December 1, 2021

சீதக்காதி விஜய் சேதுபதி’யின் “அய்யா” மெழுகு சிலை திறப்பு!

விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர்தான் பாலாஜி தரணிதரன். தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவருடைய மகன் குமார் என்ற இன்னொரு வேடத்திலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் இயக்குநர்களாகவே வருவார்கள்.

அண்மையில் விஜய்சேதுபதி இந்த ‘சீதக்காதி’ எனது 25வது படமாக அமைந்தது என் பாக்கியம் என  தெரிவித்து இருந்தவர். “சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் போன்ற லெஜண்ட் நடிகர் களுக்குப் பொருத்தமான படம் இது. சில பெரிய நடிகர்களைத்தான் இதில் நடிக்கவைக்க நினைத்து இருந்தார் பாலாஜி தரணீதரன். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாததால், வேறு வழியில்லாமல் என்னை நடிக்க வைத்தார். இந்தப் படத்திற்குத் தேவையானதைச் செய்து இருக்கிறேன் என்று நம்புகிறேன். ‘சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம். கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்பதை உணர்த்தும் படம். யாரோ ஒருவரின் மூலம் எப்படியாவது வாழும். என் 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றும் சொல்லி இருந்தார் விஜய் சேதுபதி.

இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் இப்படம் கேட்ட போது,”‘சீதக்காதி’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே? என்கிறார்கள்..செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதிலிருந்துதான் தலைப்பை எடுத்தேன். ஏன் இந்தத் தலைப்பு என்பது படம் பார்க்கும்போது புரியும். மேலும் இந்த ‘அய்யா’ கதாபாத்திரத்தை வைத்துத் தான் முழுப் படமே. படத்தில் 40 நிமிடங்கள் அக்கதாபாத்திரம் வரும். அதன் முக்கியத்துவம் விஜய்சேதுபதிக்குத் தெரிந்தது. என்ன சொல்லப் போகிறோம் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டார். எனது 25-வது படம் இதுதான் என்று அறிவித்ததும் அவர்தான்.

ஆனாலும் இந்த ’அய்யா’வுக்காக ரொம்ப மெனக்கெட்டார் விஜய் சேதுபதி. காலையில் மேக்கப் போட நாலரை மணி நேரமாகும். மாலையில் மேக்கப்பைக் கலைக்க 1 மணி நேரமாகும். மேக்கப் புக்குத் தகுந்தவாறு ஷூட்டிங்கை ப்ளான் பண்ணிக்குவேன். மேக்கப் போட்டவுடனே ஒரு புத்துணர்வு தெரியும். அப்போது க்ளாஸ்-அப் ஷாட்கள் எல்லாம் எடுத்துவிடுவேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணினோம். படம் சகல தரப்பையும் கவரும் என்று உறுதி சொல்ல முடியும்” என்றார்.

சமீபத்தில் இப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ட்ரெயலர் வீடியோவில் ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாகிவிட்டேனே என்ற ஒரே ஒரு வசனத்தை மட்டுமே விஜய் சேதுபதி பேசியுள்ளார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்தில் பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் நீதிபதியாக நடித்துள்ளார்.

டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதன்படி படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும், அய்யா ஆதி மூலம் என்ற கதாபாத்திரத்தை பெருமைப்படுத்தும் வகையில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் மெழுகு சிலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கோலாச்சிய இயக்குநர் மகேந்திரன் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அம் மெழுகு சிலையுடன் செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்வோரில் சிலருக்கு சீதக்காதி படம் முதல் நாள் பார்க்க டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அய்யா-வுடன் செல்பி எடுக்க ஏராளமான சினிமா ரசிகர்கள் எக்ஸ்பிரச் அவென்யூ-வுக்கு படையெடுக்கிறார்கள்.