தேள் கொடுக்கில் இருக்கும் விஷம் மூலம் மூட்டு வலிக்கு மருந்து! – கியூபா அசத்தல்!

சர்வதேச அளவில் எக்கச்சக்கமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். முன்னெல்லாம் இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  ஏற்பட்டது. ஆனால் சமீப காலமாக எல்லா வயதினருக்கும் பெரும்பாலும் மூட்டு வலி வருகிறது. இந்த  வலிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால்தான் மூட்டுவலி ஏற்படுவதாக முன்னரே தகவல்கள் வெளியான நிலையில் கியூபாவில் தயாரிக்கப்படும் பிரபல ஹோமியோபதி மருந்து விடாடாக்ஸ் (Vidatox) என்ற மருந்து மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணியாக உள்ளதாம். இந்த மருந்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அது தேள் கொடுக்கில் இருந்து எடுக்கப்படும் விஷத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதுதான்.

உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உங்களது உடலின் ஒட்டுமொத்த எடை யையும் தாங்கக்கூடிய சுமைதாங்கி அது. உங்களது உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானது. இதனால் மூட்டு வலி வந்தால் உடனடி நிவாரணம் தேடி அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் கியூபாவில் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கும் லாபியோஃபாம் (Labiofam) என்ற நிறுவனம் தான் விடாடாக்ஸ் மருந்தை தயாரித்து வருகிறது. அதற்காக பல ஆண்டுகளாக கரீபியன் பகுதிகளில் காணப்படும் நீல தேளின் கொடுக்கில் இருந்து விஷத்தை சேகரித்து வருகிறது.

இப்படி தேளின் விஷம் சிறந்த வலி நிவாரணியாக இருப்பது கியூபாவில் ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லையாம். கியூபாவை சேர்ந்த 78 வயதான விவசாயி பெபி கசானாஸ் மாதம் ஒரு முறை நீல தேளை தேடி கண்டுபிடித்து தனக்கு மூட்டு வலி இருக்கும் இடத்தில் கொட்ட வைத்துக் கொள்கிறார். ’இந்த தேளின் விஷம்தான் என் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. தேள் கொட்டும் போது வலித்தாலும் சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும். அத்தோடு என் மூட்டு வலியும் முழுவதுமாக நீங்கிவிடும்’ என பெபி கசானாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நீல தேளின் அறிவியல் பெயர் ரோபாலுருஸ் ஜுன்சியஸ் (Rhopalurus junceus) என்பதாகும். இந்த தேளின் விஷத்திற்கு சதை மற்றும் மூட்டு அழற்சியை குணப்படுத்தும் திறன் உள்ளது. வலி நிவாரணமாகவும் செயல்படுகிறது என்று கியூபா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த தேளின் விஷத்திற்கு சில புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தி அதை நிரூபணம் செய்ய வேண்டும் என்று சில புற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்

கியூபாவின் லாபியோஃபாம் நிறுவனத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விடாடாக்ஸ் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கியூபாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மருந்து மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது 15 நாடுகளில் விடாடாக்ஸ் விற்கப்படுகிறது.

விடாடாக்ஸ் மருந்தின் விற்பனை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த மருந்தை சீனாவில் விற்பனை செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லாபியோஃபாம் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஆல்பெர்டோ டெல்காடோ தெரிவித்தார். .

விடாடாக்ஸ் மருந்தின் வீரியம் குறையாமல் இருக்க தேள்களை பண்ணையில் வளர்க்காமல் காடுகள் அல்லது நிலங்களில் இருந்து தேடி பிடிக்கிறார்கள். சுதந்திரமாக வளரும் தேள்களின் விஷம் தான் வீரியமிக்கதாக உள்ளது என லாபியோஃபாம் நிறுவனம் கூறுகிறது.

இதற்காக தங்கள் பண்ணையில் சுமார் 6000 தேள்களை லாபியோஃபாம் நிறுவனம் பராமரித்து வருகிறது. அதன் வாலில் 18 வோல்ட்ஸ் மின்சாரத்தை செலுத்தி அதன் மூலம் விஷத்தை சேகரிக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் விஷத்தை சேகரித்த பின் அந்த தேள் மீண்டும் காட்டில் விடப்படுகிறது.

‘‘நீல தேள் விஷத்தின் மூலம் தயாரிக்கப்படும் விடாடாக்ஸ் மருந்து மனித உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது’’ என விடாடாக்ஸ் மருந்தை உருவாக்கியவரும் லாபியோஃபாம் சோதனை கூடத்தின் தலைவருமான மருத்துவர் ஃபாபியோ லினார்ஸ் கூறினார். விடாடாக்ஸ் மருந்தின் விலை ஒரு டாலருக்கும் குறைவு. ஆனால் கள்ள சந்தையில் இந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் இணையத்தளத்தில் இந்த மருந்தின் விலை 140 டாலராக உள்ளது.