September 20, 2021

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வி! அச்சுதானந்தன் எச்சரிக்கை!

வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் அகற்றி, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாகாலாந்திலும் ஆட்சிஅமைக்க முயற்சித்து வருகிறது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி கோலோச்சி இருந்த நிலையில், பாஜக அங்கு திடீரென விஸ்ரூபெமெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிலும் திரிபுராவில் கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், அங்கு ஆட்சியை பாஜக கைப்பற்றியது பெரும் வியப்பாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் பாஜக எழுச்சி குறித்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “நாடு இப்போது மிகவும் ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து இருக்கிறது. அந்த கட்சி யும் இப்போது, பலவீனமடைந்து, சோர்ந்துவிட்டது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்ததும் மிகவும் ஆபத்தான கட்டமாகத்தான் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் முதலில் மேற்கு வங்காளத்தை இழந்தார்கள், இப்போது, 25 ஆண்டுகள் ஆண்ட திரிபுரா மாநிலத்தையும் இழந்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமடைந்துவிட்டதையே காட்டுகிறது.

சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து அரசியல் களத்தில் போரிடுவதற்கு இடது சாரி கட்சிகளும் இப்போது வலிமை இல்லாமல் இருக்கிறார்கள். ஆதலால், நாடு சந்திக்கும் சவால்களை உணர்ந்து, சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து போரிட மதச் சார்பற்ற சக்திகள், கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே அணியாக செயல்படுவது இந்த தருணத்தில் அவசியமாகும்.”இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.