January 29, 2023

மாறிடுமா உலகம்? மாற்றிடுமா வரலாற்றை? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பேசியுள்ள பிரதமர் மோடி இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பது காலத்திற்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகத்தின் பன்முகத்தன்மையானது ஒரு சில நாடுகளுக்கே சாதகமாக இருப்பது என்பது நவகாலனிய மேலாதிக்கத்தை ஏற்பது போன்றதொருத் தோற்றத்தைக் கொடுக்கிறது என்பதே பிரதமர் பேச்சின் சாராம்சம். இதே நாளில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்தியா ஆத்மநிர்பார் போன்றதொரு திட்டத்தை முன் வைத்து தனது சொந்த வளர்ச்சியை முன்னெடுக்க விழைகிறது என்றார்.

இது நாள்வரை மேலையச் சக்திகள் சலுகைகளையும், மானியங்களையும் பெற்று வருகின்றன. அவற்றிடமிருந்து நம்மால் நமது வளர்ச்சிக்கானத் தொழில்நுட்பங்களைப் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சீனா போன்று அடாவடியாகத் தொழில் நுட்பங்களைப் பெற முடிவ தில்லை. சீனாவில் உற்பத்தியைத் துவங்க வேண்டுமென்றால் முதலில் தொழில்நுட்பக் காப்புரிமையை ஒப்படைக்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு; மட்டுமின்றி சர்வதேச சட்டங்களை மதிக்கவும் வேண்டும். அதனால் சீனா போன்று நடந்து கொள்ள இயலாது. நமது நீண்டகாலத் தேவைகளுக்காக நமது உயர் ஆராய்ச்சி அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி நிகழ்ச்சியொன்றில் பேசும் போது நாம் பன்னாட்டு வர்த்தக அமைப்புக்களினால் பலன் பெறவில்லை. அவை இந்தியாவை தொழில் வளர்ச்சியற்றதொரு நிலையை நோக்கியே தள்ளின. சமீபத்தில் சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உட்பட பல நாடுகள் இணைந்து RCEP எனும் வர்த்தக அமைப்பை நிறுவியுள்ளன. இதில் இந்தியா இணைய வில்லை. அதில் இணைவது நமக்கு நன்மைத் தராது என்பது அரசின் நிலைப்பாடு. ஆனால் இந்தியா இணையும் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் எதிர்பார்க்கின்றன.

மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே மேக் இன் இந்தியா திட்டத்தைத் துவங்கினார். இதுவரையில் அத்திட்டத்திற்கு பேரளவு ஆதரவில்லை. இருப்பினும் அதற்கான முயற்சிகளும் இல்லாமல் போகவில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பல சாதகங்கள் இருப்பதை மறுக்க இயலாது. இந்தியாவே ஒரு சந்தைதான். இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரமும் சாத்தியமானதே. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பல மலிவு விலைப்பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படக்கூடியவைதான். சீனாவின் இறக்குமதியை உலக வர்த்தக அமைப்பின் கீழான உடன்படிக்கையால் நாம் தவிர்க்க இயலாது. இச்சிக்கலை ஒட்டியே பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் பேசியுள்ளனர்.

மேலும் பலப் பன்னாட்டு அமைப்புகளில் மாற்றங்கள் நீண்ட காலமாக செய்யப்படாமல் உள்ளன. எ.கா. ஐ.நாவின் பாதுகாப்பு அவையில் இந்தியா உட்பட ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன ஆதரித்தாலும் சீனா இதை விரும்பவில்லை. குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, இந்தியாவின் கூட்டணி தனக்கு எதிரானது என்று சீனா கருதுகிறது. இது மட்டுமின்றி, பன்னாட்டு செலாவணி நிதியம், உலக வங்கி போன்றவற்றிலும் இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் ஆத்மநிர்பார் திட்டத்தை முன்னெடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் பன்னாட்டு வர்த்தக உடன்படிக்கைகளை வளரும் நாடுகளுக்கு சாதகமாக மாற்றும் இந்தியா வின் முயற்சி ஏற்கப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லும். எனினும், இந்தியா போன்ற தொரு சந்தையை எந்தவொரு நாடும் இழக்க விரும்பாது. எனவே மாறிவரும் புவி அரசியலில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க இது போன்ற அதிரடிகளை விரும்பியோ, விரும்பாமலோ செய்யத்தான் வேண்டியுள்ளது.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு