சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சோலை என்கிற சோம சுந்தரம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் இதே 25.09(1932)ல் பிறந்தார். சுமார் 60 ஆண்டு கால தமிழக & இந்திய அரசியல் நடப்புகளின் நிஜ சாட்சியாக இருந்த சோலை முன்னதாக ஜனசக்தி,நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த தலைமுறை வார இதழ்கள் ஜூ.வி., நந்தன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ராஜமுத்திரை ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

சுருக்கமாக சொல்வதானால் அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரியப்பட்ட , பரிச்சயப்பட்ட பெயர் இது. ஐந்து முதலமைச்சர்களுடன் நட்பு பாராட்டி, அரசியல் ஆலோசகர் என தனக்கென தனி முத்தி ரையை பதித்தவரிவர். தனது இறுதி மூச்சு வரை எழுத்துலக பயணத்தைத் தொடர்ந்த சோலையின் எழுதுகோல் மே மாதம் 29 ம் தேதி, 2012 எழுத்துலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி ஆழமான உறக்கத்திற்குச் சென்றது.

முன்னொரு சமயம் நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாட்டினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு சோலைக்கு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார். ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார்.

திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, “கடைசி வரை என்னுடன் இருப்பாயா?” என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.

அண்ணா பத்திரிகை தொடங்கும் முன்பு சோலையின் பெயரை ஆசிரியராக போட்டு விளம்பரம் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். விளம்பரத்தை எடுத்துக்கொண்டு போய் எம்.ஜி.ஆரைப் பார்த்து, “என்னை எப்படி ஆசிரியராகப் போடலாம்? உங்கள் பெயரைப் போடுவதுதானே முறை” என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., “நான் சில பத்திரிகைகள் தொடங்கி பாதியிலேயே நின்று போயிற்று. எனவே முகவர்களுக்கு எம்.ஜி.ஆரைவிட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்” என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் கையில் இருந்த காகிதத்தை வாங்கி ஆசிரியர் எம்.ஜி.ஆர்.,துணை யாசிரியர் சோலை என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் சோலை. ஆனாலும், அடுத்து வந்த விளம்பரத்தில் துணையாசிரியருக்குப் பதிலாக இணையாசிரியர் என்றே வந்தது.

எம்.ஜி.ஆர். உடன் இவ்வளவு நெருக்கம் கொண்டிருந்த போதிலும் ஒரு எளிய காந்தியவாதி தாக்குதலுக்கு உள்ளானபோது கோபக்குமுறலுடன் உரிய நேரத்தில் நீதி கேட்கவும் தவறவில்லை. அப்படியொரு நிகழ்வு எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்கம் எழுச்சி பெற்றுள்ளதற்கான விவசாய நிலம் குறித்த பின்னணி பற்றி காந்தியவாதி விநோபா பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் ஆய்வு பாதயாத்திரை மேற்கொண்டார். ஜெகநாதனின் இந்த யாத்திரை நக்சல் குரலுக்கு ஆதரவானது என்று கருதிய ஒரு அதிகாரி ஜெகநாதன் மீது நேரடியான வன்முறை தாக்குதல் நடத்தினார். இச்செய்தியை கேள்விப்பட்ட வுடன்சோலை பதற்றமுற்று எம்.ஜி.ஆரைச் சந்திக்க நேரடியாக சென்றுவிட்டார். எம்.ஜி.ஆரின் அழைப்பின்றி தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சோலை நேரடியாகவே, “அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இது உங்கள் ஆட்சியின் மீதான மக்கள் அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்கும்” என்று தனது உள்ளக்குமுறலை பத்திரிகையாளனுக்குரிய ஆவேசத்துடன் எம்.ஜி.ஆரிடம் வெளிப்படுத்தினார். சோலையை ஒருபோதும் இப்படிக் கண்டிராத எம்.ஜி.ஆர். அன்று முழுவதும் சாப்பிடக்கூட மனமின்றி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அடுத்த நாளே அங்கிருந்த அதிகாரிகள் அனைவரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதனை அடையாளம் காட்டச் சொன்னார். நடவடிக்கை எதுவும் வேண்டாம். மன்னித்து எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என்று கூறிவிட்டார் ஜெகநாதன்.

இச்சம்பவம் நடந்த மிகச் சில ஆண்டுகளில் ‘அண்ணா’ பத்திரிகையின் இணையாசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்க ஆலோசகராகவேதான் இருந்தார். காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்கள் சோலையின் அரசியலுடன் முரண்பாடுகள் கொண்டிருந்தபோதிலும் அவரது நேர்மைக்காகவும் துணிச்சல் மிகுந்த எழுத்துக்காகவும் நட்பும் மரியாதையும் பாராட்டத் தவறியதில்லை. மேலும், பொறுப்பில் இருந்த பல முக்கிய தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் பத்திரிகையாளனுக் குரிய தனித்துவத்தையும், கம்பீரத்தையும் இழக்காமல் இருந்தார். காரணம், அதிகாரத்தை ஒருபோதும் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர் அல்ல சோலை.

