்களைச் செய்ய கருவியாக இருக்க முடியும். நாம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினால் நாமே அதில் வழிந்தோடுவதைப் போன்ற திருப்தி ஏற்படும். எழையின் கண்ணீரைத் துடைத்தால் மனம் நிறைந்ததைப் போன்ற மகிழ்ச்சி ஏற்படும். அதைச் சாத்தியமாக்குவது இந்திய ஆட்சிப்பணி.”

மெய்தானே!

பெ. கருணாகரன்

error: Content is protected !!