November 29, 2022

ல்வி என்பது இன்று விற்கப்படுகிறது. போதிய விலை கொடுக்க முடிந்தவர்கள் வேண்டுமென்ற கல்வியை பெறலாம். இல்லையென்றால் எப்படியோ போங்கள், உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று அரசாங்கமே சொல்கிறது. இம்மாதிரி விற்கப்படும் கல்வி கற்போரால் சமூகத்திற்கு எவ்வளவு பாதகம் ஏற்படுகிறது என்பதை யாருமே யோசிக்க முற்படாத நிலையில் இந்த கல்லூரி கொள்ளையர்களில் ஒரு குரூப்-பை பக்காவா எக்ஸ்போஸ் பண்ண முயன்றிருக்கும் படமே “செல்ஃபீ”

மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தாலும் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்கும் நோக்கில் , கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் & கோ-வுக்கு என்ன ஆனது என்பதே செல்ஃபி திரைப்படத்தின் கதை.

நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் தன் பாத்திரத்தை உணர்ந்து தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். கல்லூரி மாணவன் மற்றும் புரோக்கர் தொழிலின் நேர்த்தியுடன் காதலைக் கூட ரசிக்கும்படி வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். என்னைக் கேட்டா காலேஜ்ல சேர்த்தீங்க? என்று அப்பா வாகைசந்திரசேகரிடம் பொங்கும் காட்சி நன்று.பெரும்பாலான பெற்றோருக்குப் பாடம்.
ஜிவி-ன் நண்பனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் குணாநிதி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு, முதல் படம் என்பது தெரியாதவாறு நன்றாகவும் நடித்திருக்கிறார்.ஜிவி-க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், உறுத்தலாக இல்லாமல் உள்ளார்.

இன்னொரு ஹீரோ லெவலில் இயக்குநர் கெளதம்மேனன். அவருடைய கேரக்டர் இதுவரை நாம் அறிந்திராத பல செய்திகளைச் சொல்லும் கதாபாத்திரம். அதற்கு முழுத் தகுதியானவராக இருக்கிறார். தான் செய்யும் தொழில் தவறானது என்றாலும் அதைத் திமிரோடு செய்து கவனத்தை ஈர்க்கிறார். சங்கிலிமுருகன் வேடம் பல கல்வித்தந்தைகளை நினைவுபடுத்தும் வேடம்.அவருடைய அனுபவ நடிப்பு அந்தப்பாத்திரத்துக்குக் கூடுதல்பலம். அவருடைய மருமகனாக வரும் சாம்பால் வேடமும் பல புகழ்பெற்ற குடும்பங்களை நினைவு படுத்துகிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது.

கல்லூரி கதை என்பதால், வழக்கமாக மாணவர்களிடையே நடக்கும் மோதல், காமெடி, காதல் என்றெல்லாம் போகாமல், கதைக்களத்தை சுற்றியே திரைக்கதை அமைத்து அதையும் கமர்ஷியலாக சொல்லியிருந்தாலும், தேவையில்லாத விஷயங்கள் எதுவும் திணிக்கப்படவில்லை, அதிலும் இங்குள்ள பெற்றோர்களுக்கு தங்கள் வாரிசுகளின் கல்வி மேல் இருக்கும் கனவு மற்றும் ஆசையை வைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் கல்லூரிகள் , அதன் பின்னணி மற்ரும் மாஃபியா கும்பல் பற்றியும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மதிமாறனுக்கு ஒரு பூங்கொத்து பார்சல்

மொத்தத்தில் இந்த செல்ஃபீ – கல்வி கொள்ளையர்களின் சுயரூபம்

மார்க் 3 / 5