‘நவமணி’ பத்திரிகையில் காங்கிரஸ் அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும் மிகக் கூர்மையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகள் திமுகவுக்குக் கருத்தியல் ஊக்கத்தை அளித்தது. விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற இளம் மாணவர் காமராஜரைத் தோற்கடிக்கும் வாய்ப்பினை உருவாக்கியதில் சோலையின் எழுத்துக் களுக்கு முக்கிய பங்குண்டு. ‘உண்மை சுடும்’ என்ற தலைப்பில் காமராஜரைக் கடுமையாக விமர்சித்திருந்ததால் தன் மீது அவருக்கு கோபத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைத்தார் சோலை. ஆனால் சோவியத் யூனியன் சென்று திரும்பும் வழியில் டெல்லியில் எங்கு தங்குவது என்று நினைத்த சமயத்தில் ‘நவசக்தி’ நிருபர் மூலமாக தனது இல்லத்தில் வந்து தங்கிக்கொள்ளும் படி தகவல் அளித்தார் காமராஜர். அச்சமயம்சோலை வீட்டுக்கு வெளியே மறைவாக சிகரெட் பிடிப்பதை கவனித்த காமராஜர், தனது சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டதால் மீதமிருந்த உயர் ரக சிகரெட்களை உதவியாளர் மூலம் சோலைக்குக் கொடுக்கச் செய்தார்.

இடது சாரி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும் இறுதிவரை சர்வோதயா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவராகவே இருந்தார். எழுத்தில் அவ்வப்போது திமுக, அதிமுக சார்புத் தன்மை இடம்பெற்றாலும் பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு நிலையைக் கை விட்டதில்லை. மன்மோகன்சிங்கின் உலகமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளையும், பாஜக மதத்தை அரசியலில் கலப்பதையும் எதிர்த்து சரளமான தமிழ் பழமொழிகளுடனும், தமிழ் வழக்காறுகளுடனும் யாருக்கும் புரியும்விதமாக தீவிரத் தன்மையுடன் முன்வைத்தார். அதிகார மட்டத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை சுய முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை வசதிகளுக்காக மடை திருப்பிய தில்லை. பெரிய குடும்பஸ்தனான சோலை தமது குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக யாரிடத்திலும் போய் நின்றதில்லை என்பது மட்டுமல்லாமல் தனது பெயரை எங்கும் பயன் படுத்தக்கூடாது என்ற விதித்த கட்டுப்பாட்டின் மூலம் குடும்பத்தாரின் மனக்கசப்புக்கும் ஆளாகி உள்ளார்.

ஒருமுறை சோலையின் மூன்றாவது மகன் திருமணம் கோவையில் நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமண உறுதிச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக கொடுமையான வெயிலில் மணமக்களுடன் சோலை அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொறுமையுடன் பதிவு செய்து சென்றார். அச்சமயம் மணமக்களுக்கு வாழ்த்து கூறுவதற்காக சோலை வீட்டுக்கு வந்த அன்றைய அமைச்சர் ஐ. பெரியசாமி மேற்கண்ட விஷயத்தை கேள்வியுற்று, ‘ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருக்கலாமே, விரைவில் முடித்து அனுப்பி யிருக்கலாம்’ என்றார். அச்சமயம் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர் இவர்.

பல்வேறு அரசியல்துறை நண்பர்கள் எம்.பி. பதவி வகித்தபோது சோலை மீது கொண்ட அன்பு காரணமாக ரயில்வே துறையில் அவசர இடவசதி வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளும்படி லெட்டர் பேடு கொடுப்பார்கள். அவசர காலத்துக்குகூட அவரும் பயன்படுத்தமாட்டார், குடும்ப அன்பர்களுக்கும் கொடுக்கமாட்டார். குப்பைக்குத்தான் போய் சேரும். பெரியவர்களுடன் பழகி, தான் கற்ற உயர்ந்த பண்புகளைச் சொந்த வாழ்வில் இறுதிவரை கடைபிடித்தவர். வயதாலும், அனுபவத் தாலும் ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்தாலும் வயது பேதமின்றி எல்லோரையும் ‘அண்ணே’ என்று விளிப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தார்.

பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்காக அரசு அளித்த வீட்டை கல்விக்காகவும், வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் அடித்தட்டு தலித் இளைஞர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகவும் மாற்றியிருந்தார். அவ்வாறு தங்கும் இளைஞர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையை ஏற்பாடு செய்வது,வேலைக்காக முயற்சி செய்து வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை தன் பொறுப்பில் ஏற்றிருந்தார். விருதுகளின் மூலம் வந்த பணமுடிப்பைக்கூட தலித் வகுப்பினரின் கல்வி முன்னேற்ற வளர்ச்சிக்குக் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!