April 1, 2023

கிரிப்டோகரன்சி & பிட்காயின் வர்த்தகங்களை மேற்கொள்ளலாம்!- சுப்ரீம் கோர்ட் அனுமதி!

கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான் நிர்ணயிக்கிறது. இந்த கிரிப்டோ கரன்சி ஏதாவது சூதில் போய் முடியுமோ, இதைப் பயன்படுத்துவதை அங்கீகரித்தால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடுமோ என்று ரிசர்வ் வங்கி அஞ்சியதுடன் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கவும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கும் கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படுமோ என்றும் கவலைப்பட்டு அதை நம் நாட்டில பயன் படுத்த தடை விதித்திருந்தது. ஆனா ரிசர்வ் வங்கி விதிச்ச பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கான தடையை சுப்ரீம் கோர்ட் தற்போது நீக்கி விட்டது. இதை ஒட்டி ரிசர்வ் வங்கி போட்டிருந்த தடை ஆணையை ரத்து செய்து பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் என்றும் வங்கிகளும் கிரிப்டோகரன்சி மூலம் பரிவர்த்தனைகளை செய்யவும் அனுமதி அளிச்சிடுச்சு

தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய வாழ்க்கை முறையில் பல முதலீட்டுத் திட்டங்கள் உருவாகி வருகிறது, அதில் மிக முக்கியமான ஒன்று கிரிப்டோகரன்சி. வயது வித்தி யாசம் இல்லாமல் படித்துப் பட்டம் பெற்ற பல கோடி மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். ஆனால் உலகம் முழுவதிலும் இதற்குத் தடை விதிக்கும் நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யில் முதலீடு செய்யத் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களும் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்ய எவ்விதமான உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 2018-ம் ஆண்டு ஆர்.பி.ஐ விதித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசி யேஷன் ஆப் இந்தியா அமைப்பு,  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‘பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டவில்லை. ரிசர்வ் வங்கி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கிகளை பண மோசடி, தீவிரவாதத்துக்கு நிதி போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில், நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் மற்றும் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிப்டோகரன்சி குறித்த ஆர்பிஐயின் 2018ம் ஆண்டு சுற்றறிக்கை சரியான காரணமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.ரிசர்வ் வங்கியின் தடை ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் என்றும் வங்கிகளும் கிரிப்டோகரன்சி மூலம் பரிவர்த்தனைகளை செய்யவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.