October 18, 2021

தேடல் வேட்டை தொடர்கிறது!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு விமானப்படைக்கு சொந்த மான ஏ.என்-32 ரக சரக்கு விமானம் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 6 விமான ஊழியர் கள், விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த 15 வீரர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 8 கட்டுமான பணியாளர்கள் என மொத்தம் 29 பேர் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் விமானப்படை தளத்தில் இருந்த ரேடாரில் இருந்து மறைந்தது.

flight jy 24

அந்த விமானம் சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனது. விமானம் மாயமான பிறகு சுமார் 25 நிமிடங்கள் கழித்துத்தான் அது காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போர் விமானங்களும், கப்பல்களும் அந்த விமானத்தை தேடும் பணிக்காக உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன. போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சமீப காலத்தில் நடைபெறும் மிகப்பெரிய தேடுதல் பணி இது ஆகும்.

நேற்று இரவு 8.30 மணி வரை விமானம் மாயமாகி 36 மணி நேரம் ஆன பிறகும் கூட அந்த விமானம் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் கடலில் விழுந்தால் அதன் சிதறிய பாகங்கள் கடலில் மிதப்பது வழக்கம். விமானம் விழுந்த பகுதியில் எண்ணெய் படலமும் மிதக்கும். ஆனால், நேற்று மாலை வரை சிதறிய பாகங்கள் எதுவும் கடலில் தென்படவில்லை. எண்ணெய் படலமும் காணப்படவில்லை.

மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் தமிழர். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் (வயது 37). தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்த இவர் போர்ட்பிளேர் நகரில் இந்திய கடலோர காவல் படையில் பணியாற்றி வருகிறார். முத்துகிருஷ்ணனுக்கு ஜெயசுமித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.விமானத்தில் பயணமான முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இந்நிலையில், ராணுவ அமைச்சர் பாரிக்கர் நேற்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்துக்கு வந்தார். அங்கு அவர், விமானம் மாயமானது பற்றியும், தேடுதல் நடவடிக்கைகள் குறித்தும் விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதலான விமானங்களை தேடுதல் பணிக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர், அவர் ‘பி-81’ ரக தொலை இலக்கு கடற்படை ரோந்து விமானத்தில் பறந்து தேடும் பணிகள் நடைபெற்று வருகிற பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் தாம்பரம் விமானப்படை தளத்துக்கு வந்தார். கடந்த 24 மணி நேரத்தில் எத்தகைய கடினமான சூழ்நிலையில், தேடும் பணிகள் நடந்து வருகின்றன என்பதை அதிகாரிகள் அவரிடம் எடுத்து கூறினர். தீவிரமான பருவமழை மேகங்களிடையே மாறிவரும் வானிலையில் தேடும் பணி சவாலாக அமைந்திருப்பது பற்றியும் அதிகாரிகள் அவருக்கு எடுத்து கூறினர்.அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கிற வரையில், எந்த வித தடையும் இன்றி விமானத்தை தேடும் பணியை தொடருமாறு அதிகாரிகளுக்கு மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார்.

மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அனைத்து தளபதிகளையும் அவர் அறிவுறுத்தினார்.அவரது ஆய்வின்போது, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அருப் ராஹா, விமானப்படை பணியாளர் தலைவர் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த், கொடி கட்டளை தலைமை அதிகாரி, கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்கள், கப்பல்கள் விவரம் வருமாறு:-

* இந்திய விமானப்படையின் மின்னொளி மற்றும் அகச்சிவப்பு உணரிகள் (சென்சார்கள்) பொருத்தப்பட்ட சி-130 ரக விமானங்கள்- 2

* இந்திய கடற்படைக்குரிய, செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட ‘பி-81’ ரக விமானம்

* டார்னியர் விமானங்கள்

* இந்திய கடற்படையின் 13 போர்க்கப்பல்கள்

* இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், வணிகக்கப்பல்கள்- 6

* இந்திய கடலோர காவல்படையின் நீர்மூழ்கிக்கப்பல்

இந்த தேடல் பணியில், இந்திய விமானப்படையின் தென்பிராந்திய தலைமை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியவற்றுடன் சென்னையில் உள்ள கடல்வழி மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் 24 மணி நேரமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.