December 4, 2021

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்!

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், கடந்த ஜூலை 27-இல் தீா்ப்பளித்தது. அதில்,‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசு 3 மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் தரப்பில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டைக்கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே இன்று நீதிபதி நாகேஸ்வரராவ் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அம்மனுக்களின் பேரில் நடப்பு கல்வியாண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய மெடிக்கல் கமிஷனும் இதே கருத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது