கொரோனா இளம் வயதினர் மூலம் அதிகமா பரவுது!- உலக சுகாதார அமைப்பு!
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவு ஏற்பட்டு பல்வேறு தரப்பினர் வேலையிழந்துள்ளனர். அண்மை யில்’ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கோவிட் -19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளித்தல்’ என்ற தலைப்பின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கரோனா தொற்றால் தொழிலாளர் சந்தையில் ஏராளமான இளைஞர்கள் வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் பரவும் விதம் ஆகியவை குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்றுவரை மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட வர்கள் மூலம் அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.