September 17, 2021

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜ ராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் அவரது இல்லத்தின் கதவை மர்ம நபர்கள் தட்டினர்.இதையடுத்து கதவை திறந்த கௌரியை 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌரி, பிரபல பத்திரிகையாளர் லங்கேஷின் மகள் ஆவார். இவர்  நடத்தி வந்த லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த இதழைத் தொடங்கினார் என்றாலும்  அவர் 2000ம் வருஷம் காலமான பின் கௌரி இந்த இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இப்போது அவருக்கு வயது 55.

கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மதம், ஜாதி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அநியாயம் செய்பவர்கள் பலரைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த  லங்கேஷ் பத்திரிகை. இப்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் கௌரி. லங்கேஷ் பத்திரிகைக்கு என்றே தனிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டு. ஒவ்வொரு செய்தியும் தீப்பிடிக்கும். யாரோடும் சமரசம் செய்துகொண்டால் மக்கள் நன்மைக்காக எழுத முடியாது என்பதால், இதுவரை எவ்வித வணிக விளம்பரமும் இல்லாமலேயே பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

கடந்த 2016ஆம் வருடம் பாஜகவினர் தொடுத்த அவதூறு வழக்கில் குற்றவாளி என்று ஹூப்ளி மாவட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் கௌரி லங்கேஷ். ஆனால், அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றதால் தண்டிக்கப்பட்டாலும் உடனடியாக விடுதலை ஆகிவிட்டார் கௌரி லங்கேஷ்.

2008ஆம் ஆண்டு தர்வாத் தொகுதி பாஜக எம்.பியான பிரகலாத் ஜோஷி, பாஜகவைச் சேர்ந்த உமேஷ் டூஷி ஆகியோரைப் பற்றி லங்கேஷ் இதழில் செய்தி வெளியானது. அவர்கள் இருவரும் லங்கேஷ் ஆசிரியர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கில் அந்தக் கட்டுரை எழுதிய நிருபர் முதல் குற்றவாளி, ஆசிரியர் கௌரி இரண்டாம் குற்றவாளி. இவ்வழக்கில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிருபரை விடுதலை செய்துவிட்டு, இரண்டாம் குற்றவாளியான கௌரிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது ஹூப்ளி நீதிமன்றம். ஆனால், அன்றே அவர் பிணையில் விடுதலையானார்.

இதுபற்றி அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கௌரி லங்கேஷ், “என்னை சிறையில் தள்ளலாம் என்று பலரும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். ஹூப்ளி நீதிபதி அவர்கள் தனக்கு இருக்கும் அனைத்து அறிவையும் பயன்படுத்தி நான் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளார். இது எனக்குத் தற்காலிகமான பின்னடைவுதான். நான் உயர்நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டார்.கௌரி லங்கேஷ் கன்னட அரசியல் உலகத்தில் ஆண்ட்டி பிஜேபி, ஆண்ட்டி மோடி என்று பாஜகவினரால் பகிரங்கமாக முத்திரை குத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.