October 19, 2021

செபி கண்காணிப்பில் தங்க நகை சேமிப்புத் திட்டங்கள்!

நகை நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி தங்க நகை சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றனவா என்பது குறித்து பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பாக, ‘தனுஷ்க்’ பிராண்டில் தங்க நகைகளை விற்பனை செய்யும், ‘டைட்டன்’ நிறுவனம், கீதாஞ்சலி ஜெம்ஸ், பி.சி., ஜுவல்லர்ஸ் உட்பட, 12 நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்ட கையேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றை செபி ஆராய்ந்து வருகிறது.

gold oct 20

சர்வதேச அளவிலான தங்கம் இறக்குமதியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கவும், இதன்மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் தங்க பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதுதவிர, தங்க டெபாசிட் தி்ட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். ஏனெனில், இந்திய மக்கள் தங்கத்தை முதலீடாக மட்டுமின்றி புனித உலோகமாகவும் கருதுவதால், ஆபரண தங்கமாக வாங்குவதையே விரும்புகின்றனர். ஆனால் திருமணம் தவிர, தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் தங்க ஆபரண விற்பனை அதிகரிக்கும். இவர்களில் நடுத்தர மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தங்க நகை சேமிப்பு திட்டங்களை அறிவிக்கின்றன. இதில் சிறிய கடைகள் துவங்கி பெரிய நிறுவனங்களில் கூட சேமிப்பு திட்டங்கள் உள்ளன

வாடிக்கையாளர்கள் 10 மாதம் தவணை செலுத்தி தள்ளுபடி சலுகைகள் பெறுவது, மாதம் 2,000 முதல் 6,000 வரை அந்தந்த மாதத்துக்கு ஏற்ப விருப்பப்படி தவணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் திட்டங்கள் உள்ளன. இவர்கள் சேரும் திட்டத்துக்கு ஏற்ப நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் குறைவாகவோ அல்லது முழுமையான தள்ளுபடியோ பெறலாம். இது தொடர்பாக ஏற்கெனவே விதிகள் அறிவிக்கப்பட்டன. இவை முறைப்படி கடைபிடிக்கப்படுகிறதா அல்லது விதிமீறல் உள்ளதாக என்று செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நகை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களின் நலனையும், வசதியையும் கருத்தில் கொண்டுதான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய திட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய விதிமுறைகளின்படிதான் திட்டங்கள் உள்ளன. நகைக்கடைகளில் வங்கி சாராத நிதிநிறுவனங்கள் போல நகை சேமிப்பு டெபாசிட் திட்டம் உள்ளதை கண்டறிந்து, 2014ம் ஆண்டு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இந்த சேமிப்பு திட்ட பலன் 12 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது, நிறுவனத்தின் நிகர மதிப்பில் 25 சதவீதத்துக்குள்தான் சேமிப்பு டெபாசிட் இருக்க வேண்டும்.

முன்பு சில திட்டங்களில் 17 சதவீதம் வரை பலன் கிடைத்தது. சில நகைக்கடைகளில் இத்திட்டங்கள் மூலம் 1,000 கோடி திரட்டப்பட்டது. இவற்றை ஒழுங்குபடுத்தி அமல்படுத்தப்பட்ட புதிய விதிகளைத்தான் நகைக்கடைகள் கடைப்பிடிக்கின்றன. விதிமீறல் எதுவும் நடைபெறுவதில்லை’’ என்றனர்.

செபி முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரும்பாலான நகை திட்டங்கள் வாடிக்கையாளர் மற்றும் நகைக்கடை இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம்போல் இருக்கின்றன. இவை செபியின் பார்வைக்கே வருவதில்லை. இதை கண்காணிப்பது அவசியம்’’ என்றார். தொழில்துறை நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘‘மாதம் நூறு ரூபாய் போன்ற குறைந்த பட்ச தவணை திட்டங்கள் அறிவிக்கும் சிறு நகைக்கடைகள் கண்காணிக்கப்பட வாய்ப்பு இல்லை’’ என்றனர்.